Published:Updated:

ஆர்தர் காட்டன்... கல்லணையில் பாடம் படித்தார் ஆந்திராவில் அணைக் கட்டினார்..!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

முதல் நாள் பெய்த மழையில் ஊரே நனைந்திருந்த ஒரு நன்னாளில், ஆந்திர மாநிலம், ராஜமுந்திரிக்குச் சென்றிருந்தேன். கோதா வரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ரயில் நிலையத் தைவிட்டு, வெளியில் வந்தால் தோளில் பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு, நிறைய பேர் ஊர்வலமாகச் சென்றனர். அதைப் பார்த்ததும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்று தெரிந்தது. கூட்டத்தில் சென்ற ஒருவரைப் பிடித்து, எனக்குத் தெரிந்த சுந்தர தெலுங்கில் ஊர்வலம் குறித்து விசாரித்தேன்.

‘‘ஆர்தரப்பா நினைவு நாள், பாபு’’ என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தில் மறைந்துவிட்டார். ‘யாரோ, தெலுங்கு தேச விவசாயப் போராளியாக இருப்பார்’ என்று நினைத்துக்கொண்டேன். என்னை அழைத்துச் செல்ல வர வேண்டிய நண்பர் வருவதற்கு இன்னும், இரண்டு மணி நேரம் இருந்தது. சும்மா இருக்கும் நேரம், இந்த ஊர்வலத்தின் பின்னால் செல்வோம் என்று சென்றேன். அது நேராக, கோதாவரி கரையிலிருந்த ஆர்தர் காட்டன் சிலைக்குச் சென்று முடிந்தது. அப்போதுதான் தெரிந்தது, அன்று சர்.ஆர்தர் காட்டன் (ஜூலை-24) நினைவு தினம் என்று.

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் விவசாயிகள் வந்த வண்ணம் இருந்தார்கள். சிலர் கோதாவரி நதிக்கரைக்குச் சென்று ஆர்தர் காட்டன் பெயரில் திதி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள், அந்த நண்பர் வந்துவிட்டார். ‘‘என்ன ஆச்சர்யமாகப் பார்க்கிறீர்கள்... ஆர்தர் காட்டன், எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் குடும்பத்தினருக்குக் குலதெய்வம் போல. இங்கே ஆர்தரப்பா, காட்டனப்பா என்று பெயர் வைப்பது வழக்கம். ஆர்தர் காட்டன் இந்தப் பகுதிக்கு வரும்போது, வானம் பார்த்த பூமி. கோதாவரி நதியில் தவளேஸ்வரம் அணையைக் கட்டினார். இதன் பிறகு, மூன்று போகமும் நெல் விளையும் பகுதியாக மாறியது. நெல் சாகுபடியில் போதுமான லாபம் கிடைக்கவில்லை என்பதால், மீன் வளர்ப்புக்கும், நர்சரி தொழிலுக்கும் பலர் மாறிவிட்டார்கள். இன்று இந்தியாவின் நர்சரி தொழிலுக்கு அடையாளமாக ‘கடியம்’ பகுதி உருவானதுக்கு மூலகாரணம் ஆர்தர் காட்டன்தான். ஆந்திரா முழுக்க 3,000 சிலைகளுக்கு மேல் ஆர்தர் காட்டனுக்கு உள்ளன. எங்கள் வீட்டிலும் சிலை வைத்து வழிபடுகிறோம். எங்கள் வீட்டிலும் சிறப்பு வழிபாடும் விருந்தும் ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்று சொல்லி, நூற்றுக்கணக்கான நர்சரிகள் உள்ள கடியம் பகுதிக்குக் காரில் அழைத்துச் சென்றார், அந்த நண்பர். இவர் வேறு யாருமல்ல, கடியம் நர்சரி தொழிலின் தந்தை என்று போற்றப்படும் ‘பல்லா’ வெங்கண்ணா (Palla Venkanna)வின் பேரன் வெங்கடேஷ். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வித விதமான செடி, கொடிகளுடன் நர்சரிகள் இருந்தன. இந்தியாவிலேயே குறைந்த விலையில் மரக்கன்றுகள் இங்குதான் கிடைக்கின்றன. நாட்டில் உள்ள அத்தனை நர்சரிக்காரர்களுக்கும் இங்கு வியாபாரத் தொடர்பு உள்ளது. தமிழர்கள் சினிமா நடிகர்களைப் பார்த்து உடை அணிவது, தலைமுடியை வெட்டிக்கொள்வதுபோல, தெலுங்கு மக்கள் சினிமா பாணியில் வீடு கட்டுவதைப் பழக்கமாக வைத்துள்ளார்கள். வழி நெடுக்கச் சினிமாவில் பார்ப்பதுபோல பிரமாண்ட வீடுகள் இருந்தன. இரண்டு நாள், கடியம் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, நர்சரிகள் குறித்து ‘விகடன் தீபாவளி’ மலருக்கு விரிவான கட்டுரை எழுதினேன். ஆனாலும், ஆர்தர் காட்டன் நிகழ்ச்சியும் அங்கு பார்த்த சிலைகளும் இன்றும் நினைவில் நின்று கொண்டிருக்கின்றன. காரணம், ஆர்தர் காட்டன், கோதாவரியில் அணைகட்ட அடித்தளமிட்டது நம்ம ஊர் கல்லணைதான். வாழ்நாள் முழுக்கத் தமிழ்நாட்டைப் பற்றித்தான் அவர் பேசி வந்துள்ளார்.

ஆர்தர் காட்டன் சிலை
ஆர்தர் காட்டன் சிலை

‘‘வண்டல் மண்ணுடன் இடைவிடாத போராட்டமாக உள்ளது. ஆற்றின் பல பகுதிகளில் தூர்வாரப்பட்டது. அதிக செலவில் நீண்ட கரைகள் கட்டப்பட்டன. ஆனாலும், எல்லா முயற்சிகளும், பலனற்றுப் போய்விட்டன. காவிரி வரும் காலத்தில் விவசாயத்துக்குப் பயன்படாது. இதற்கு பிரிட்டிஷ் அரசு செலவழிப்பது வீண்’’ என்று கேப்டன் ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அரசுக்கு அறிக்கை கொடுத்தார்.

இவர் சொல்லியதுபோல கல்லணை மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டுக் கிடந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளம் குன்றியது. இந்தச் சூழலில்தான் 1829-ம் ஆண்டுக் காவிரி பாசனப் பகுதி பொறியாளராக பிரிட்டிஷ் அரசால் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். ஒருவேளை இவர் இங்கு வராமல் போயிருந்தால் தஞ்சை டெல்டா இப்போது இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.

வழக்கமான அரசு ஊழியர்போல அறிக்கை அனுப்பாமல், களத்தில் இறங்கினார். உடனடியாக மணல் மூடி இருந்த கல்லணையில் சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போதுதான், கரிகால் சோழனால் கல்லணை எப்படிக் கட்டப்பெற்றுள்ளது என்பதை அறியும் ஆவல் அவருக்கு உண்டானது. ஒரு கோடைக்காலத்தில் 12 அடி ஆழத்துக்கு அணையைத் தோண்டிப் பார்த்தார். கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டார். இவற்றுக்கிடையே இணைத்துப் பிடித்துக்கொள்வதற்குக் கான்கிரிட் கலவை போன்று எதுவுமில்லை என்பதையும் அறிந்துகொண்டார்.

கல்லணை
கல்லணை

இப்போது கல்லணை இருக்கும் இடத்தில்தான் காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாக காவிரி ஆறு பிரிகிறது. இதில் இயல்பாகவே கொள்ளிடத்தில்தான் நீர் அதிகமாக பாயும். காவிரியில் பாயாது. கொள்ளிடத்தைவிட காவிரியின் பாசன பகுதி அதிகம் என்பதால், கொள்ளிடத்தில் பாயும் நீரைத் தடுத்து காவிரிக்கு திருப்ப நினைத்தான் காரிகாலன். இதற்காக கொள்ளிடம் பிரியும் இடத்தில் துல்லிய தொழில்நுட்ப அறிவுடன் கற்களை அடுக்கி, நீரோட்டத்தின் வேகத்தைத் தடுத்து காவிரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைத்தான். இதுதான் கல்லணை. அந்த இடத்தில் பின்னாளில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அமைப்புதான் தற்போது இருக்கும் கல்லணை. குறைந்த அளவு நீர் வரும்போது, கொள்ளிடத்தின் ஷட்டர்கள் மூடப்பட்டு, காவிரிக்கு நீர் பாயும். இதுவே பெருவெள்ளம் வரும்போது, கொள்ளிடத்தின் ஷட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, காவிரி பகுதிக்கு வெள்ளம் அதிகம் செல்லாமல் தடுக்கப்படும். இதுதான் கல்லணையின் அமைப்பு.

சரி ஏன், இந்த இடத்தில் கல்லணையைக் கட்ட வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் தேடும்போதுதான், அன்றைய தமிழர்களின் நீர் மேலாண்மையை அறிந்து ஆச்சர்யப்பட வைக்கிறது.

திருச்சிக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது. சற்று உயர்ந்த காவிரியும், தாழ்ந்த கொள்ளிடமும் மீண்டும் இணைய முயற்சிக்கும் ஓர் இடம். அந்த இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

காவிரி நீர் பெருகி வரும் காலங்களில் பெரும் உடைப்புகள் ஏற்பட்டுப் பாதிப்பை உருவாக்குவதோடு தாழ்வான பகுதியில் பாய்ந்து வீணாகக் கடலில் கலப்பதுதான் அன்றைய காவிரி சந்தித்த பிரச்னை. ஶ்ரீரங்கத்தின் கிழக்கே காவிரியின் வடகரையில்தான் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. அதில் பாயும் பெரும் வெள்ளமே கொள்ளிடத்தில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கவே கரிகாலன் அணை கட்ட முடிவு செய்தான். உடைப்பைத் தடுத்து, கல்லணையை எழுப்பினான். இதனால் வெள்ளம் பள்ளம் நோக்கிப் பாயும் வேகம் தடுக்கப்பட்டு நீர் காவிரியிலேயே பாய்ந்து சோழநாட்டை நெற்களஞ்சிமாக மாற்ற பயன்பட்டது. இப்போது ஏராளமான நீர் காவிரியில் வந்தால், கட்டப்பட்ட அணையின் மேல்மட்டத்தைத் தாண்டி வழிந்து கொள்ளிடத்தில் பாய்ந்து கடலில் கலந்தது. இதனால் டெல்டா பகுதிகள் வெள்ளக்காடாவது தடுக்கப்பட்டது. இப்படித்தான் காவிரியின் வெள்ளத்தையும் பாசனத்தையும் ஒழுங்குபடுத்தினான் கரிகாலன்.

உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த அணைகளின் வரிசையில் நான்காவது அணையாகக் கல்லணை உள்ளது. 1.ஜோர்டான் நாட்டில் உள்ள ஜாவா அணை, 2. எகிப்து கெய்ரோவில் உள்ள சாத்தல் கபாரா, 3. ஏமன் நாட்டில் உள்ள கிரேட் டாம் அணை என இவை மூன்றும் சுத்தமாகப் பயன்பாட்டில் இல்லை. அணைகள் இருந்த இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இப்போதும் பயன்பாட்டில் இருப்பது கல்லணை மட்டுமே. இதை அணை என்று சொல்வதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

நம்மில் பலரும் கரிகாலன் காலத்துக் கல்லணை அப்படியே இன்றும் உருக்குலையாமல் உள்ளது என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், உண்மை வேறு. கல்லணையைக் கட்டியது கரிகாலன்தான். ஆட்சி மாற்றம், அந்நியர் வருகை என... சோழ நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால், கல்லணை சரியான பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. கல்லணையின் மீதிருந்த மணல் மேடுகளை அகற்றி, மேலே கட்டுமானம் அமைத்து, அணையைப் புதுப்பித்தது ஆர்தர் காட்டன்தான். ஆகையால், கல்லணை இன்றும் உயிர்ப்புடன் இருக்க இந்த ஆங்கிலேயக் கிழவன் செய்த பணி மகத்தானது. கல்லணையைக் கட்டிய கரிகாலனை வாய் மணக்கப் புகழும் நாம், ஆர்தர் காட்டனையும் வாழ்த்துவோம்.

தவளேஸ்வரம் அணை
தவளேஸ்வரம் அணை


கொள்ளிடத்தின் குறுக்கே முக்கொம்பில் அவர் கட்டிய மேலணை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சை டெல்டா பகுதி முழுக்கப் பாசன நீரைப் பகிர்ந்தளிக்க உதவி செய்கிறது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடிய காலங்களில் உபரி நீரைச் சேமிக்க அணைக்கரை என்ற இடத்தில் கட்டப்பட்ட கீழணை மூலம் வீராணம் முதல் நாகப்பட்டினம் வரை லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. கல்லணையின் மீது ஏற்பட்ட தீவிர ஈர்ப்பால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார் ஆர்தர் காட்டன்.அப்போது சென்னை மாகாணத்திலிருந்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மிகப்பெரிய பஞ்சம் வந்தது. இந்தப் பஞ்சத்தால் பலர் உயிரிழந்தனர். பெரும்பான்மையான மக்கள் இடம் பெயர்ந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு சென்னை மாகாண அரசாங்கம், ஆர்தர் காட்டனை அனுப்பியது. அவர் மிகக் குறுகிய காலத்தில் ஆய்வு செய்து... ‘வளம் நிறைந்த கோதாவரி ஆற்று நீர், வீணாகக் கடலுக்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தண்ணீரைத் தவளேஸ்வரம் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி 12 அடி உயரத்துக்கு அணையைக் கட்டி சேமித்தால், அந்தப் பகுதியில் விவசாயம் செழிக்கும். எதிர்காலத்தில் பஞ்சமும் வராது’ என்று அறிக்கை கொடுத்தார். ஆனால், இவர் கேட்ட தொகையையும் பிரிட்டிஷ் அரசு கொடுக்கவில்லை. போதுமான ஆள்களையும் அனுப்பவில்லை. ஆனாலும், 1852-ம் ஆண்டு, கோதாவரி நதியில் தவளேஸ்வரம் அணையைக் கட்டி முடித்தார். இந்த அணையை அருகில் சென்று பார்த்தால், கல்லணையின் சாயல் தெரியும். இதன் மூலம் வறண்ட பகுதியைச் செழுமையாக்கினார். இன்று கோதாவரி நதி பாயும் பகுதிகள் பசுமையுடன் செல்வத்தில் செழித்து வளர கல்லணையைக் கட்டிய கரிகாலச்சோழனும் அவர் தொழில்நுட்பத்தை ஆந்திர மண்ணில் செயல்படுத்திய ஆர்தர் காட்டனுமே மூலகாரணம்.

1876-ம் ஆண்டின் தாது வருடப் பஞ்சத்தில் சென்னை மாகாணத்தில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். தென் மாவட்டங்களில் சேதம் அதிகம். மீண்டும் வறட்சி ஏற்படாமல் இருக்க, என்ன செய்யலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் யோசித்தது. அப்போதுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நீர்ப் பாசன திட்டங்கள் குறித்து ஆர்தர் காட்டன் வழங்கிய பரிந்துரையைப் புரட்டிப் பார்த்த போது, அவர் பரிந்துரைத்த பல திட்டங்களில் ஒன்றாக முல்லைப் பெரியாறு அணைத் திட்டமும் இருந்தது. இந்த அணைத் திட்டத்தை நிறைவேற்ற சரியான நபரைத் தேடினார்கள். அப்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார், அந்த ஆங்கிலப் பொறியாளர். அவர்தான், கர்னல் ஜான் பென்னிகுயிக். ஆக, முல்லை-பெரியாறு அணைக்கு முதல் புள்ளி வைத்ததும், ஆர்தர் காட்டன்தான்.

‘‘இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சும் ரயில் பாதைகள் வேண்டாம்; நீர்த்தேக்கங்கள் மூலம் பலன் அடையும் வேளாண் முன்னேற்றமே சிறந்தது’’ என்று அரசுக்கு எதிராக முழங்கினார். இதனால், பிரிட்டிஷ் அரசாங்கம், ஆர்தர் காட்டனை பணி நீக்கம் செய்தது. ‘‘போடா, நீங்களும்... உங்கள் வேலையும்’’ என்று சொல்லிவிட்டு, சம்பளம் வாங்காமல் நீர்ப் பாசன திட்ட ஆலோசனை களை அளித்து வந்தார்.

“இந்தியத் தேசத்தின் வறுமையைப் போக்குவதற்குத் தீர்வு, நீர்வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதுதான்” என்று கூறி அதைச் செயல்படுத்தியும் காட்டினார். கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தை முதலில் முன்மொழிந்ததும் இவர்தான். நீர் பாசனத்திட்டங்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த ‘இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட ஆர்தர் காட்டன் 1899-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி தனது 96-வது வயதில் இயற்கையுடன் கலந்தார். தன் வாழ்நாள் முழுக்கத் தமிழர்களின் நீர்ப் பாசன அறிவை உலகுக்கு அறிவித்து வந்தவருக்கு, கல்லணையில் ஒரு சிலை வைத்ததுடன் நம் கடமையை முடித்துக் கொண்டோம். ஆந்திராக்காரர்கள்போல, ஊர்ன்தோறும் சிலை வைத்து, ஆண்டுதோறும் திதி கொடுக்கக்கூடத் தேவையில்லை. இவரது வாழ்க்கை வரலாற்றைப் பள்ளியில் பாடமாக வைப்பதும், நீர் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும்தான் ஆர்தர் காட்டனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.