Published:Updated:

`படித்தது 8-ம் வகுப்பு, கண்டுபிடித்தது கலக்கல் விவசாய கருவி!' - தென்னை விவசாயிகளுக்கு கைகொடுத்த நபர்

தென்னை மரம் ஏறும் கருவி
தென்னை மரம் ஏறும் கருவி

இவருடைய கண்டுபிடிப்பு விவசாயத்தில் முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு துறையில் ஆர்வம் இருந்து, அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தால் எவரும் சாதிக்கலாம். அப்படி, ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதித்திருக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன்.

கருவியுடன் ரங்கநாதன்
கருவியுடன் ரங்கநாதன்

இவருடைய கண்டுபிடிப்பு விவசாயத்தில் முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தென்னிந்தியாவில் கேரளாவுக்கு அடுத்து தென்னைச் சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கிறது. திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. முன்பெல்லாம் ஆட்கள் நிறைய இருந்ததால், தென்னை மரம் ஏறுவதற்கு பிரச்னையில்லாமல் இருந்தது. இப்போது நிறைய பேர் வெவ்வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டதால், தென்னை மரம் ஏறுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்நிலையில், தென்னை மரம் ஏறும் கருவி விவசாயத்தில் ஒரு புரட்சியாகப் பேசப்படுகிறது.

தென்னை மரம் ஏறும் கருவியைக் கண்டுபிடித்த ரங்கநாதன் என்கிற டி.என்.வெங்கட்டிடம் பேசியபோது, ``எனக்குச் சொந்த ஊரு நரசிம்மநாயக்கன் பாளையம்தான். சூலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிச்சேன். நான் ஆறாவது படிக்கும்போது இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். வீட்டின் சூழ்நிலை காரணமாக சம்பாதிக்க வேண்டிய தேவை எழுந்தது. அப்போது சூலூரில் தமிழ்நாடு காதி கிராம தொழில் வாரியத்தின் அலுவலகம் தொடங்கப்பட்டது. அங்கே பணிக்குச் சேர்ந்தேன். பணி செய்துகொண்டிருந்தபோது டெக்ஸ்டைல்ஸ் தொழில் குறித்து நிறைய தெரிந்துகொண்டேன். அப்போதுதான் பஞ்சை போட்டால் துணியாக வெளிவரும் கருவியெல்லாம் அறிமுகமாயிருந்தது.

கண்காட்சியில் கருவி
கண்காட்சியில் கருவி

அதேபோன்று துணி நெய்யும் கருவிகளை எப்படி கையாளுவது, அதை எப்படி ரிப்பேர் செய்வது, புதிய கருவிகள் எப்படித் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது உள்ளிட்ட விஷயங்களை டெக்ஸ்டைல் நிறுவனங்களோடு தொடர்பில் இருந்ததால் தெரிந்துகொண்டேன். இதன் காரணமாக என்னுடைய பொறியியல் அறிவும் வளர்ந்தது. அந்த அனுபவத்தின் காரணமாக நரசிம்மா மில் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அரசு வேலைக்கு இணையாக டெக்ஸ்டைல் வேலை பார்க்கப்பட்டது. அப்படியே அந்தப் பணி தொடர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கட்டத்தில் மில் வேலையிலிருந்து விலகி, பூர்வீக தொழிலான விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. பூர்வீக நிலத்தில் விவசாயத்தை மேற்கொண்டேன். கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தென்னை விவசாயம் மிகவும் முக்கியமானது. மரத்தை நட்டு வெச்சோமோ, வருஷம் ஆனா இவ்வளவு பணம் என்று கைக்கு வந்துவிடும். அதனால் தென்னை விவசாயம் நாளுக்கு நாள் அதிகரித்தது. எங்கள் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் தென்னை மரம் ஏறுவோர் தேங்காயைப் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருத்தர் தவறி மரத்திலிருந்து விழுந்துவிட்டார். அவருடைய இரண்டு கால்களும் ஊனமாகிவிட்டன. அவரை ஊரில் பார்க்கும்போதெல்லாம் மனசு உறுத்திக்கிட்டே இருக்கும். இதற்கு ஏன் ஒரு கருவியைக் கண்டுபிடிக்கக் கூடாது என்று எண்ணம் வந்தது.

விருது பெறும் ரங்கநாதன்
விருது பெறும் ரங்கநாதன்
சைக்கிளில் கலப்பையைப் பொருத்தி நூதன விவசாயம்; நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்திய பலே விவசாயி!

தென்னை மரம் ஏறுவதற்கு கால்களும் கைகளும்தான் அடிப்படை. இந்தக் கால்களும் கைகளும் இயங்குவதற்கு அதாவது தாங்கிப் பிடித்துக் கொள்வதற்கு ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்தேன். அதன்படியே கருவியை வடிவமைத்தேன். இந்த வடிவமைப்பை முதலில் ஊக்கப்படுத்தியது மதுரையில் உள்ள சேவா அமைப்புதான். அந்த அமைப்புதான் எனது கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தியது. தொடர்ந்து நபார்டு உதவியுடன் இந்தக் கருவியை இன்னும் மேம்படுத்தினேன். பிறகு பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தேன். தமிழ்நாடு அரசும் இந்தக் கருவியை மேம்படுத்துவதற்கு மானியம் அளித்தது. 2012-ம் ஆண்டு இந்தக் கருவியை தேசிய கண்டுபிடிப்பு ஆணையத்தின் கண்காட்சியில் வைத்தேன். அவர்களும் அங்கீகரித்து இதற்கான விருதையும் அளித்தார்கள். தொடர்ந்த குஜராத் மாநில அரசு இந்தக் கருவியை ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

நாங்கள் வடிவமைத்திருக்கும் இந்தக் கருவியைக் கொண்டு தென்னை மரம் மட்டுமல்லாமல் பனை மரம், தேக்கு மரம், சில் ஓக் ஆகிய மரங்களிலும் ஏற முடியும். இதற்காக மூன்று வகையான கருவிகளை வடிவமைத்திருக்கிறோம். இப்போதெல்லாம் தென்னை மரம் ஏறும் கருவியை மட்டும் கேட்காமல் பல மரங்களை ஏறக்கூடிய ஒருங்கிணைந்த கருவியைத்தான் கேட்கிறார்கள். ஏனென்றால் மல்ட்டி ட்ரீ கிளிம்பர் கருவி மூலம் தென்னை மரம் மட்டுமல்லாமல் பனை, தேக்கு, ரப்பர், சில்வர் ஓக் போன்ற மரங்களெல்லாம் ஏற முடியும். ஒவ்வொரு கருவியும் 8,000 - 10,500 ரூபாய் விலைக்குள் அடங்கும். இந்தக் கருவிகளின் இன்னொரு அம்சம் என்னவென்றால் உட்கார்ந்துகொண்டே தேங்காய்களைப் பறிக்கலாம். பெண்கள், வயதானவர்களும் இந்தக் கருவியைக் கொண்டு மரம் ஏறலாம்.

கருவியை மரத்தில் பொருத்தி கைகளால் இயக்குவதை தூக்கி மேலே வைத்து, கால்களால் இன்னொரு அமைப்பை மேலே தூக்கிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான். இதற்கு எரிபொருளோ, மின்சாரமோ எதுவும் தேவையில்லை. எளிதாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு கைகளிலேயே எடுத்துச் செல்ல முடியும். ஒருமுறை வாங்கினால் பல ஆண்டுகளுக்கு உழைக்கும். இந்தக் கருவியைக் கண்டுபிடித்ததற்கான பேடன்ட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். இதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அரசுகளிடம்தான் இருக்கிறது.

தென்னை மரம் ஏறும் கருவி
தென்னை மரம் ஏறும் கருவி
சாயத் தொழிற்சாலைகளுக்காக கொள்ளை போகும் பனை மரங்கள்; தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

ஏனென்றால் ஒரு வருஷத்துக்கு மூன்று முறை தென்னை மரம் ஏறி தேங்காயைப் பறிக்க வேண்டி இருக்கிறது. தென்னை மரம் ஏறுவதற்கு ஆள் கிடைப்பதே சிரமம். அப்படியே கிடைத்தாலும் கூலி கொடுத்து கட்டுப்படியாகாது. தென்னை விவசாயம் நசியாமல் இருக்க வேண்டுமென்றால் கருவியைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். தென்னை மரம் ஏறும் கருவி விவசாயிகளிடையே சென்று சேர்வது அவசியம். அடுத்து பாக்கு மரம் ஏறும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு