Published:Updated:

புத்தம் புது காலை : ஐஆர் 8 அரிசியின் வரலாறும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நாம் சொல்ல வேண்டிய நன்றியும்!

88 கிலோ விதை நெல்லைப் பயிரிட்டு அவர்கள் 71 டன் அரிசியை மகசூல் செய்தவுடன் இந்த அற்புத அரிசி உலகத்தின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது.

1960-70களில் வறட்சி, பஞ்சம், பசி, பட்டினி, வறுமை என்ற தொடர்சங்கிலி உலகை வதைத்துக் கொண்டிருந்தபோது, அந்த வறுமைச் சங்கிலியைத் துண்டித்த பெருமை ஐஆர்-8 என்ற அரிசி வகைக்கு அதிகம் உண்டு.


"குறைந்த காலத்தில் அதிக மகசூல்" என்ற சிறப்பினைக் கொண்டதால், இந்த ஐஆர்-8 நெல் அறிமுகப்படுத்தப்பட்டதுமே உலகெங்கும் பிரசித்தி பெற, அதனை நமது நாட்டில் முதன்முதலாக, தனது பூமியில் 1967-ல் பயிரிட்டு வெற்றிகண்டவர் ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த நிக்காந்தி சுப்பாராவ் என்பவர் தான்.

தனது பூமியில் இந்த நெல்லை விளைவித்து, இந்திய நெல் விளைச்சலில் ஒரு பசுமைப்புரட்சியை உருவாக்கியவர் என்பதால், 'மிஸ்டர் ஐஆர் எட்டு' என்றே அழைப்பட்டார். சுப்பாராவைத் தொடர்ந்து இந்த நெல்லைப் பயிரிட்டு வெற்றிகண்ட விவசாயிகளில் ஒருவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயி கணேசன், பிறகு தனது மகனுக்கு ஐஆர்-8 என்றே பெயரிட்டதாகவும் சொல்வார்கள்.


எல்லாம் சரி, இவ்வளவு மகிமைமிக்க இந்த அரிசியை ஐஆர்-8 என்று ஏன் சொல்கிறோம் என்று எப்போதாவது நாம் யோசித்திருக்கிறோமா? உண்மையில், ஐஆர்-8 என்பதற்கு, இன்டர்நேஷனல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட் (IRRI) என்ற சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்புகளில் ஒரு வகை அரிசி என்பதுதான் பொருள்.

பாரம்பர்ய அரிசி ரகங்கள்
பாரம்பர்ய அரிசி ரகங்கள்

ஆம்... 1960-ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் அரசு மற்றும் ஃபோர்ட் ராக்ஃபெல்லர் அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய இந்த ஐஆர்ஆர்ஐ, முழுக்க முழுக்க அரிசி ஆராய்ச்சிக்கென உருவாக்கப்பட்டு தனது "அரிசி அறிவியலின்" மூலமாக கோடிக்கணக்கான மக்களின் பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறது.

மிக எளிய புல் இனத்தைச் சேர்ந்த நம் நெற்பயிர்களை இயற்கை சீற்றங்கள், நோய்த் தாக்குதல்கள், பூச்சித் தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து, குறைந்த காலத்தில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்று கண்டுபிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவரும் அமைப்பு ஐஆர்ஆர்ஐ. இப்போது நெல் விளைவிக்கும் 17 ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பி, உலகின் உணவு சார்ந்த சவால்களை எதிர்கொள்ள பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவற்றில், இந்த ஐஆர்-8 அரிசி என்பது ஐஆர்ஆர்ஐ அமைப்பின் ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பீட்டர் ஜென்னிங்ஸ் மற்றும் டாக்டர் ஹென்றி பீச்செல் ஆகியோரின் கண்டுபிடிப்பு என்கிறார்கள். ஐஆர் எட்டு என்பது ஏற்கெனவே அந்த அமைப்பு மேற்கொண்டு வந்த 38 பரிசோதனை கலப்பு பயிர்களில் எட்டாவதாக இருந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டது என்கிறார்கள்.

உண்மையில் இந்தோனேசிய அரிசி இனத்தையும், தைவானின் அரிசி இனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்தக் கலப்பின அரிசியின் விதைகளை 1966 நவம்பர் 29 அன்று, பிலிப்பைன்ஸ் நாட்டு விவசாயிகளுக்கு பரிசோதனை முயற்சியாக ஐஆர்ஆர்ஐ வழங்கியது. 88 கிலோ விதை நெல்லைப் பயிரிட்டு அவர்கள் 71 டன் அரிசியை மகசூல் செய்தவுடன் இந்த அற்புத அரிசி உலகத்தின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது.

அரிசி
அரிசி

ஐஆர்ஆர்ஐ ஆய்வகத்தில், தான் உருவாக்கிய ஐஆர்-8 நெல்மணிகள் பல மடங்கு அதிக விளைச்சலைத் தருவதைக் கண்ட டாக்டர் பீச்செல் அதனைப் பொதுவுடைமை ஆக்கினார். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் ஏறத்தாழ 2300 விவசாயிகள் நடந்தும், சைக்கிள், பஸ் ஆகியவற்றில் பயணித்தும் அவரது நிறுவனத்திற்கு வந்து நெல் விதைகளைப் பெற்றுக் கொண்டனராம்.

நெல்விதைகளை மற்ற ஆசிய நாடுகள் அனைத்திற்கும் பீச்செல் அனுப்பி வைக்க, அப்போது இந்தியாவில் வேளாண் துறை அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியன் முயற்சியில் நோபல் பரிசுபெற்ற வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லக் (Norman Borlaug), எஸ்.கே. தத்தா ஆகியோரின் வழிகாட்டுதலில்தான் ஒரு மிகப்பெரிய உணவுப் புரட்சிக்கு உதவுகிறோம் என்று தெரியாமலேயே பங்கெடுத்தாராம் 29 வயதே ஆன சுப்பாராவ்.

பாரம்பரிய நெல்விதைகள் ஹெக்டேருக்கு இரண்டு டன் மகசூல் தந்துகொண்டிருந்த காலத்தில், இந்த ஐஆர்-8 அவருக்கு ஹெக்டேருக்கு 7 டன் மகசூலை அளிக்க, அதே சமயத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கணேசன் ஒரு ஹெக்டேரில் 16 டன் மகசூல் பார்க்க, மற்ற விவசாயிகளும் ஐஆர்-8 நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர்.

நெல் வயல்
நெல் வயல்

இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகளும் ஐஆர்-8 விவசாயத்தில் குதித்தன. என்னதான் விளைச்சலைக் குவித்தது என்றாலும், ஐஆர் எட்டு வகை நெல்லில் நோய்த்தொற்று, உடையும் தன்மை போன்ற சில பிரச்னைகள் இருப்பதைக் கண்ட டாக்டர் பீச்செல், குருதேவ் குஷ் என்ற பிலிப்பைன்ஸ் வாழ் இந்திய விஞ்ஞானியுடன் இணைந்து மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாக, ஐஆர் 36, ஐஆர் 72 என்ற மேம்பட்ட புதிய வகைகளை 1990-ம் அறிமுகப்படுத்தினார்.

ஐஆர்-8, ஐஆர்-36, ஐஆர்-72 என்று ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, சமீபத்தில் கூட, வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்த பீட்டா கரோட்டீனை தன்னுள் அடக்கிய மஞ்சள் நிற நெல்மணிகளை உருவாக்கி, Golden Rice என்ற பெயரில் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது ஐஆர்ஆர்ஐ. ஆனால் இவையனைத்தும், ஐஆர்ஆர்ஐ என்ற அமைப்பின் செயலாக்கம் மட்டுமன்றி, நாட்டின் தேவை என்பதை உணர்ந்த பிலிப்பைன்ஸ் அரசு,"யூன்-புழா-யூன்" என்ற புதியதொரு திட்டத்தின் மூலமாக, பிலிப்பைன்ஸ் நாட்டு விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கும், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை இலவசமாகக் கற்றுக் கொடுத்து வருகிறது.

அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இஃயூகோ அடுக்குநில அரிசி சாகுபடியை அழியாமல் பராமரித்தும் வருகிறது. பொதுவாக, பாரம்பரிய அரிசி போல இந்த ஆராய்ச்சி அரிசி வகைகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், விவசாயிகளும் விவசாய நிலங்களும் குறுகி, அதேசமயம் மக்கள்தொகை பெருகி வரும் இன்றைய சூழலில், பெரும் விளைச்சலை அளித்து உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் பாதுகாப்பதில் மிகப் பெரும்பங்கு வகிக்கிறது பிலிப்பைன்ஸை தலைமையகமாகக் கொண்ட ஐஆர்ஆர்ஐ அமைப்பு. ஆம்... ஐஆர் எட்டில் மட்டுமல்ல. அனைவரது பசியையும் போக்கும் அரிசி அறிவியலை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றி வருகிறது இந்த சிறிய, வறிய புத்திசாலித்தனமான நாடு.

#பிலிப்பைன்ஸ் தின சிறப்புப் பதிவு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு