Published:Updated:

சினை ஊசி... பசுந்தீவனம் உற்பத்தி வியப்பூட்டும் ஈச்சங்கோட்டை கால்நடைப் பெருக்குப்பண்ணை!

கால்நடைப் பெருக்குப்பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடைப் பெருக்குப்பண்ணை

அபிவிருத்தி

சினை ஊசி... பசுந்தீவனம் உற்பத்தி வியப்பூட்டும் ஈச்சங்கோட்டை கால்நடைப் பெருக்குப்பண்ணை!

அபிவிருத்தி

Published:Updated:
கால்நடைப் பெருக்குப்பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடைப் பெருக்குப்பண்ணை

ஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் 549 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காட்சியளிக் கிறது உயரின கால்நடை பெருக்குப் பண்ணை. மாவட்ட கால்நடைப் பண்ணையின் ஓர் அங்கமாக 1957-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இப்பண்ணை, 1976-ம் ஆண்டு உயரின கால்நடைப் பெருக்குப் பண்ணையாகத் தரம் உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் இப்பண்ணையில், ஜெர்சி, ஜெர்சி கலப்பினம், முரா எருமைகள் நன்கு ஊட்டமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் உறை விந்து சேகரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சினை ஊசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை செயற்கை முறை கருவூட்டலுக்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கும் வெளிமாநிலங் களுக்கும், விநியோகம் செய்யப்படுகின்றன. இங்கு பசுந்தீவனம் சாகுபடி செய்யப்பட்டு, இப்பகுதி விவசாயிகளுக்குத் தரமான புல் கரணை மற்றும் தீவனப்புல் விற்பனை செய்யப்படுகிறது.

ஈச்சங்கோட்டை 
கால்நடைப் பெருக்குப்பண்ணை
ஈச்சங்கோட்டை கால்நடைப் பெருக்குப்பண்ணை

இப்பண்ணையின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள, ஒரு பகல்பொழுதில் இப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணையின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த சிறிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. வாகனங்களில் சென்றாலும் நடந்து சென்றாலும் இதைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்தத் தண்ணீரில் கால் நனைத்து நுழைந்து கொண்டிருந்தார்கள் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்கள். அவர்கள் சென்றதும் அந்த நீரை வடியவிட்டுக்கொண்டிருந்த ஓர் ஊழியர், ‘‘இது மருந்து போட்ட தண்ணி... வெளியே இருந்து உள்ளே வரக்கூடிய மனிதர்கள் மூலம், தொற்றுக் கிருமிகள் பண்ணைக்குள்ள வந்து, அதனால், மாடுகளுக்கு நோய் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகக் காலை நனைச்சுக்கிட்டு வர இப்படி அமைச்சிருக்கோம். இங்க கட்டுப்பாடுகள் அதிகம். வெளியாட்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரத்துல அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

நுழைவாயிலில் சோதனை சாவடி உள்ளது. அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சாலை போகிறது. அதன் இருபக்கமும் மரங்கள் உயர்ந்து நின்று பண்ணையை அலங்கரிக்கின்றன. கால்நடை தீவனத்துக்கான சொர்க்கம் என்று சொல்லும் வகையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கோ-4, கோ-5, கினியா, சூபாபுல், வேலி மசால், சோளம், அகத்தி என விதவிதமான பசுந்தீவனப் பயிர்கள் ஆளுயரத்துக்கு வளர்ந்து பச்சைகட்டி அணி வகுத்து நிற்கின்றன.

ஈச்சங்கோட்டை 
கால்நடைப் பெருக்குப்பண்ணையில்
ஈச்சங்கோட்டை கால்நடைப் பெருக்குப்பண்ணையில்

நன்கு காற்றோட்டமாகவும் சுகாதார மாகவும் தோற்றமளிக்கும் நவீன கொட்டகையில், மிகவும் பாதுகாப் பாகவும் கம்பீரமாகவும் நின்று வரவேற்கின்றன பொலிகாளைகள்.

பண்ணையின் செயல் பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையின் தஞ்சை மண்டல இணை இயக்குநர் டாக்டர் தமிழ்ச்செல்வன்,

‘‘இது, மத்திய அரசிடம் அங்கீகாரம் பெற்று, உலகத் தரச் சான்றுடன் இயங்கும் பண்ணை. அதற்கான தகுதி இருந்தால்தான், சினை ஊசிகள் தயார் செய்ய அனுமதி கிடைக்கும். இப்பண்ணையில் பொலிகாளைகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. தற்போது 30 ஜெர்சி, 109 ஜெர்சி கலப்பினம், 20 முரா எருமை, 3 உம்பளச்சேரி உட்பட மொத்தம் 162 காளைகள் உள்ளன. இவற்றின் தீவன தேவைக்காக, பண்ணை வளாகத்தில் 80 - 100 ஏக்கரில், இயற்கை முறையில் பசுந்தீவனம் சாகுபடி செய்யப்படுகிறது.

தீவனச் சாகுபடி
தீவனச் சாகுபடி

இங்கு வளர்க்கப்படும் மாடுகளின் சாணத்தையும், சாணம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தையும், பசுந்தீவனச் சாகுபடிக்கு இடுபொருள் களாகப் பயன்படுத்துகிறோம். பண்ணையின் தேவைபோக மீதமுள்ள எருவை ஒரு டன் 900 ரூபாய் என இப்பகுதி விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். மாட்டுக் கொட்டகையிலிருந்து சுத்தம் செய்யப்படும் சாணம், சிறுநீர் கலந்த கழிவுநீர், நேரடியாக, பசுந்தீவனப் பயிர்களை வந்து சேருமாறு கட்டுமான வசதி அமைக்கப் பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பசுந் தீவனத்திலிருந்து தினமும் 5 - 6 டன் அறுவடை செய்கிறோம். ஒரு மாட்டுக்கு 35 கிலோ வீதம் பசுந்தீவனம் கொடுப்பதால் மாடுகள் ஊட்டமாக வளர்கின்றன. இதோடு, சத்துமிக்க அடர் தீவனமும் வைக்கோலும் கொடுக்கப்படுகிறது’’ என்றார்.

எருமைகள்
எருமைகள்

அவரைத் தொடர்ந்து பேசிய பண்ணையின் துணை இயக்குநர் சையது அலி, ‘‘ஆண்டுதோறும் இப்பண்ணையில் 35 - 45 லட்சம் சினை ஊசிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு புதிய சாதனையாக 49,14,000 சினை ஊசிகள் உற்பத்தி செய்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

இங்கு சாகுபடி செய்யப்படும் பசுந்தீவனத்தில் தேவைபோக மீதி இருப்பதை ஒரு கிலோ 2 ரூபாய் என இப்பகுதி விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். மழை, புயல்காலங் களில் விவசாயிகள், மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாது. அதுபோன்ற தருணங்களில் இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பசுந்தீவனம் விநியோகம் செய்யப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மாடுகள்
மாடுகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 120 டன் பசுந்தீவனம் இலவசமாக வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு, கோ.எஃப்.எஸ்- 29 தீவன சோளம் விதைகள் 10 டன் உற்பத்தி செய்யப்பட்டு, விதைச் சான்று பெற்று, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட விவசாயி களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். இந்தப் பண்ணையில் தரமான புல் கரணை களை விற்பனை செய்கிறோம். கோ-4 மற்றும் கோ-5 ரகப் புல் கரணைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஒரு கரணையின் விலை 50 பைசா. கடந்த ஆண்டு 2,55,000 புல் கரணைகள் விற்பனை செய்துள்ளோம்’’ என்றார்.

தமிழ்நாட்டின் கால்நடை பெருக்கத்துக்கு இப்பண்ணையின் பங்களிப்பு அளப்பரியது.தொடர்புக்கு,

உயரின கால்நடைப் பெருக்குப் பண்ணை,

ஈச்சங்கோட்டை - 614902.

தொலைபேசி: 04372 244844,

செல்போன்: 94450 32528.

தமிழ்ச்செல்வன், சையது அலி
தமிழ்ச்செல்வன், சையது அலி

பண்ணையின் பணியாளர்கள்

சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என தினக்கூலிகளாக 78 பேர் வேலை செய்கிறார்கள். தினமும் காலை 7 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வேலை. தீவனப்புல் உற்பத்தி, வளர்ந்த புற்களை அறுவடை செய்வது இவர்களுக்கான பணி. இது தவிர, கால்நடை பராமரிப்புப் பணியில் 15 பேர் பணியாற்றுகிறார்கள். பண்ணையின் அலுவலக ஊழியர்களாக 10 பேர் பணிபுரிகிறார்கள். கால்நடை மருத்துவர்கள் 4 பேர் பணியாற்றுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism