Published:Updated:

காலத்தின் சவால்களை எதிர்த்து நிற்கும் பர்கூர் நாட்டுமாடுகள்; இவ்வளவு சிறப்புகள் கொண்டதா?

பர்கூர் இன மாடு
News
பர்கூர் இன மாடு

தமிழ்நாட்டின், குறிப்பாக காங்கேய மாட்டினத்துக்கு அடுத்தபடியாக பர்கூர் மாட்டினம் உள்நாட்டு கால்நடை இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. `செம்மரை' என பொதுவாக அழைக்கப்படுகிறது. வனங்களில் பராமரிக்கப்படுவதால் `பகுதி-வன மாட்டினம்', `மலைமாடு' எனவும் அழைக்கப்படுகிறது.

பருவநிலை மாற்றத்துக்கேற்ற பர்கூர் கால்நடை

விவசாயம் என்பது வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் இயற்கையின் சார்பில் செய்யப்படும் விவசாயத்தில் கால்நடைகளும் ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.76 சதவிகிதம் விவசாயத்தின் பங்களிப்பாக உள்ளது. அதில் 4.11 சதவிகிதம், கால்நடை துறையின் பங்களிப்பாக உள்ளது. அதில் பன்முகத்தன்மை கொண்ட 12 நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடாகப் பார்க்கப்படுகிறது.

கால்நடை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையானது, 535.78 மில்லியன் ஆக உள்ளது. மேலும் உலகின் மொத்த பால் உற்பத்தி நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து நம் தமிழகம், நாட்டின் கால்நடை எண்ணிக்கையில் 4.56 சதவிகிதத்தையும், மொத்த பால் உற்பத்தில் 4.39 சதவிகிதத்தையும் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, நாட்டின் இறைச்சி உற்பத்தியில் 7.88 சதவிகித பங்களிக்கிறது. தற்போது தமிழகத்தில் இரண்டு கோடி கால்நடைகளும், 16 லட்சம் உள்நாட்டு இனங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனைவர் இரா. திருமலைக்குமார்
முனைவர் இரா. திருமலைக்குமார்

இயந்திரமயமான இந்தக் காலகட்டத்தில் கால்நடை பராமரிப்பும் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்தியாவில் மூன்றில் இரு பங்கு கிராமப்புற மக்கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 8.8 சதவிகிகித மக்களுக்கு வேலைவாய்ப்பை, இவ்வேளாண்துறையும் கால்நடைத்துறையும் வழங்குகின்றன. வணிக நோக்கத்துடன் வளர்க்கப்படும் இந்த தட்ப வெட்ப கலப்பின மாடுகளால் உள்நாட்டு இனங்களின் வளர்ச்சி பெரிதளவு சரிந்துள்ளது. உலகில், சுமார் 800 உள்ளநாட்டு கால்நடை இனங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கண்டறிந்துள்ளது. தற்போதுவரை, இந்தியாவின் காலநிலைகளுக்கேற்ப ஏறத்தாழ 43 உள்நாட்டு கால்நடை வகைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வளர்க்கப்பட்டு வரும் உள்நாட்டு இனங்களில் இருந்து பெறப்படும் பால் இயற்கை சத்துகள் நிறைந்ததாகவும் அதிக தேவைகள் உள்ளதாகவும் கருதப்படுகிறது. ஆனால், அவற்றால் லாபம் பெரிதளவு கிடைப்பதில்லை என்ற காரணத்தால், கைவிடப்பட்ட மாட்டினங்களாக இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், அவை வணிக நோக்கத்துக்காக வளர்க்கப்படும் கால்நடைகளாக இல்லாமல், திருவிழாக்கள், பாரம்பர்ய நிகழ்வுகளில் பங்கேற்கும் காட்சிப்பொருளாக மட்டுமே பார்ப்பக்கபடுகிறது. இருப்பினும் அத்தகைய உள்நாட்டு இனங்களின் சிறப்பும் தேவையும் எள்ளளவும் குறையவில்லை. தனித்துவமான வேளாண் பணிகளுக்காகவும், ஊட்டச்சத்து மிகுந்த பால் உற்பத்திக்காகவும் இன்றும் ஆங்காங்கே வளர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் உள்நாட்டு வகை கால்நடைகளில் நம் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பர்கூர் மாடுகளைப் பற்றிக் காண்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழகமும் கால்நடை வளர்ப்பும்:

இவ்வுலகில் தனித்துவமான கால்நடை வளர்ப்பாலும் பராமரிப்பாலும் தமிழகம், பெயர்பெற்றதாக விளங்குகிறது. இதற்குச் சான்றாகக் கால்நடைகளை கடவுளாகப் போற்றுவதும், அவற்றை முன்னிறுத்தி ஜல்லிக்கட்டு போன்ற திருவிழாக்கள் நடைபெற்றதையும் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவருக்கு

மாடல்ல மற்றை யவை

இவ்வாறு, கால்நடைகளின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் பற்றித் திருவள்ளுவர் தனது திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.

பர்கூர்:

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் மலைக்கிராமங்களுள் ஒன்றான பர்கூர் என்பதே இக்கால்நடையின் பிறப்பிடமாகும். இது ஈரோடு நகரத்தில் இருந்து வடக்கே 70 கி.மீ தொலைவிலும், கர்நாடக மாநிலத்தின் கொள்ளேகால் என்ற இடத்தில் இருந்து தென்கிழக்கே 68 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி தென்மேற்கு பருவமழையின் போதும் வடகிழக்கு பருவ மழையின் போதும் குறிப்பிடத்தக்க மலைப்பொழிவை பெறுகிறது. மாசி மாத பிற்பகுதியில் இருந்து ஆனி மாத பிற்பகுதி வரை (பிப்ரவரி முதல் ஜூன்) வறண்ட காலம். அதாவது, கோடை காலமாகக் கூறப்படுகிறது. பர்கூர் கிராமமானது, அந்தியூர் தாலுகாவின் வன கோட்டத்தின் கீழ் வருகிறது. பர்கூர், ஏறத்தாழ 33 பழங்குடியின மலைக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதிவாழ் மக்கள், தங்களது குலதெய்வத்துக்கு பரகு (கன்னடத்தில்) எனப்படும் வரகு தானியங்களைத் தானமாக வழங்கி வந்துள்ளதால், இவ்வூர் பர்கூர் எனப் பெயர் பெற்றது.

க.ஜெய்சூரியன்
க.ஜெய்சூரியன்

பர்கூர் இனத்தின் தனித்துவம்:

பர்கூர் இன மாடானது, அதன் பிறப்பிடமான பர்கூர் என்ற கிராமத்தின் பெயரையே பெற்றுள்ளது. மேலும், இக்கிராமம் கடந்த தசாப்தங்களில் சந்தன மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. இவ்வினம், பர்கூர் இன மாடுகள், பழங்குடியினரால் பராமரிக்கப்பட்டு வரும் பழைமையான இனமாகும். இது சிறிய வலுவான மற்றும் குட்டையான, சிவப்பு நிற உடலையும், வெள்ளை நிறத் திட்டுக்கள் உடல் முழுவதும் கொண்டுள்ளதாக இருக்கும். இவ்வினத்தின் காளைமாடுகள் 300 கிலோ எடை (ஆண்) வரையிலும், பெண் அதாவது பசு/கறவை மாடுகள் 250 கிலோ எடை (பெண்) வரையிலும் இருக்கும். மேலும், இது சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ள காரணத்தால் கூட்டமாக அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாகும். கூர்மையான கொம்புகள், அடர் வனங்களில் பாதைகளைக் கண்டறிய சிறந்த மோப்ப சக்தி மற்றும் பயந்த சுபாவம் போன்ற குணாதசியங்களால் மற்ற மாட்டினத்தில் இருந்து இவ்வினம் வேறுபட்டு உள்ளது. அடர் வனங்களில் மேய்ச்சலுக்காக விடப்படுவதால் இயற்கையாகவே அதிக எச்சரிக்கை குணம் கொண்டதாகவும் மற்ற இனங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டதாகவும் திகழ்கிறது. பல்வேறு காலநிலைகளுக்கும் ஏற்ற இவ்வினம் பர்கூர் காடுகள், அந்தியூர் கிராமப்புறங்கள், கர்நாடகத்திலுள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டத்தின் கொளத்தூர் போன்ற இடங்களில் அதிகம் காணப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குணங்களும் பராமரிப்பும்:

தனது ஆயுட்காலமான 20 வருடத்தில், 8 முதல் 12 கன்றுகளை ஈனும் திறன் கொண்டதாகும். மற்ற உள்நாட்டு இனங்களைப் போலவே ஒரு பருவத்தில் 700 முதல் 800 லிட்டர் வரை பால் தரும் (நாள் ஒன்றுக்கு 1.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை). 9 மாத (270+/-5 நாள்கள்) கர்ப்ப காலமும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் இடைவெளியும் கொண்டுள்ளது. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ஒன்பது மாத கர்ப்பகாலம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதால் இதுவரை எந்த நோய்த் தாக்குதலும் இழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை. காலை முதல் அந்திப்பொழுது வரை அடர் வனப்பகுதிளில் வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்படும். வன மேய்ச்சலுக்கு பழக்கப்பட்டதால், மற்ற தீவனங்களின் அளவு மிகக்குறைவு. அதாவது, ஒரு நாளைக்கு பசுந்தீவனம் (15 - 20 கிலோ), உலர் தீவனம் (2 - 3 கிலோ), செறிவூட்டப்பட்ட தீவனம் (1 கிலோ) ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் மற்ற இனங்களை ஒப்பிடுகையில் பர்கூர் மாடுகளுக்கு அதிக பராமரிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

பர்கூர் இன மாடு
பர்கூர் இன மாடு

இனப்பெருக்கம்:

தமிழக கறவை மாடுகள் இனப்பெருக்க விதி 2019-ன் படி, உள்ளநாட்டு மாட்டினங்களின் கலப்பு செயல்முறைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வினத்துடன் மற்றொரு இனத்துடன் கலப்பு செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 20 கறவை மாடுகள் கொண்ட ஒரு கூட்டத்துக்கு 1 காளை மாடு என்ற விகிதத்தில் இனப்பெருக்கம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, அதிக எலும்பு அடர்த்தி, சுறுசுறுப்பு போன்ற தகுதிகளையுடைய காளைமாடுகள் இனப்பெருக்கத்துக்குத் தேர்வு செய்யப் படுகின்றன. மேலும், உள்ளூர் கால்நடை மருத்துவமனைகளில், அதே இனத்தைச் சேர்ந்த காளைமாடுகளின் உயிர் அணுக்களைக் கொண்டு செயற்கை கருவூட்டலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாரம்பரிய வழக்கங்கள்:

தமிழ்நாட்டின், குறிப்பாக காங்கேய மாட்டினதிற்கு அடுத்தபடியாக பர்கூர் மாட்டினம் உள்நாட்டு கால்நடை இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. `செம்மரை' என பொதுவாக அழைக்கப்படுகிறது. வனங்களில் பராமரிக்கப்படுவதால் `பகுதி-வன மாட்டினம்', `மலைமாடு' எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் மேய்ச்சல் மற்ற இதர விவசாய பணிகளை ஒன்றியே அமையப்பெறுகிறது. அதாவது, தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கும் நாள்கள் முதல் அதன் முடிவு வரை மேய்ச்சலுக்காக அடர் வனப்பகுதிகளுக்கு மாடுகளை ஓட்டிச் செல்வதும் கோடை காலம் முழுவதும் விவசாய நிலங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதும் வழக்கமாகும்.

சந்தைப்படுத்துதல் மற்றும் இதர பயன்கள்:

பெருநகரங்களை விட்டு தொலைவில் உள்ள காரணத்தால் சந்தை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் சற்றுக் குறைவு என்றே கூறலாம். அத்தோடு போதுமான விழிப்புணர்வு மற்றும் கிடங்கு வசதிகள் இல்லாத காரணத்தாலும் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் திறன் மிகவும் குறைவாகும். ஆயினும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கும், பர்கூர் இன மாட்டுப்பாலுக்கென தனித்தேவையும், நன்மதிப்பும் உள்ளது.

மாட்டு கொட்டாய்
மாட்டு கொட்டாய்

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாமரைக்கரையில் செயல்படும் சுரபி (Surabi- NGO) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், உள்ளூர் வளர்ப்பாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து, சந்தைப்படுத்தி வருகிறது. மேலும், இன்றளவும் அந்தியூரில் சனிக்கிழமைகளில் நடைபெறும் வாராந்திர கால்நடை சந்தையில் மாடுகளை விற்கவும் வாங்குவதற்கும் வசதி உள்ளது. அதுமட்டுமன்றி, மன்னர் திப்பு சுல்தான் காலம் தொட்டு, ஆடி மாதம் நடைபெறும் உள்ளூர் வருடாந்தர குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழாவின்போது அரங்கேறும் குதிரை மற்றும் மாட்டு சந்தையில் விற்கவும் மற்றும் கண்காட்சி படுத்தபட்டும் வருகின்றன. பால் உற்பத்திக்கு அடுத்தபடியாக, பல விவசாய பணிகளுக்கும் இவ்வின மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. சாணம் மற்றும் கோமியம் போன்றவை, இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களாகப் பயன்படுத்தி ராகி, கம்பு மற்றும் பருப்பு வகைகள் போன்ற விளைபொருள்கள் பர்கூர் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன.

பர்கூர் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம்:

உள்நாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாக்க நம் தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் பர்கூர் இன மாடுகளுக்காக பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சிதான் பர்கூர் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம். இது, நம் தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகத்தின் கீழ் பர்கூரில் இயங்கி வருகிறது. கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட வறட்சி, இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மை போன்ற காரணங்களால் பர்கூர் இனம் தனது எண்ணிக்கையில் சரிவை கண்டது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

கடந்த 19-வது கால்நடை கணக்கெடுப்பின்போது, இந்த இன மாட்டின் எண்ணிக்கை 6,000-க்கும் கீழ் குறைந்தது. இதைக் கருத்தில் கொண்டு, அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்ட பர்கூர் இனத்தைப் பாதுக்காக்க ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பின் முழுமுயற்சியால், 20-வது கால்நடை கணக்கெடுப்பின்போது இவ்வினத்தின் எண்ணிக்கை 12,000 என இருமடங்காக உயர்ந்துள்ளது.

இயற்கையாகே உள்நாட்டு இனங்களுக்கு கால சூழல்நிலைகளுக்கு ஏற்றாற்போல் தன்னை அமைத்துக் கொள்ளும் திறன் இருந்தாலும், மனிதன் ஏற்படுத்தும் மாற்றங்களால் அவை எதிர்கொள்ளும் பிரச்னைகலுக்குத் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான உள்ளநாட்டு இனங்களைப் பாதுகாக்க மத்திய அரசு ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (Rashtriya Gokul Mission) போன்ற பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகின்றது. இவ்வாறான சிறப்புகளைக் கொண்ட பல்வேறு காலநிலைக்கேற்ற இனங்கள் என்பது மிகவும் அரிது. ஆகவே, உள்ளூர் மக்கள், வளர்ப்பாளர்கள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனகள் உடன் நாமும் பல தரப்பில் இருந்து முனைப்புடன் செயல்பட்டால் இது போன்ற சிறப்புமிக்க பல்வேறு காலநிலைக்கேற்ற நம் உள்ளநாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாக்க இயலும். அவ்வாறு பாதுகாக்கும்போது நமது வருங்கால தலைமுறைகளுக்கு விவசாய முறைகளையும் கால்நடைகளையும் தன்னிறைவுடன் எடுத்துச் செல்ல முடியும்.

- க.ஜெய்சூரியன், முனைவர் இரா.திருமலைக்குமார்

VIT SCHOOL OF AGRICULTURAL INNOVATIONS AND ADVANCED LEARNING