Published:Updated:

வானொலி அண்ணாச்சியும் வானொலி விவசாயியும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

வானொலி அண்ணாச்சியும் வானொலி விவசாயியும்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

நீண்ட நேரம் பார்த்தால் கண் வலிக்கும்! பேசினால் வாய் வலிக்கும்! மோந்தால் மூக்கு வலிக்கும்! நடந்தால் கால் வலிக்கும்! எழுதினால் கை வலிக்கும்! ஆனால், எவ்வளவு நேரம் கேட்டாலும், காது வலிக்காது! ஏனெனில், அது வலிமையுடையது. மனிதனின் இரண்டு காதுகளும் இரு வேறு திசைகளை நோக்கி இருப்பதன் நோக்கமே நல்ல செய்திகளையும் நல்ல தகவல்களையும், இனிய பாடல்களையும், எளிய உரையாடல் களையும் உள்வாங்கி மூளைக் கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்’’ என்று கிளப் ஹவுஸ் மீட்டிங்கில், வானொலி நிலையத்தில் பணியாற்றிய நண்பர் பேசினார்.

அந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி அருகே அமர்ந்திருந்தார்கள். இந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு ஸ்மார்ட் போனில் ட்வீட்டர் ஸ்பேஸ், கிளப் ஹவுஸ், பாட்காஸ்டிங்..கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்றும் வானொலியில் ஒலிபரப்பாகும் விவசாய நிகழ்ச்சிகளை ஸ்மார்ட் போன் மூலம் கேட்கும் விவசாயிகளைப் பார்க்கிறேன். அதற்குக் காரணம், அந்த மொழியின் தாக்கம்தான். இதைப் பற்றி பிரபல வானொலி பேச்சாளர்களில் முன்னோடி ஒருவரின் அனுபவம் இதோ-

‘‘திருநெல்வேலி வானொலி நிலையத்தில் நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில், ஓர் அறிவிப்பைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். அதை என் பாணியில் மாற்றி, ‘புளியங்குடி வட்டார விவசாயிகளே, உங்கள் நெல் பயிர்ல குருத்துப்பூச்சி தாக்கியிருக்கிறதா சொல்றாங்க. பூச்சிக்கு என்ட்ரின் மருந்து அடிக்கணும். அத எப்படி அடிக்கணும்னா, ஒரு வாளி தண்ணி எடுத்து வைச்சிடுங்க. அந்த என்ட்ரின் மருந்தை அந்தப் பாட்டில் மூடியில அளந்து ரெண்டு மூடி ஊத்துங்க. அப்புறம், அதை ஒரு குச்சியால கலக்கி, வயல்ல அடிங்க. சரியாப் போயிடும்’ என்று சொன்னேன்.

சில நாள்கள் கழித்து, புளியங்குடி பகுதியிலிருந்து, கோமதிநாயகம், அந்தோணிசாமி... என்று சில விவசாயிகள் வானொலி நிலையத் துக்கு வந்தார்கள். நிலைய இயக்குநரைப் பார்த்து, ‘சார், ரொம்பக் காலமா விவசாய அறிவிப்பைக் கேட்டுக்கிட்டிருக்கோம். ஆனா, இப்போதான், நீங்க என்ன சொல்றீங்கனு புரியுது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

உடனே, நிலைய இயக்குநர் என்னை அழைத்து, ‘இனி விவசாய நிகழ்ச்சியில மட்டும் இப்படிப் பேசு. மற்ற நிகழ்ச்சியில, பேச்சு வழக்குல பேசக் கூடாது’ என்று சொன்னார். இதுதான் என் வாழ்நாள் முழுக்க வரப்போகிறது என்று அப்போது தெரியாது. இன்று வானொலி, தொலைக்காட்சி என்று எல்லா பக்கமும் பேச்சு வழக்கில் பேசுவது வழக்கமாகிவிட்டது!’’

-இந்த அனுபவத்துக்குச் சொந்தக்காரர், தன் மொழிநடையால் நம்மையெல்லாக் கட்டி ஆண்ட, மறைந்த ‘தென்கச்சி’ கோ.சுவாமிநாதன். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மழை நாளில், மெரினா கடற்கரை எதிரில் உள்ள சென்னை வானொலி நிலையத்தில் அவரை முதன் முதலில் சந்தித்தேன்.

வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், காமா சோமா என்று ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டு சென்றேன். நான் சந்திக்கச் சென்ற ‘நகர் வலம்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆனந்தன் இருக்கைக்குப் பக்கத்தில்தான், தென்கச்சி சுவாமிநாதன் அமர்ந்திருந்தார். அவரது குரலை வைத்துதான், அடையாளம் கண்டு கொண்டேன். தென்கச்சி சுவாமிநாதனை, அங்கு எல்லோரும் அண்ணாச்சி என்றுதான் அழைத்தார்கள்.

தென்கச்சி சுவாமிநாதன்
தென்கச்சி சுவாமிநாதன்


என் கட்டுரையைத் திரும்பவும் மாற்றி எழுதச் சொன்னார் ஆனந்தன். திரும்பத் திரும்பத் திருத்தி எழுதினேன். இப்படியாக ஏழு முறை திரும்பத் திரும்ப எழுதி முடிக்கும் போது, மாலை 5 மணி ஆகியிருந்தது. இசை ஆசிரியர்கள்போல, ஆனந்தனும் அண்ணாச்சியும், ‘‘அப்படித்தான், அப்படித்தான்’’ என்று ஒவ்வொரு முறையும் உற்சாகப்படுத்தினார்கள். காரணம், வானொலிக்குக் கட்டுரை எழுதுவதும் அதில் பேசுவதும் தனிக்கலை என்பதைப் பின் நாள்களில்தான் தெரிந்துகொண்டேன். இதன் பிறகு, ஒப்பந்த அடிப்பையில் பல நிகழ்ச்சிகளில் வானொலியில் பங்கு கொண்டுள்ளேன். வானொலி நிலையம் செல்லும்போது, தென்கச்சி அண்ணாச்சி யைப் பார்க்காமல் வர மாட்டேன். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடியதை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

‘‘அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது தென்கச்சி ஊர். எங்கள் ஊர்ப்பக்கம் சுவாமிநாதன் என்கிற பெயர் அதிகம். அதனால் பள்ளியில் படிக்கிறபோதே ஆசிரியர் ஊர் பெயரையும் சேர்த்து அழைப்பது வழக்கம். நீ கும்பகோணம் சுவாமிநாதன், நீ ஆடுதுறை சுவாமிநாதன், நீ தென்கச்சி சுவாமிநாதன் என்பதாகக் குறிப்பிடுவார். என்னோடு இப்படித்தான் தென்கச்சி ஒட்டிக்கொண்டது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி (விவசாயம்) 1965-ல் படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். அப்போது அரசு வேலைக்கு வேளாண்மை படிச்சவங்க நிறைய தேவைப்பட்டதால பரீட்சை ரிசல்ட் வருவதற்குள் வேலைக் கான உத்தரவு வந்துவிட்டது. பாளையங்கோட்டை பஞ்சா யத்து யூனியனில் விவசாய அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகுதான் ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங்களில் நான் பெயில்! வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, கோவை, வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வந்து மறுபடியும் அந்த இரண்டு பாடங்களையும் எழுதி ‘பாஸ்’ ஆனது தனிக் கதை.

பாளையங்கோட்டையில் ஓர் ஆண்டு வேலை. அங்கிருந்து கடையம் பஞ்சாயத்து யூனியனுக்கு மாற்றல் ஆனேன். அங்கே ஓர் ஆண்டு. பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் அது. அதே தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அப்புறம் அங்கிருந்து தஞ்சை மாவட்டம், பேராவூரணி பஞ்சாயத்து யூனியனுக்கு வந்தேன். அங்கே ஓர் ஆண்டு. அப்புறம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென்கச்சிக்கு வந்து விவசாயம் செய்தேன். டிராக்டர்கூட நன்றாக ஓட்டுவேன். ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அதில் நின்று வெற்றி பெற்று, ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். இப்படி விவசாயம், ஊராட்சி மன்றத் தலைவர் பணி என்று பத்து ஆண்டுகள் ஓடின.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


ஒருநாள் செய்தித்தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். திருநெல்வேலி வானொலியில் பண்ணை இல்ல ஒலிபரப்புக்கு ஓர் ஆள் தேவை. விவசாயம் படித்தவராக இருக்க வேண்டும். விவசாயத்தில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இப்படியாக இருந்தது அந்த விளம்பரம். அப்போது எனக்கு 34 வயது. வெள்ளைத்தாளில் விவரங்களோடு விண்ணப்பிக்கச் சொல்லி யிருந்தார்கள்; விண்ணப்பித்தேன். அதிக சிரமம் இன்றி அந்த வேலை எனக்குக் கிடைத்தது. அதற்கு என்ன காரணம் என்றால் போட்டிக்கு அதிகமாக யாரும் வரவில்லை. விவசாயம் படித்தவர்கள் வேலை யில்லாமல் அப்போது யாரும் இல்லை. அது எனக்கு வசதியாகப் போனது.

1977-84 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணி. பதவி உயர்வு பெற்று இலக்கியப் பிரிவு ஆசிரியர் ஆகி சென்னை வானொலிக்கு வந்து சேர்ந்தேன்’’ என்று சொன்னவரிடம், எப்படி ‘இன்று ஒரு தகவல்’ உருவானது என்று கேட்டோம்.

‘‘வானொலி நிலைய கேன்டீனில்தான் அது உருவானது. மதிய உணவு நேரத்தில், இனி தொலைக்காட்சி வந்துவிட்டது. வானொலியை யாரும் கேட்கமாட்டார்கள்... என்று பேசிக் கொண்டிருந்தேன். இந்த விஷயம், நிலைய இயக்குநரின் காதுகளுக்குச் சென்றுவிட்டது. ‘எல்லோரும் வானொலியை விரும்பி கேட்கும்படி நாளையிலிருந்து, நல்ல நிகழ்ச்சி ஒன்றை நீயே வழங்கு’ என்றார். இன்று ஒரு தகவல் 1988-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி தொடங்கியது.

‘சார்... நான் ஒருவனே இதைத் தொடர்ந்து வழங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்றேன். ‘நீங்க ஒரு மாசம் இதை வழங்கினால் போதும். அடுத்த மாசம் வேறொருவரிடம் இதை ஒப்படைக்கலாம்!’ என்றார். ‘அப்படியானால் சரி!’ என்று ஆரம்பித்தேன். அதற்கப்புறம் வேறு யாரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இயக்குநருக்கும் அதை வேறு ஒருவருக்கு மாற்ற விருப்பமில்லை.

நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் ஒலிபரப்பான விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை வருமானம் வந்தது. இதனால் 5 நிமிடமாக இருந்த என் நேரம் மூன்றரை நிமிடமாகக் குறைந்துவிட்டது. ஆனால், அரசுக்கு நல்ல வருமானம் வந்தது. இதனால் என்னை யாரும் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. அதாவது, பணியிடமாற்றம் ஏதும் செய்ய வில்லை. வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்வார்கள். பணி நிறைவு பெறும் வரையில் 14 ஆண்டுகள் இந்த நிலையத் திலேயே இருந்தேன். இன்று ஒரு தகவல் மூலம் கிடைத்த ஒரே ஆதாயம் இது மட்டும்தான்’’ என்றவரிடம்

“அண்ணாச்சி, உங்கள் குரல் வெங்கல குரல் போல இருக்கிறதே. ஏதாவது சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களா?” என்று கேட்டேன்.

‘‘வெங்கலமும் இல்லை. பித்தளையும் இல்லை. ஓர் உளவியல் ரகசியத்தைச் சொல்கிறேன். தினமும் ஒரு குரலைக் கேட்டுக்கொண்டு இருந்தால், நம்மை அறியாமலே, அந்தக் குரல் நமக்குப் பிடித்துவிடும். சில நடிகர்களோட முகம் சுமாராக இருந்தாலும் கூட, திரும்பத் திரும்பப் பார்க்கும்போது, அவர்களை நமக்குப் பிடித்துவிடும். என் குரல் பலருக்கும் பிடித்திருக்கிறதுக்குக் காரணம், குரல் வளம் கிடையாது. தினமும் நீங்கள் வானொலியைக் கேட்பதுதான்’’ என்று சொன்னார்.

பசுமை விகடன் முதல் இதழ், 2007-ம் ஆண்டு, பிப்ரவரி 10-ம் தேதியிட்டு வெளியானது. அதில், ‘ஐ.ஆர் எட்டு நாத்துக் கட்டு ஐயாவோட கூத்துக் கட்டு’னு சினிமாவில் ஆடிப்பாடுறாங்க. இந்த ஐ.ஆர்-8 நெல்லுக்கு இன்னொரு பேரும் இருக்குதுங்க, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள்ல இந்த ரகத்தை ‘ரேடியோ நெல்’னு சொல்றாங்க. இதைப் பயிரிடச் சொல்லி, அடிக்கடி ரேடியோவில் அறிவிப்பாங்களாம். அதனால்தான் இப்படி ஒரு பேரு! என்று ஒரு துணுக்கு செய்தியை எழுதியிருந்தேன்.

‘அது ஐ.ஆர்.8 ரகம் இல்லை. ஏடிடீ-27 ரகம்...’ என்று தொலைபேசியிலும், கடிதம் வாயிலாகவும் வாசகர்கள் பதிவு செய்தார்கள். சரி, நம்ம வானொலி அண்ணாச்சியிடம் கேட்போம் என்று தொலைபேசியில் அழைத்தேன். ‘அந்தக் காலத்தில், ஏ.டி.டீ.27 ரகத்தையும் ரேடியோ நெல் என்றுதான் சொல்வார்கள். அதனால், நீங்கள் எழுதியது தவறான தகவல் அல்ல’’ என்றார்.

 ‘மரம்’ தங்கசாமி
‘மரம்’ தங்கசாமி


ரேடியோ நெல் போல, ரேடியோ விவசாயி ஒருவரை சந்தித்திருக்கிறேன். அவர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ‘மரம்’ தங்கசாமி. ‘‘திருச்சி வானொலியில ஒலிப்பரப்பான பி.எஸ்.மணியனோட மரப்பயிர்கள் தகவல்தான், என்னை மரம் வளர்ப்புப் பக்கம் எட்டிப் பார்க்க வைச்சுது. அந்த உரையை மட்டும் கேட்காமல் போயிருந்தா, இந்நேரம் எங்கயாச்சும் கூலி வேலை செய்துகிட்டிருந்திருப்பேன். அதனால சத்தமா சொல்வேன், நான் வானொலி விவசாயி’’ என்று உணர்ச்சி பொங்க சொல்வார், ‘மரம்’ தங்கசாமி. இறுதியாக 2009-ம் ஆண்டு ஊடகத்தில் பணியாற்றுபவர்களுக்கான நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் தென்கச்சி அண்ணாச்சி.

அண்ணாச்சி, இப்போ தொலைக்காட்சியில தினமும் வர்றீங்க. ரொம்பப் பிரபலமாகிட்டீங்க. பொது இடத்துல மக்கள் உங்களைப் பார்த்தால் தொந்தரவு செய்றாங்களா? என்று கேட்டேன்.

‘‘இதோ, இந்த விழாவில்கூட யாராவது என்னிடம் வந்து பேசுகிறார்களா... இல்லையே. ஆனால், குழந்தைகள் பார்த்தால், ‘தாத்தா, தாத்தா கதை சொல்லுங்க’ என்று ஆசையாக ஓடி வருகிறார்கள். பெரியவர்கள், என்னைப் பார்த்தாலும் பார்க்காதது மாதிரி ஓரமாகச் சென்றுவிடுவார்கள். இவரிடம் பேசினால், திருவள்ளுவர், வள்ளலார், காந்தி... போன்று நீங்களும் வாழுங்கள் என்று அறிவுரை சொல்லிவிடுவேன் என்ற பயமாக இருக்கலாம்’’ என்று தன் பாணியில் சொன்னார்.

‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி சுவாமிநாதனும், வானொலி விவசாயி மரம் தங்கசாமியும் இயற்கையில் கலந்தது, செப்டம்பர் 16-ம் தேதி அன்றுதான். இந்தத் தேதிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு; ‘உலக ஓசோன் தினம்.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism