Published:Updated:

பைசா செலவில்லா மருத்துவமும் பணம் பிடுங்கும் மருத்துவர்களும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

பைசா செலவில்லா மருத்துவமும் பணம் பிடுங்கும் மருத்துவர்களும்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

உலகின் முதல் விஞ்ஞானிகள் நம் சித்தர்கள்தாம். தரணியில் சிறந்தது நம் சித்த மருத்துவம். அதன் மகத்துவத்தையும் அதை வைத்துப் பொருளீட்டும் போலிகளைப் பற்றியும் கடந்த சில இதழ்களில் பார்த்து வருகிறோம். இந்த இதழில் வேலூர் சித்த மருத்துவருடன் ஏற்பட்ட அனுபவத்தைக் கேளுங்கள்.

பெங்களூரு சென்று திரும்பும்போது, ‘வேலூரில் ஒரு சித்த மருத்துவர் இருக்கிறார். அவரைப் பர்த்துவிட்டுச் செல்வோம்’ என்று நண்பர் சொன்னார். போகும் வழிதானே என்று சரி என்றேன்.

ஏ.சி அறையில் காவி உடையில் அமர்ந்திருந்தார், சித்த மருத்துவர். அறை முழுக்கச் சித்தர்களின் படங்களால் நிரம்பி வழிந்தது. சாம்பிராணி, ஜவ்வாது வாசம் மூக்கைத் துளைத்தது. ‘‘சில வருஷமா முதுகு வலி அதிகமா இருக்கு. நீங்கதான், என் முதுகு வலியைக் குணப்படுத்தணும்’’ என்று நண்பர், தன் பிரச்னையைச் சொன்னார்.

தாடிக்குள் புன்னகையை உதிர்த்துவிட்டு நாடி பார்த்தார், சித்த மருத்துவர். ‘‘சரியான நேரத்துல வந்திருக்கீங்க. இப்போ நான் கொடுக்குற மருந்தை, உடனே சாப்பிடாம விட்டா, உங்களை யாராலும் காப்பாத்த முடியாது’’ என்று எச்சரித்துவிட்டு, ‘‘நீங்க சென்னைங்கிறதால அடிக்கடி வர முடியாது. மூணு மாசத்துக்குச் சேர்த்து மருந்து வாங்கிட்டுப் போயிடுங்க’’ என்று மருந்து டப்பாக்களை அடுக்கினார், மருத்துவர். ஒவ்வொன்றும் அரைக்கிலோ எடையுள்ள மூன்று வெள்ளை டப்பாக்களில், அந்த மருத்துவரின் படம் மட்டுமே அச்சிடப் பட்டிருந்தது. மருந்து பெயரோ, தயாரிப்பு விவரமோ, விலையோ... என எதுவுமில்லை.

‘‘இது என்ன மருந்துனு பெயர்கூட இல்லாம இருக்கே ஐயா’’ என்று பவ்யமாக நண்பர் கேட்டார். ‘‘அது பரம ரகசியம்’’ என்று தாடியைத் தடவியபடி சொன்னார், அந்த மருத்துவ மணி. ‘‘சரி, என்ன விலைங்க ஐயா’’ என்றார் நண்பர். ‘‘மருத்துவம் இலவசம்தான். மருந்துக்கு மட்டும் பணம் கொடுத்தா போதும்’’ என்றார் மருத்துவ ரத்னா.

‘பரவாயில்லையே, தாராள பிரபுவாக இருக்கிறாரே!’ என்று நினைத்து மகிழ்ந்தோம். ஆனால், அது சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது. மருந்து ரசீதை வாங்கிப் பார்த்த நண்பர். பேச்சு வராமல், என்னிடம் காட்டினார். மாதத்துக்கு ஒரு டப்பா 6,000 ரூபாய் என்று மூன்று மாதங்களுக்கு 18,000 ரூபாய் பில் போட்டுத் தீட்டியிருந்தார். மருந்து விலையைப் பார்த்து, மெளனியாக அமர்ந்திருந்தோம்.

அந்த நேரத்தில் தன்னிடம் மருத்துவம் பார்த்து, குணம் பெற்றவர்கள் பற்றியும், நாடும் மக்களும் தன்னை இன்னும் பயன் படுத்திக்கொள்ளவில்லை என்றும் அலுத்துக் கொண்டார், அந்தத் தாடிக்காரர்.

தற்பெருமை பேசியபடியே நண்பரின் கன்னத்தை உற்றுப்பார்த்தவர், ‘‘உங்க கன்னத்துல வெண்புள்ளி நோய் ஆரம்ப நிலையில இருக்கு. இப்பவே மருந்து சாப்பிடணும். இல்லைன்னா, நோய் முத்தி, உடம்பு முழுக்கப் பரவிடும். அதுக்கும் மருந்து வாங்கிக்கோங்க’’ என்று மீண்டும் மூன்று டப்பா மருந்துகளை மேசையில் அடுக்கி, மீண்டும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த நான், நண்பரை வெளியே அழைத்து இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்கக் கூடாது கிளம்புங்கள் என்றேன். ‘‘இந்த மருந்து எடுத்துகிட்டா, உயிரை வாங்குற முதுகு வலி போயிடும்னு சொல்றாரு. விலை அதிகமா இருந்தாலும் வாங்கிட்டுப் போயிடலாமே’’ என்று அப்பாவியாகச் சொன்னார் நண்பர்.

வெண்புள்ளி என்பது நோய் அல்ல. அது நிறமி குறைபாடு. தோல்களுக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய `மெலனின்’ (Melanin) என்னும் நிறமி. இதுவே சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களிலிருந்தும் (UV Rays) நம் உடலைப் பாதுகாக்கிறது. இந்த மெலனின் நிறமியின் சுரப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்து போவதால் அந்தப் பகுதியில் வெண்புள்ளிகள் (Vitiligo) ஏற்படுகின்றன. அதை நோய் என்று சொல்கிறவர், நிச்சயம் உண்மையான சித்த மருத்துவராக இருக்க முடியாது. மேலும், சித்த மருந்துகள் மட்டுமல்ல, எந்த மருந்தாக இருந்தாலும் மருந்துக்குள் என்ன உள்ளன என்ற தகவல்களைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லவில்லை என்றால், அவர் போலி என்றேன்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

உள்ளே சென்று நீங்கள் கேட்கும் அளவுக்குப் பணம் எடுத்துவரவில்லை. அடுத்த முறை வாங்கிக்கொள்கிறோம் என்றெல்லாம், நண்பர் பேசிப்பார்த்தார். ஆனால், அந்தப் போலி சித்த மருத்துவர், விடுவதாக இல்லை. ‘முதுகு வலி மருந்தை ஒரு மாதத்துக்கு மட்டுமாவது வாங்கிச் செல்லுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் செல்ல செல்ல, வாக்குவாதம் முற்றும் நிலை வந்தது. சரி, பிரச்னை வேண்டாம் என்று 6000 ரூபாய் கொடுத்து, அந்த மருந்து டாப்பாவை வாங்கி வரும் நிலை உருவானது. வெளியில் வந்து பார்த்தால், இன்னும் சில கார்கள் வந்திருந்தன. வரிசை கட்டி ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கிடைக்கப் போகும் அனுபவத்தை நினைத்தபோது, அச்சமாக இருந்தது.

எந்த விவரமும் இல்லாத, அந்த மருந்தைச் சாப்பிடுவதும் ஒன்றுதான், விஷத்தைக் குடிப்பதும் ஒன்றுதான் என்றேன். அந்த மருந்து டப்பாவை பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலை ஓரத்தில் தூக்கி எரிந்தார் நண்பர். வழி முழுக்க அந்தப் போலி மருத்துவரின் லீலைகள் பற்றிப் பேசியபடி ஊர் திரும்பினோம். வேலூர் பத்திரிகை நண்பர்களிடம், அந்த மருத்துவர் மீது ஒரு கண் வையுங்கள் என்று சொல்லி வந்தேன்.

சில மாதங்களில், அந்த நண்பருக்கு இருந்த கடுமையான முதுகு வலி சரியாகிவிட்டது. ‘‘ரொம்ப வருஷமா சொத்தைப் பல் இருந்துச்சு. எப்பவாது வலிக்கும். இந்த முறை வலி அதிகாமாயிச்சு. பல் டாக்டர்கிட்ட போனேன்... பல்லை புடுங்கிட்டாரு. அப்போ இருந்து முதுகு வலியும் பறந்து போயிடுச்சு’’ என்றார். இந்தத் தகவலை மருத்துவ நண்பர்களிடம் சொல்லியபோது, ‘‘பல் வலி இருந்தால், முதுகு வலி இருக்கும்’’ என்று உறுத்திப்படுத்தினார்கள்.

சொத்தைப் பல் இருந்தால், முதுகு வலி இருக்கும் என்ற பாடத்தைக் கற்க 6,000 ரூபாய் கொடுத்து கற்று வந்தோம். அடுத்த முறை வேலூர் செல்லும்போது, அந்த போலி சித்த மருத்துவர் பற்றி விசாரித்தேன். ஆரம்பத்தில் வாயில் வடை சுட்டு, மருந்துகளை விற்று வந்திருக்கிறார். காலப்போக்கில் அவரின் போலி முகம் தெரிந்துவிட்டது. தினமும், அவர் கொடுத்த மருந்தை உண்டவர்கள், புகார் சொல்லி வரத் தொடங்கியிருக்கிறார்கள். போலீஸ், கேஸ் என்று சென்று கடைசியில் ஊரை விட்டே ஓடிவிட்டார், அந்த போலி மருத்துவர். நல்ல வேளை, அந்த மருந்தை நண்பர் சாப்பிடவில்லை. பணம் கொடுத்து வாங்கியது என்று உண்டு களித்திருந்தால், கத்திப் போய், வாள் வந்திருக்கும். ஆம், சரியான முறையில் தயாரிக்கப்படாத சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு அல்சர், கல்லீரல் பிரச்னை வரும். கொரோனாவுக்குப் பிறகு, நம் மக்களுக்கு ஏற்பட்ட இயற்கை மருந்துகள் மீது உருவான பாசத்தை வைத்து, போலி சித்த மருத்துவர்கள் பணத்தை வாங்கிக் கொழிக்கிறார்கள். கூடவே, அவர்கள் கொடுக்கும் தரமற்ற மருந்துகள் மூலம் உடல் நோய்களையும் இலவசமாக அள்ளி வழங்கி வருகிறார்கள்.

‘‘எந்த மருத்துவ முறையைப் பின்பற்றினாலும், தகுதி வாய்ந்த, முறையாகப் பயிற்சி பெற்ற மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.’’

‘‘முறையாகப் பயிற்சி பெறாத நாட்டு மருத்துவர்கள் தரும் மூலிகை கஷாயத்தைக் குடித்து, வயிறு புண்ணாகி, ரத்த வாந்தி எடுப்பவர்களைப் பார்த்து வருகிறேன். இது, கடந்த பல மாதங்களில் அதிகமாகி விட்டது. இன்னும் சிலர், ஒரு படி மேலே போய், உணவுக்கு மாற்றாக மூலிகைகளைச் சாப்பிடுகின்றனர்.

நாம் சமையலில் உபயோகிக்கும் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு போன்றவற்றை எந்த அளவு போட வேண்டுமோ, அந்த அளவு போட்டு, வேக வைத்துச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், அதை அப்படியே பச்சையாக, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் போது, அதில் உள்ள காரத்தன்மை வயிற்றுப் புண்னை ஏற்படுத்தும். நாட்டு மருந்தில், மூலிகை தவிர வேறு பல ரசாயனப் பொருள்கள் கலப்பதாகக் கூறுகின்றனர். இவற்றை, தகுதி பெறாத பலர் தயாரித்து விற்கின்றனர்.

அதனால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்னை, இங்கு மட்டும் இல்லை; சீனா போன்ற நாடுகளிலும் உள்ளது. எந்த மருத்துவ முறையைப் பின்பற்றினாலும், தகுதி வாய்ந்த, முறையாகப் பயிற்சி பெற்ற மருத்து வரிடம் ஆலோசனை பெற வேண்டும்’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த குடல், இரைப்பை மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.ரவி.

பைசா செலவில்லாமல், உணவுகள் மூலமே, கடுமையான நோய்களையும் குணப்படுத்திக் காட்டிய சித்தர்கள் வாழ்ந்த பூமி இது. கடந்த நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த கந்தசாமி முதலியார் என்பவர், ‘‘அஞ்சரை பெட்டியிலிருந்து அறுசுவை மூலம் நோய்களையும் போக்கலாம், சத்துக் குறைபாட்டையும் நீக்கலாம்’’ என்று அடித்துச் சொல்கிறார். அடிப்படையில் பள்ளி ஆசிரியரான இவர் எழுதிய ‘உணவு மருத்துவம்’ நூல் இயற்கை வாழ்வியலை விரும்புவார்கள் மத்தியில் புனித நூல் போலக் கொண்டாடப்படுகிறது.

‘‘என் நண்பர் ஒருவர் ஆரணி யிலிருந்து சென்னை திருவல்லிக் கேணி ஹிந்து ஹைஸ்கூலில் தமிழ் ஆசிரியர் வேலைக்கு வந்தார். ஹோட்டலில்தான் சாப்பிட வேண்டும். சென்னைக்குப் புதிதாக வந்து சேருகிறவர்களுக்கு வருகிற மலேரியா ஜுரம் அவருக்கும் வந்து விட்டது. அவருக்கு நண்பராகிய ஆங்கில வைத்தியர் அருகிலேயே இருந்தார். மருந்து கொடுப்பார். ஜுரம் போய்விடும். பின்பு மீண்டும் வரும். இப்படி ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டார். நான் ஒருநாள் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் தம் கதையைச் சொன்னார். என் குரு நாதர் டாக்டர் ஜீவா சொல்லிக் கொடுத்த பொட்டுக்கடலை துவையல் நினைவுக்கு வந்தது.

உணவில் சிறு மாறுதல் செய்தால், உங்களுக்குச் ஜுரம் வராமல் நின்றுவிடும். உங்கள் ஹோட்டல்காரர், உங்களுக்குச் சிறு வேலை செய்வாரா? என்று கேட்டேன்.

“ஹோட்டல்காரர் நன்றாகப் பழகியவர். எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார்” என்றார். அப்படியானால், 1. உடைத்த கடலை என்னும் பொட்டுக்கடலை. 2. தேங்காய். 3. வறுத்த வற்றல் மிளகாய் (உங்களுக்கு எவ்வளவு காரம் பிடிக்குமோ அவ்வளவு) ஆகிய இம்மூன்றையும் புளியின்றித் துவையல் செய்து இரண்டு வேளையும் கொடுக்கச் சொல்லுங்கள். முதல் பாதிச் சாதம் இந்தத் துவையல் சேர்த்து நல்லெண்ணெய் விட்டுக் கலந்து சாப்பிடுங்கள்; மற்ற பாதிச் சாதம் உங்கள் இஷ்டப்படி சாப்பிடுங்கள் என்றேன். ஹோட்டல் காரரும் உதவினார். நண்பருக்கு மலேரியா ஜுரமும் நின்றது. உடலில் அறுசுவைகளில் சில சுவைகள் (சத்துகள்) குறையும்போது, நோய் தாக்குதலுக்குப் பிறகும், தொடர்ச்சியாக ஜுரம் வரும்’’ என்று தன் உணவு மருத்துவ அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார், கந்தசாமி முதலியார்.

கொரோனா கொடும் தொற்று பாதித்து, உடல் நலன் தேறாமல் அவதிப்படுபவர்கள் அதிகம். இக்காலத்தில் இந்த அறுசுவை உணவு குறித்து, தகுந்த மருத்துவ ஆராய்ச்சி செய்து, அதன் நன்மைகளை வெளியிட மருத்துவ உலகம் முன் வர வேண்டும்.

‘‘உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்

உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.’’

நம் எல்லோரும் அறிந்த, இந்தத் திருமந்திர பாடலில் ஓர் அற்புதமான தகவலைச் சொல்லி வைத்துள்ளார் திருமூலர். ஆடுதுறையில் ஆடு, மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த திருமூலன் என்ற விவசாயி, சித்தனாகி 5-ம் நூற்றாண்டில் கண்டறிந்ததை இன்றைய நவீன மருத்துவ உலகமும், வழி மொழிகிறது. நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ அது அவசியம் என்றும் அடித்துச் சொல்கிறது. அது என்ன?

அடுத்த இதழில் அதைப் பற்றிப் பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism