Published:Updated:

வாய்க்கால் வெட்டிய தொழிலாளர்களுக்கு சிலை வைத்த காமராஜர்; சுவாரஸ்ய நிகழ்வும், தற்போதைய சோக நிலையும்!

தொழிலாளர்கள் சிலைகள்
தொழிலாளர்கள் சிலைகள் ( படம்: விகடன் / நா.ராஜமுருகன் )

``தொழிலாளிகளுக்கு சிறப்பு செய்த காமராஜரின் முயற்சி, வரலாறாக நிலைக்கணும். அதற்காக, அந்த இரண்டு சிலைகளையும் புனரமைக்கணும்" என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர், மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் ஒரு கிளை வாய்க்காலை வெட்டியவர்களில் சிறப்பாகப் பணியாற்றிய 12 கூலித்தொழிலாளிகளுக்கு, அந்த வாய்க்கால் கரையோரம் அப்போதைய முதல்வர் காமராஜர் சிலை அமைத்தார். அவர்களின் பெயர்களையும், அந்த சிலைக்கு கீழ் கல்வெட்டில் பொறித்தார். ஆனால், அதைப் பராமரிக்காததால், 10 சிலைகள் உடைந்து உருத்தெரியாமல் போய்விட்டன. இரண்டு சிலைகள் மட்டுமே சிதைந்த நிலையில் உள்ளன.

மாயனூர் காவிரி ஆறு
மாயனூர் காவிரி ஆறு
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

``தொழிலாளிகளுக்கு சிறப்பு செய்த காமராஜரின் முயற்சி, வரலாறாக நிலைக்கணும். அதற்காக, அந்த இரண்டு சிலைகளையும் புனரமைக்கணும்" என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

தமிழகத்தில், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் ஒரு பொற்காலம் இருந்தது என்றால், அது காமராஜர் ஆட்சிக்கட்டிலில் இருந்த காலத்தில்தான். தமிழகம் முழுக்க பெரிதும், சிறிதுமாக ஏகப்பட்ட அணைகள், ஆறுகள், பாசன வாய்க்கால்களை அவர் வெட்டினார். அப்படி, அவரது காலத்தில் வெட்டப்பட்டதுதான், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால். கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து தாயனூர் வரை இந்த வாய்க்கால் வெட்டப்பட்டது. 1956-ம் ஆண்டு இந்த பாசன வாய்க்கால் வெட்டும் பணியை, அப்போதைய முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்தார். வாய்க்காலை வெட்டி முடித்ததும், அங்கே முழு அர்ப்பணிப்போடு பணியாற்றிய 12 பணியாளர்களுக்கு, காமராஜர் சிலை அமைத்திருக்கிறார். இதுகுறித்து, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராமிடம் பேசினோம்.

மகாதானபுரம் ராஜாராம்
மகாதானபுரம் ராஜாராம்
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

``இங்குள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்ததும், காவிரியில் இருந்து இந்தப் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலை வெட்ட காமராஜர் உத்தரவிட்டார். அப்போது, நான் பொதுப்பணித் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வாய்க்கால் வெட்டும் பணி நடக்கும்போது, அங்கே காமராஜர் அடிக்கடி வருவார். மேற்பார்வையிட்டு, வாய்க்காலை சிறப்பாக வெட்ட ஆலோசனை வழங்குவார். பாதுகாப்பு, பந்தா என்று எதுவும் இல்லாமல் சாதாரணமாக வேலை செய்யும் ஆட்களோடு நின்று பேசுவார். மாயனூர் ரயில்வே கேட்டில் இறங்கி, வாய்க்கால் வெட்டும் பணி நடக்கும் இடத்துக்கு நடந்தே வருவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாய்க்கால் வெட்டும் தொழிலாளிகளின் குடும்பங்கள், குழந்தைகள் பற்றி விசாரிப்பார். `உங்களுக்கெல்லாம் சம்பளம் சரியாக வருகிறதா?' என்று கேட்பார். நான்கு முறை வாய்க்கால் வெட்டும் பணியைப் பார்வையிட நேரில் வந்தார். அதோடு, அப்போதைய தமிழக கவர்னர் விஷ்ணுராம், மேஸ்திரி வாய்க்கால் வெட்டும் பணியை நேரில் பார்வையிட வந்து, `முதல்வரின் கனவுத்திட்டம் இது. அதனால், வாய்க்கால் வெட்டும் பணியை விரைவாகவும் சிறப்பாகவும் செஞ்சு முடிங்க' என்று சொல்லிவிட்டுச் சென்றார். இப்படி, முதல்வரும் கவர்னரும் இந்த வாய்க்கால் வெட்டும் பணிக்காகத் தனிக்கவனம் செலுத்தினர்.

ஆண் தொழிலாளி சிலை
ஆண் தொழிலாளி சிலை
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

அப்போதே, இந்த வாய்க்காலை வெட்ட அதிக அளவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள், வெளியூர்களில் இருந்து கூலி ஆட்கள் என்று இயந்திர சக்தியும், மனித சக்தியும் இணைந்து வேலை செய்தன. உயரதிகாரிகள் இங்கேயே பழியாகக் கிடந்தார்கள். அப்படி, இந்த வாய்க்காலை முழுமையாக வெட்டி முடிக்க 8 வருடங்களுக்கும் மேல் ஆனது. இந்தப் பணியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பணியை முன்னின்று செய்த பொறியாளர், 12 பேரை காமராஜரிடம் அறிமுகப்படுத்தி, `இவர்கள் 12 பேரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு வேலை பார்த்தார்கள்' என்று அறிமுகப்படுத்தினார்.

அவர்களை காமராஜர் பாராட்டினார். அதோடு, அருகில் நின்ற ஸ்தபதியிடம், `இவங்க 12 பேருக்கும் இங்கேயே சிலை அமைச்சு வைங்க'னு சொன்னார். அதைக்கேட்டதும், அனைவரும் ஆச்சர்யமா போயிடுச்சு. ஆண்கள், பெண்கள் தலா ஆறு பேர்னு 12 பேர்களின் உருவத்தையும் தத்ரூபமாக சிலையா வடிச்சாங்க. அந்த சிலைகளைப் பார்த்து பாராட்டிய காமராஜர், அந்த சிலைகளை வாய்க்கால் கரையில் வைக்கச் சொன்னார். அதோடு, அந்த தொழிலாளிகளின் பெயர்களையும் அந்த சிலைகளுக்கு கீழ் கல்வெட்டில் பொறிக்கச் சொன்னார். ஆனால், காலப்போக்கில் அந்தச் சிலைகள் பராமரிப்பில்லாமல் சிதிலமடையத் தொடங்கின.

புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்
புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்
படம்: விகடன் / நா.ராஜமுருகன்
கருணாநிதியை முடக்கிய எம்.ஜி.ஆர்; காமராஜர் எடுத்த ஆயுதம்! - உறையவைத்த தமிழகத் தேர்தல் களங்கள்!

அவற்றில், 10 சிலைகள் உடைந்து, இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டன. இரண்டு சிலைகள் மட்டுமே இப்போது உள்ளன. மாயனூர் கதவணை சிறுவர் பூங்காவில், ஒரு பெண் நிற்பது போன்றும், ஒரு ஆண் குனிந்து கொண்டு வெட்டுவது போலவும் அந்த இரண்டு சிலைகள் உள்ளன. ஆனால், அந்தச் சிலைகளும் உடைந்து போய், சேதமாகி இருக்கின்றன. அதை சீரமைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. தமிழகத்தில் காமராஜர் காலத்தில்தான், ஏகப்பட்ட அணைகளும் நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டன.

வைகை, பவானி, அமராவதி, புள்ளம்பாடி என்று ஏகப்பட்ட அணைகளை வெட்டினார். ஆனால், எந்த இடத்திலும் அவருக்கு சிலை அமைக்கப்படவில்லை. ஆனால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலை வெட்டிய கூலித் தொழிலாளிகளுக்கு அவர் சிலை அமைத்தார். தமிழகத்தில் மட்டுமல்ல, எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே இதுபோல் எங்கும் நீர்நிலைகளை அமைக்கப் பணி செய்த தொழிலாளர்களுக்கு சிலை வைத்த வரலாறு இல்லை. பக்ராநங்கல் அணையை வெட்டி திறக்கச் சென்றபோது, அப்போதைய பிரதமர் நேரு, அதைக் கட்டிய மேஸ்திரியை வைத்து திறக்க வைத்தார். ஆனால், அவர்கூட தொழிலாளர்களுக்கு அங்கே சிலை வைக்கவில்லை.

பெண் தொழிலாளி சிலை
பெண் தொழிலாளி சிலை
படம்: விகடன் / நா.ராஜமுருகன்
மணக்குடி பாலத்துக்குப் பெயர்; காமராஜர் கேபினெட்டின் ஒரே பெண் அமைச்சர்! யார் இந்த லூர்தம்மாள் சைமன்?

ஆனால், காமராஜர் கரூர் மாவட்டத்தில் மட்டும், இப்படி தொழிலாளர்களுக்கு சிலை வைத்து கௌரவித்தார். அப்படி என்றால், அவர் நீர்மேலாண்மையை பெருக்க, எவ்வளவு ஆர்வம் காட்டினார் என்பது விளங்கும். ஆனால், அவர் வரலாறாக விட்டுச் சென்ற இந்தப் பணியாளர்களின் சிலைகளை சீரமைக்கணும். நீர் பங்கீட்டுத் துறையை புதிதாக அமைச்சரவையில் சேர்த்துள்ள இந்த அரசு, காமராஜர் அமைத்த இந்த வரலாற்றுச் சிறப்பை சீரமைத்து, போற்றிப் பாதுகாக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு