Published:Updated:

`இங்க 24 மணி நேரமும் பால் கிடைக்கும்!' தர்மபுரியில் ஒரு பால் ஏ.டி.எம்

Milk ATM
Milk ATM

300 லிட்டர் கொள்ளளவும் இரண்டு நாள்கள் பதப்படுத்தும் வசதியும் கொண்டது இந்த மில்க் ஏ.டி.எம் இயந்திரம். ரூ.10, ரூ.50, ரூ.100 எனப் பணத்தை நாணயமாகவோ, நோட்டுகளாகவோ செலுத்தி அதற்கேற்ற பாலை நுகர்வோர் தாமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள கொளகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அரூர் நான்கு சாலைக்கு அருகில் மில்க் ஏ.டி.எம் என்னும் நவீன இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்யும் முருகன், குறுகிய காலத்திலேயே மக்களின் கவனத்தையும் வாடிக்கையாளர்களின் வரவேற்பையும் ஈர்த்துள்ளார்.

Milk ATM
Milk ATM

"300 லிட்டர் கொள்ளளவும் இரண்டு நாள்கள் பதப்படுத்தும் வசதியும் கொண்டது இந்த மில்க் ஏ.டி.எம் இயந்திரம். ரூ.10, ரூ.50, ரூ.100 எனப் பணத்தை நாணயமாகவோ, நோட்டுகளாகவோ செலுத்தி அதற்கேற்ற பாலை நுகர்வோர் தாமாகவே பெற்றுக்கொள்ளலாம். ஏ.டி.எம் போன்ற அட்டைகளைப் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. கிட்டத்தட்ட ஏ.டி.எம் போலதான் இயக்கும் முறையும். மிக எளிமையானது. சிறியவர்கள்கூட வந்து சிரமமின்றி வாங்கிச்செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று இயந்திரத்தின் செயல்திறனை நமக்கு விளக்குகிறார் முருகன்.

இப்படி ஓர் இயந்திரத்தை வாங்க வேண்டியதற்கான தேவை என்ன என்று கேட்டபோது, "நுகர்வோருக்கு எந்நேரமும் தரமான பாலை கொடுக்க வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசையின் விளைவுதான் இந்த மில்க் ஏ.டி.எம். தமிழகத்தில் இப்போதைக்கு இந்த இயந்திரம் என்னிடம் மட்டும்தான் உள்ளது. கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலுக்கு மாற்று என்றால் நேரடி மாட்டுப்பால்தான். ஆனால், கறந்த பாலை நேரடியாக வாங்கலாம் என்றாலும்கூட அது காலை, மாலை என இரண்டு வேளைகளில்தான் கிடைக்கிறது. மற்ற நேரங்களில் கிடைப்பதில்லை.

Milk ATM
Milk ATM

நான் 20 ஆண்டுகளாகப் பால் தொழில் செய்கிறேன். எனவே, நுகர்வோரின் தேவைகளை நன்றாக அறிவேன். எனவே, எந்நேரமும் தரமான பால் வழங்க மாற்று வழி என்ன என இணையத்தில் தேடும்போது டென்மார்க் போன்ற பகுதிகளில் இத்தகைய இயந்திரப் பயன்பாடு இருப்பதை தெரிந்துகொண்டேன். அடுத்ததாக இந்தியாவில் இந்த இயந்திரம் எங்கு கிடைக்கும் என தேடியதில் ஹரியானா பகுதியில் இருப்பதாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட நான்கு லட்சம் கொடுத்து இதை வாங்கினேன். மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதுமட்டுமல்ல. இதன் மூலம் கறந்த பாலை எந்தவித மாற்றமும் இன்றி அதே தரத்துடனும் சரியான விலையிலும் நுகர்வோருக்குத் தரமுடிகிறது. இதனால் நெகிழி பயன்பாடும் பெரிதாக குறைந்துள்ளது கூடுதல் நன்மை. இன்னும் பல கிளைகளைத் தொடங்கி நிறைய எந்திரங்களை வாங்கப்போகிறேன்" என்று கூறும்போது நம்பிக்கை தெறிக்கிறது முருகன் பேச்சில்.

Milk ATM
Milk ATM

பால் தொழிலில் அடுத்தகட்ட திட்டம் என்ன என்ற கேள்விக்கு "பால் உற்பத்தியாளர்களுக்கு அசோலா தொழில்நுட்பத்தையும் அகத்தி வளர்ப்பையும் கற்றுக்கொடுத்து அதற்கான மூலதனத்தையும் என் சொந்த செலவில் இருந்தே கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். இதுபோன்ற தீவனங்களை கால்நடைகள் உண்ணும்போது கூடுதலாகவும் தரமானதாகவும் பால் கிடைக்கும். இதனால் பால் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் நல்ல பயடைவார்கள்" என்கிறார்.

இறுதியாக, "இளைஞர்களை அரசு வேலைக்கு போகக்கூடாது என்று நான் கூறமாட்டேன். ஆனால் அரசு வேலைதான் வேண்டுமென்று வாழ்நாளை வீணாக்கிவிடாமல் இதுபோன்ற சுயதொழில்களாலும் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்பது என் கருத்து" என்று குட்டியாக ஒரு அட்வைஸ்ஸையும் தட்டிவிடுகிறார் முருகன்.

50 லட்சம் டெபாசிட்... 15 லட்சம் லஞ்சம்... புலம்பும் ஆவின் பால்  டீலர்கள்!

இந்தப் புதிய முயற்சி ஊர்மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், எந்நேரமும் கறந்த பாலை நேரடியாகப் பெறமுடியும் என்பதால் இது பயனுள்ளதாக இருக்கிறது என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு