Published:Updated:

கட்டாந்தரையைக் கழனியாக்கிய உம்பளச்சேரி மாடுகள்!

மாட்டு வண்டியுடன் சிவா
பிரீமியம் ஸ்டோரி
மாட்டு வண்டியுடன் சிவா

கால்நடை

கட்டாந்தரையைக் கழனியாக்கிய உம்பளச்சேரி மாடுகள்!

கால்நடை

Published:Updated:
மாட்டு வண்டியுடன் சிவா
பிரீமியம் ஸ்டோரி
மாட்டு வண்டியுடன் சிவா

ம்பளச்சேரி, மணப்பாறை, காங்கேயம் உள்ளிட்ட நம்முடைய பாரம்பர்ய மாடுகள், தமிழ்நாட்டின் பெருமித அடையாளம் மட்டுமல்ல, தமிழர்களின் குடும்ப உறவுகளாகவும் திகழ்ந்தன. காரணம், பால் கொடுத்து, உழவு செய்து, பாரம் இழுத்து, நிலத்துக்குச் சத்தான எருவும் கொடுத்து விவசாயம் செழித்தோங்க கடுமையாக உழைத்தன. இதனால் இடுபொருளுக்காகப் பைசா செலவு இல்லாமல் நடந்தது அன்றைய விவசாயம். மாடுகளின் கழிவுகள், சத்துகளை வாரி வழங்கியதால், நிலத்தில் வளம் மிகுந்து, பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்தன. நம் மண்ணின் நாட்டு மாடுகள், இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்பத் தாக்குப் பிடித்து வளரக்கூடிய திறன்மிக்கவை. இதனால் மருத்துவச் செலவின்றி, திடகாத்திரமாக வளர்ந்தன. இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்திருந்தும்கூட, காலப்போக்கில், அதிக பாலுக்காகக் கலப்பின மாடுகளை வளர்க்கத் தொடங்கினார்கள் நம் விவசாயிகள்.

கலப்பின மாடுகளுக்குத் தீவனச் செலவு அதிகமானது. இங்குள்ள தட்ப வெப்பநிலை சவாலாக இருப்பதால், மருத்துவச் செலவுகள் ஏற்பட்டன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாடு வளர்ப்பதையே கைவிட்டார்கள். இந்நிலையில்தான், நம்முடைய நாட்டு மாடுகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பினார்கள். பசுமை விகடனும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் நாட்டு மாடுகளை மீட்டெடுக்கும் முயற்சிகள் வேகமெடுக்கத் தொடங்கின.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும் விவசாயியுமான சிவா, உம்பளச்சேரி மாடுகளை வளர்த்து வருகிறார். ஒருகாலத்தில் விவசாயிகளிடம் பெரும்பாலும் மாட்டு வண்டிகள்தான் இருக்கும். விளைபொருள், எரு என விவசாயம் சம்பந்தமான அனைத்து வேலைகளுக்கும் அதைத்தான் பயன்படுத்துவார் கள். நாளடைவில் டிராக்டர் போன்ற வாகனங் களின் வருகையால், மாட்டு வண்டிகள் வழக்கொழிந்தன. இந்நிலையில், சிவா தனது பண்ணையில் மாட்டு வண்டியைப் பயன்படுத்தி வருகிறார். இது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உம்பளச்சேரி மாடுகளுடன்
உம்பளச்சேரி மாடுகளுடன்

பட்டுக்கோட்டை அருகே உள்ள தெற்கு கோட்டை கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குச் சென்றோம். காளை மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் எருவை நிரப்பிக்கொண்டு, நிலத்தில் வலம் வந்துகொண்டிருந்த சிவா மிகுந்த உற்சாகத்தோடு பேசத்தொடங் கினார். ‘‘விவசாய வேலைகளுக்கு முடிஞ்சவரைக்கும் இந்த மாட்டு வண்டியைத்தான் பயன் படுத்துறேன். விதைநெல் கொண்டு வர, எருவை ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு போக, அறுவடை செய்ற நெல்லை வீட்டுக்குக் கொண்டு போக இப்படிப் பல விதங்கள்ல இது ஒத்தாசையா இருக்கு. சில சமயங்கள்ல சொந்த வேலையா, பாப்பாநாடு, பட்டுக்கோட்டைக்குக்கூட, இந்த வண்டியிலேயே போறதுண்டு. உம்பளச்சேரி காளை மாடுகள் உழைப்புக்கு அஞ்சாது.

டிராக்டர் உள்ளிட்ட வாகனங் களை நிலத்துல பயன்படுத்துறதால நிலம் இறுகிப் போறது மட்டு மல்லாம, மண்ணுல இருக்கிற நுண்ணுயிர்களும் அழிஞ்சிப் போகுது. ‘நிலத்தில் நாட்டு மாடுகள் அதிர ஓடினால், முதிர விளையும்’னு கிராமப்புறங்கள்ல ஒரு பழமொழி உண்டு. ‘நாட்டு மாடுகளோட கொம்புகள் ஆன்டெனா மாதிரி’னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. ‘வளிமண்டலத்துல உள்ள நன்மை செய்யும் தனிமங்களை உட்கிரகிச்சு, கால்களோட குளம்பு வழியா நிலத்துக்குள்ளாற அனுப்பும்’னு சொல்றாங்க. நாட்டு மாடுகளோட நடமாட்டம் இருந்தாலே, நிலத்துல காத்தோட்டம் அதிகரிக்கும். நுண்ணுயிர்களும் பெருகி மண் வளமாகும். உம்பளச்சேரி மாடுகளோட சாணம், சிறுநீர்ல மட்டுமல்ல, இதோட கால் குளம்புலயும்கூட மகத்துவம் நிறைஞ்சிருக்கு. உழவுக்கும் முடிஞ்சவரைக்கும் இதைப் பயன்படுத்துறேன்’’ என நெகிழ்ச்சியோடு பேசியவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

உம்பளச்சேரி மாடு
உம்பளச்சேரி மாடு

‘‘எங்க தாத்தா விவசாயி. எங்க அப்பா பள்ளித் தலைமை ஆசிரியர். இருந்தாலும் நாங்க தொடர்ந்து விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்தோம். எங்க குடும்ப நிலம் 15 ஏக்கர். பல வருஷமா, ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். இதுக்கிடையில நான் சட்டக்கல்லூரியில படிச்சு, வழக்கறிஞர் பணியில இறங்கிட்டேன். நம்மாழ்வார் ஏற்படுத்தின தாக்கத்துனால, உம்பளச்சேரி மாடுகள் வளர்ப்புலயும் இயற்கை விவசாயத் துலயும் எனக்கு ஆர்வம் அதிகமானது.

2007-ம் வருஷம் இந்த நிலத்தை வாங்கினேன். இதோட மொத்த பரப்பு 25 ஏக்கர். புல், பூண்டுகூட முளைக்காம, இறுகிக் கிடந்த நிலம். எந்தப் பயிருமே விளைவிக்க முடியாததால பல வருஷமா சும்மாவே கிடந்து, உடைமுள் காடா கிடந்துச்சு. சவால் நிறைஞ்ச இந்த நிலத்தை வாங்கினேன். மண் வெட்டியால வெட்டினா, குதிச்சிக்கிட்டு திரும்ப எழும். அந்தளவுக்குப் பாறை மாதிரி இறுகிக்கிடந்த நிலத்துல, இப்ப எந்தளவுக்கு நெற்பயிர்கள் செழிப்பா வளர்ந்து நிக்குது பாருங்க. இதைப் பார்த்து இந்தப் பகுதி மக்கள் எல்லாரும் ஆச்சர்யப்படுறாங்க.

கட்டாந்தரையா கிடந்த நிலம், உம்பளச்சேரி மாடுகளாலதான், இந்தளவுக்கு உயிருள்ள நிலமா மாறியிருக்கு. ஆரம்பத்துல 5 மாடுகள் வாங்கி மூணு ஏக்கர்ல மட்டும் சாகுபடியைத் தொடங்கினேன். மாடுகளோட எண்ணிக்கையைப் பெருக்குறதுக்காக, வெளியில எங்கே உம்பளச்சேரி மாடுகள் கிடைச்சாலும் விலைக்கு வாங்கிக்கிட்டே இருந்தேன்.

இதுக்கிடையில நான் வளர்த்துக்கிட்டு இருந்த மாடுகளும் கன்னு போட்டுக்கிட்டு இருந்துச்சு. அடுத்த சில வருஷங்கள்லயே 40 மாடுகளா பெருகுச்சு. பகல் நேரங்கள்ல மேய்ச்சலுக்குப் போயிட்டு வந்த பிறகு, மத்த நேரங்கள்ல நிலத்துல பயிர் இல்லாத காலங்கள்ல, பாரம்பர்ய முறையில, மாடுகளை வைத்துக் கிடை போடுவோம். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை இடத்தை மாத்திக் கிட்டே இருப்போம். மாடுகளோட கழிவுகள்ல கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்குறதா சொல்றாங்க. அந்த நுண்ணுயிர் களால மண்ணு நல்லா வளமாகிப் பொல பொலப்பாக மாற ஆரம்பிச்சது. இப்ப 20 ஏக்கர்ல ஒரு போகம் மட்டும் நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன்’’ என்று மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கியது பற்றிப் பேசியவர் தொடர்ந்தார்.

உம்பளச்சேரி மாட்டுப் பால் மருத்துவக் குணம் நிறைந்தது. ஒரு பசுங்கன்று வளர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு பருவத்துக்கு வரும். பிறகு சினைப் பிடிக்கும்.

“விதைநெல்ல பஞ்சகவ்யாவுல விதைநேர்த்தி செஞ்சு விதைக்குறது, விளைஞ்ச பிறகு அறுக்குறது, அவ்வளவுதான் வேலை. வேற எந்தப் பராமரிப்பும் செய்றதில்லை. களைகூட எடுக்குறதில்லை. நவீன ஒட்டு ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஏக்கருக்கு 20 மூட்டை மகசூல் கிடைக்குது. இது குறைவான மகசூல்தான். இருந்தாலும் செலவுகள் அதிகம் இல்லாததால, இதுவே எனக்கு நிறைவா இருக்கு. ஒரு மூட்டை நெல் 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஏக்கருக்கு 30,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. விதைநெல், உழவுக்கூலி, அறுவடை செலவுகள் போக, ஏக்கருக்கு 22,000 ரூபாய் லாபம் கிடைக்குது. 20 ஏக்கர் நெல் சாகுபடி மூலம், 4,40,000 ரூபாய் லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. 20 ஏக்கர்ல நெற்பயிர்கள் இருக்கும்போது, சும்மா இருக்குற மீதி 5 ஏக்கர்ல, மாடுகளைக் கிடை போடுவோம். சம்பா அறுவடை முடிஞ்ச பிறகு, தை மாசம் கடைசியில இருந்து, ஆவணி வரைக்கும் இந்த 20 ஏக்கர்ல கிடை போடுவோம்’’ என்றவர் வண்டியிலிருந்து மாடுகளை அவிழ்த்துத் தனியாகக் கட்டி விட்டுத் தொடர்ந்தார்.

‘‘குடும்பத்துல ஏற்பட்ட சில எதிர்பாராத சூழ்நிலையினால, எங்க பண்ணையில நேரடியா 30 மாடுகளையும் வளர்க்க முடியல. 10 மாடுகளை மட்டும் இங்க வெச்சுக்கிட்டு, மீதி மாடுகளை நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கட்டுப்பாட்டுல விட்டு வெச்சிருக்கோம். உம்பளச்சேரி மாடுகளுக்குத் தீவனச் செலவே கிடையாது. மேய்ச்சல் மட்டுமே போதும். பசு மாடு தினமும் ஒன்றரை லிட்டர் பால் கொடுக்கும். அதை அவங்க பயன்படுத்திக்குவாங்க. கழிவுகளையும் அவங்க நிலத்துக்கே உரமாகப் பயன் படுத்திக்குறாங்க. மாடுகள் போடக்கூடிய கன்றுகளை மட்டும் எங்ககிட்ட கொடுத்துடு வாங்க.

காளை கன்றுக்குட்டிகளா இருந்தா, 3 வயசு வரைக்கும் வளர்த்து, ஒரு ஜோடி 50,000 ரூபாய்னு விற்பனை செஞ்சிடுவோம். பசுங்கன்று, 2-3 வருஷம் வளர்த்து, ஒரு பசு 20,000 ரூபாய்னு விற்பனை செய்றோம். பசு மாடு விற்பனையில நான் பெருசா ஆர்வம் காட்டுறதில்ல. நண்பர்கள், உறவினர்கள்கிட்ட கொடுக்குறதுலதான் ஆர்வமா இருக்கேன். இப்ப என்னோட பண்ணையில மூணு ஜோடி காளை மாடுகள், ஒரு பொலி காளை, 2 பசு மாடு, ஒரு கன்றுக்குட்டி இருக்கு. என்னோட மாடுகளுக்குக் கொட்டகையே அமைக்கல. பனியா இருந்தாலும், மழையா இருந்தாலும் திறந்தவெளியிலதான் கிடக்கும். ஆனாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் திடகாத்திரமா, கம்பீரமா இருக்கு பாருங்க. தொடர்ச்சியா கனமழை பெய்ஞ்சா மட்டும், கம்பு நட்டுப் படுதா கட்டுவோம். வெயில் காலத்துலயும் வெட்டவெளியிலதான் கிடக்கும். கனமழை காலங்கள்ல மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாத நாள்கள்ல மட்டும், வைக்கோல் போடுவோம். வரப்பு ஓரங்கள்ல தீவனச் சோளம் பயிர் பண்ணி, அதையும் பயன்படுத்திக்குவோம். என்னோட மாடு களுக்கு அடர்தீவனச் செலவே கிடையாது. உம்பளச்சேரி மாட்டுப் பால் மருத்துவ குணம் நிறைந்தது. ஒரு பசுங்கன்று வளர்ந்து 3 ஆண்டு களுக்குப் பிறகு, பருவத்துக்கு வரும். பிறகு சினைப் பிடிக்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘உழவுக்குப் பயன்படுத்தக்கூடிய உம்பளச்சேரி காளை மாடுகள், நிலத்துல எவ்வளவுதான் சேறு இருந்தாலும், கால்களை எளிதா வெளியில எடுத்து வச்சு, உழவு ஓட்டிடும். காலையில 7 மணியில இருந்து சாயந்தரம் மூணு மணிக்குள்ளாற, முக்கால் ஏக்கர்ல இருந்து ஒரு ஏக்கர் வரைக்கும் உழவு ஓட்டிடலாம். ‘உம்பளச்சேரி மாட்டுக்குக் கிழம் இல்லை’னு ஒரு பழமொழி சொல்வாங்க. ஒரு பசு மாடு குறைந்தபட்சம் 7 ஈத்துகள் வரைக்கும் கன்னு ஈனும். உலகத்திலேயே உம்பளச்சேரி காளை மாடுகளுக்குத்தான் இழுவைத்திறனும் அதிகம்’’ என்றார் பெருமையாக. அவருக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு, சிவா, செல்போன்: 97885 77445

மாட்டு வண்டி
மாட்டு வண்டி

மாடுகளை அவிழ்க்காமல் வண்டியில் உள்ள பாரத்தைக் கீழே இறக்கலாம்!

வழக்கமாக மாட்டு வண்டிகளில் மாடுகளை அவிழ்த்து, நுகத்தடியை மேலே தூக்கித்தான் பாரங்களைக் கீழே இறக்குவார்கள். ஆனால், சிவா உருவாக்கியுள்ள வண்டியில் மாடுகளை அவிழ்க்க வேண்டியதில்லை. மாடுகள் கட்டப்பட்ட நுகத்தடியையும் வண்டியையும் மட்டும் தனியாகக் கழற்றிவிட்டு, சக்கரத்துக்கு மேலே படுக்கை பலகையை மேலே தூக்கிப் பொருள்களைக் கீழே சரித்துவிடச் செய்யலாம்.

மாட்டு வண்டி
மாட்டு வண்டி

இது தொடர்பாகப் பேசிய சிவா, ‘‘சக்கரத்தோடு இணைக்கப்பட்டுள்ள தெப்பைக்கட்டையையும், அதன் மேலே உள்ள படுக்கை பலகையை நிரந்தரமாக இணைப்பதற்குப் பதிலாக, தெப்பக்கட்டையில் ஒரு நீளமான இரும்புக் கம்பியை அமைத்து, அதில் கதவுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய நாதாங்கியைப் பொருத்தியிருக்கிறேன். அதன் மீது படுக்கை பலகையுடன் கூடிய வண்டியின் மேற்பகுதியை இணைத்துள்ளேன். இந்தத் தொழில்நுட்பத்தால்தான் மாடுகளை அவிழ்க்காமல், நுகத்தடியை மட்டும் கழற்றிவிட்டு, வண்டியை மேலே தூக்கி, எரு உள்ளிட்டவற்றை நிலத்தில் கொட்ட முடிகிறது” என்கிறார்.

உம்பளச்சேரி மாடுகள்
உம்பளச்சேரி மாடுகள்

உம்பளச்சேரி மாடுகளின் அடையாளங்கள்

உம்பளச்சேரி மாடுகளில் ஆட்டுக்காரி, வெண்ணாம்பிள்ளை, கணபதியான் என வகைகள் உண்டு. ஆனால், இவற்றைத் துல்லியமாக அடையாளப்படுத்திச் சரியாக வகைப்படுத்தக்கூடியவர்கள் இன்று இல்லை.

நெத்தி வெள்ளை, வால் வெள்ளை, கால் வெள்ளை. இதுதான் இந்த மாடுகளுக்கான அடையாளம். அதாவது, நெற்றியில் வெள்ளை நிறத்தில் நட்சத்திர வடிவம் இருக்கும். வாலின் நுனிப்பகுதி முழுவதுமாகவோ, ஒரு பகுதி மட்டுமோ நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். கால்களின் குளம்புக்கு மேலே வெள்ளை நிறத்தில் வளைய அடையாளம் இருக்கும்.