Published:Updated:

`இயற்கையா விளைஞ்ச காலிஃப்ளவரின் ருசியே தனி!' - காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்ட அனுபவம் - 3

காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன்

மாடித்தோட்டம் அமைத்துச் சுமார் மூன்று வருடத்தில் நிறைய அனுபவங்கள் கற்றுக்கொண்டிருக்கிறார் காயத்ரி. படப்பிடிப்பு நேரத்துக்கு ஏற்ற மாதிரி தனது மாடித்தோட்ட பராமரிப்பை மேற்கொள்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் சினிமாவில் `மனதைத் திருடி விட்டாய்', `ஏப்ரல் மாதத்தில்', `வசீகரா' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி ஜெயராமன். தற்போது பெங்களூரில் வசிக்கும் காயத்ரி ஜெயராமன் மாடித்தோட்டம் ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் விளையும் காய்கறிகளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், தனது யூடியூப் சேனலிலும் பதிவிட்டுவருகிறார். அவரின் மாடித்தோட்டம் குறித்த சில தகவல்கள் இங்கே...

காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன்

சில வருடங்களுக்கு முன்னால் கணவரின் வேலை விஷயமாகப் பெங்களூருக்குக் குடியேறினார் காயத்ரி. இப்போது வசிப்பது தனி வாடகை வீடுதான். வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் இடவசதி இருந்திருக்கிறது. இந்தப் பகுதியில் கிளைமேட்டும் நன்றாக இருந்திருக்கிறது. அதனால் தண்ணீர் செலவும் அதிகம் இருக்காது என ஐடியா தோன்றவே தோட்டத்தில் சில செடிகளை வளர்த்துப் பார்த்திருக்கிறார் காயத்ரி. அதில் பூச்செடிகள் நன்றாகவே வளர்ந்திருக்கிறது. ஆனால், காய்கறிச் செடிகளின் வளர்ச்சி சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. உயரமாக இருந்த மா மரங்களுடைய கிளைகளால் காய்கறிகளுக்குப் போதிய வெளிச்சம் கிடைக்காமல்தான் காய்கறி விளைச்சல் சரியாக இல்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்போதுதான் நடிகர் மாதவனின் மாடித்தோட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார் காயத்ரி ஜெயராமன். அவர் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்த படங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

மாதத்தில் சில நாள் படப்பிடிப்புக்காக வெளியில் செல்ல நேர்ந்தாலும், சில நாள்களில் வீட்டில் ஓய்வெடுக்க நேரம் கிடைத்தது. அப்போதுதான் மாடித்தோட்டம் பற்றிய சிந்தனை உதிக்கவே செடிகளை நட ஆரம்பித்திருக்கிறார். அனுபவம் இல்லாமல் மாடித்தோட்டத்தை அமைக்க முடியாது என்பதால் பக்கத்திலிருந்த நிறுவனத்திடம் கேட்டு மாடித்தோட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். இவர் கேட்டபடி அவர்களும் மாடித்தோட்டத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். கூடவே செடிகளை வளர்ப்பதற்கான சில ஆலோசனைகளையும் கொடுத்துவிட்டுச் சென்றனர். சில அடிப்படை விஷயங்களை மட்டும் கற்றுக்கொண்டு முதல்கட்டமாகச் சோதனை முறையில் ஆறு பைகளில் லெட்டூஸ் கீரை, பாலக்கீரை, தக்காளிச் செடிகளை மட்டும் வளர்த்தார். இப்படித்தான் ஆரம்பமானது காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்டம்... தண்ணீர் தவிர, வேற எந்த உரங்களையும் தனது செடிகளுக்குப் பயன்படுத்தவில்லை. ஆனால், ஆச்சர்யப்படுகிற அளவுக்கு விளைச்சல் கிடைத்தது. அதுவும், தக்காளியின் நிறம் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு சிவப்பாக இருந்திருக்கிறது. அதன் பின்னர், அதைப் புகைப்படம் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன்
`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்!' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1

``எத்தனை நாளைக்குத்தான் தக்காளி, வெண்டைனே பயிர் செய்றது. நாமளும் வித்தியாசமா ஏதாவது செய்யணும்" என எண்ணம் உருவாகவே காலிஃப்ளவர் பயிரை முதல்கட்டமாகப் பயிரிட யோசித்திருக்கிறார். ஆனால், இவருக்கு ஆலோசனை கொடுத்தவர்கள் `காய்கறித்தோட்டத்துல காலிஃப்ளவர் வேண்டாம், புழுக்கள் அதிகமா வரும்' என்று சொல்லவே அதெப்படி புழுக்கள் வரும், வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதியுடன் காலிஃப்ளவர் நடவு செய்து, அதைச் சரியாகக் கவனித்து வந்திருக்கிறார். இவரின் முயற்சிக்கேற்ப காலிஃப்ளவரும் நல்ல முறையில் விளைந்திருக்கிறது. அதை வீட்டில் சமைத்து உண்ணும்போதுதான் அதன் இயற்கையான சுவையை உணர ஆரம்பித்திருக்கிறார். இவ்வளவு நாள் நாம சாப்பிட்ட காலிஃப்ளவர் இயற்கையானது இல்லையெனத் தெரிந்துகொண்ட தருணமும் அதுதான். அதன் பின்னர்தான் கூடுதலாக இன்னும் பல காய்கறிகளை விதைக்கலாம் என்ற எண்ணம் மனதில் உருவாகியிருக்கிறது. கத்திரி, கேரட், பீட்ரூட் என விதவிதமான காய்கறிகளைப் பயிர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடித்தோட்டம் அமைக்கும்போது மண்தொட்டியில் அமைத்தால் மொட்டைமாடியில் தண்ணீர் தேங்கும் என மெட்டல் தொட்டிகளில் செடிகளை வளர்க்க ஆரம்பித்தார். முதலில் 200 சதுர அடியில் மாடித்தோட்டம் அமைத்துப் பயன்படுத்தியிருக்கிறார். சில செடிகளில் தொடர்ந்து விளைச்சல் நன்றாகவும், சில செடிகளில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமலும் போக, அவற்றிலிருந்து நிறைய பாடங்களும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பூச்சித் தாக்குதல்களைச் சமாளிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டார். பூச்சித் தாக்குதல் வராமல் தடுக்க வேப்ப எண்ணெய்க் கரைசல் மாதிரியான இயற்கையான வழிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறார். இதனால் பூச்சிகள் தாக்குதல் கட்டுக்குள் வந்தது. சமையல் செய்யும்போது வீணாகும் உணவுப் பொருள்களைப் பானையில் சேமித்து, அதை மட்க வைத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார். இப்படிப் பராமரித்துக் கொண்டிருந்தவருக்குச் சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்குக் குடிபெயர வேண்டிய சூழல். தன் குழந்தையைப் போல வளர்த்து வந்த மாடித்தோட்டத்தைத் தன் நண்பருக்குக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் புதிதாகக் குடியேறிய வீட்டில் மாடித்தோட்டம் அமைத்தார் காயத்ரி. ஆரம்பத்தில் விளைச்சல் சற்றுக் குறைவாகக் கிடைக்கவே, பராமரிப்பை அதிகப்படுத்த ஆரம்பித்தார். அதன் பலனாகச் சிவப்பு வெண்டைக்காய், தண்டுக்கீரை தக்காளி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து அதைத்தான் சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறார்.

காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன்
`6 வகை கொய்யா, ஆரோக்கியத்திற்கு மூலிகைகள்!' - மதுரை முத்துவின் வீட்டுத்தோட்ட ரவுண்டப் - 2

மாடித்தோட்டம் அமைத்துச் சுமார் மூன்று வருடத்தில் நிறைய அனுபவங்கள் கற்றுக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு நேரத்துக்கு ஏற்ற மாதிரி தனது மாடித்தோட்ட பராமரிப்பை மேற்கொள்கிறார். எதிர்காலத்தில் நிலத்தில் பெரிய அளவில் விவசாயம் செய்யும் ஆர்வமும் இவருக்கு இருக்கிறதாம்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு