Published:Updated:

18 ஆண்டுகளில் 10 லட்சம் விதைகள்... பாரம்பர்ய விதைகளின் 'தூதுவர்' சங்கீதா சர்மா!

சங்கீதா சர்மா
சங்கீதா சர்மா

அன்னதானா சூழலியல் பண்ணை சார்பாக பத்து லட்சத்திற்கும் அதிகமான பாரம்பர்ய விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

"இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் விதைகளுக்காக எம்.என்.சி கம்பெனிகளை நம்பியிருந்தனர். அந்த விதைகளை ரசாயனங்களுடன் சேர்த்து அதிக விலைக்கு வாங்கினர். அதனால் அவர்கள் அதிக செலவு செய்ய நேரிட்டது. அவர்களுக்காகத்தான் இந்த அன்னதானா நிறுவனத்தை நடத்தி வருகிறேன்." திருமதி சங்கீதா சர்மாவின் 'விதை' பயணத்துக்கான வார்த்தைகள்தான் இது. கர்நாடகா விவசாய வட்டாரங்களில் கர்நாடகாவின் தங்கம் என்றே அழைக்கப்படுகிறார் இவர்.

சங்கீதா சர்மா
சங்கீதா சர்மா

சங்கீதாவின் தந்தை பர்மநந்த் சர்மா, இரண்டாம் உலகப் போரின்போது இராணுவ பால் பண்ணையில் பணியாற்றி முன்னரே ஓய்வும் பெற்றவர். தனது சேமிப்பு மற்றும் குடும்பத்தினரின் உதவியிலிருந்து, பெங்களூரின் புறநகரில் 30 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலம் முழுவதும் பாறைகள், புதர்கள் மற்றும் பாம்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இப்போது இந்த நிலம் பசுஞ்சோலையாக மாறியிருக்கிறது. இந்த நிலத்தில் மொத்தம் 5 ஏக்கர் பரப்பளவில், அன்னதானா வேளாண் சூழலியல் பண்ணையும் செயல்பட்டு வருகிறது.

ஒரு தாவரத்திலிருந்து 24 கிலோ விளைச்சல் கிடைக்கும் கத்திரி முதல் தக்காளி, மிளகாய், பல வண்ண மக்காச்சோளம், சூரியகாந்தி, மாதுளை, மர ஆப்பிள், கோதுமை மற்றும் தினை போன்ற 800-க்கும் மேற்பட்ட விதைகள் இவரிடம் இருக்கின்றன. இது கடந்த 18 ஆண்டுகளாக சங்கீதா சர்மாவின் விதை வங்கியில் சேமிக்கப்பட்டு வருகின்றன. அன்னதானா சூழலியல் பண்ணை சார்பாக பத்து லட்சத்திற்கும் அதிகமான பாரம்பர்ய விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. கலப்படம் இல்லாத விதைகளை தவிர்த்து பாரம்பர்ய விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் 'அன்னதானா'வை நிறுவினார், சர்மா.

பாரம்பர்ய விதைகள்
பாரம்பர்ய விதைகள்

விவசாயிகளின் கஷ்டங்களை கள ஆய்வு செய்ய முற்பட்டார், சங்கீதா சர்மா. ஒவ்வொரு கிராமமாகப் பயணித்தார். துரதிர்ஷ்டமாக அவர் பார்த்த கிராமங்கள் எல்லாமே வறட்சியிலும் பஞ்சத்துக்கும் ஆளாகி இருந்தன. அதற்கான காரணங்களை ஆராய்ந்தார். விலை உயர்ந்த கலப்பின விதைகளுக்காகவும் ரசாயன உரங்களுக்காகவும் விவசாயிகள் காத்துக் கொண்டிருப்பதும், பாரம்பர்ய விவசாய முறைகளை கைவிட்டதும்தான் விவசாயிகளின் கஷ்டங்களுக்குக் காரணம் என்பதை கண்டுபிடித்தார். இதனால்தான் பல விவசாயிகள் கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்தல் நடந்து வருகிறது என்பதையும் உணர்ந்தார். இதுதான் சர்மாவிற்குள் பாரம்பர்ய விவசாயத்தைப் பற்றிய விதையை விதைத்திருக்கிறது. அதற்கு தீர்வளிக்க தொடங்கப்பட்ட 'அன்னதானா' இன்று ஐரோப்பிய நாடுகள் வரை பிரபலமாகி இருக்கிறது.

'சிறுகுறு விவசாயிகள் நலனைக் காக்க வேண்டும். பாரம்பர்ய விவசாயம் தழைத்தோங்க வேண்டும்' என்பதே சங்கீதா சர்மாவின் நோக்கம். கடந்த ஆண்டு பெய்த வெள்ளத்தால் சாகுபடி பரப்பில் ஒரு பகுதி அதிகமான சேதம் கண்டது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து விவசாயிகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறார். விதைகள் கொடுப்பது தவிர, மாடித்தோட்டம் அமைத்தல், பாரம்பர்ய விவசாய முறைகளை சொல்லிக் கொடுத்தல் எனப் பல வழிகளிலும் பயிற்சிகளைக் கொடுத்தும் வருகிறார். 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல பயிற்சியாளர்களைக் கொண்டு 20,000 விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களுக்கு பாரம்பர்ய விவசாயத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மரபணு மாற்ற உணவு குறித்த 'பாதுகாப்பான உணவு எனது உரிமை' என்ற பிரசாரத்தையும் தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து அதில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

தக்காளி
தக்காளி

பல சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவிகளிலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், விவசாயம் அவரது மரபணுவிலே இருந்ததால், தனது கவனத்தை விவசாயத்தின் பக்கம் திருப்பினார். "உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுவதால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ண முடியாது. என் உயரம் எனக்குத் தெரிந்தது. அந்த உயரத்தை அடைந்தபோது என் வேலையை விட்டுவிட முடிவு செய்தேன். அப்படியே வேலையை விட்டுவிட்டு, என் தந்தை வைத்திருந்த பண்ணையில் தஞ்சமடைந்துவிட்டேன். நான் இந்தப் பண்ணையில் பிறந்து வளர்ந்தவள். ஒரு குழந்தையாக நான் மண்ணுடன் விளையாடுவதை நேசித்தேன். மரங்கள், பூக்கள் மற்றும் காட்டு உயிரினங்களுக்கு இடையில் இருந்தபோது நான் மகிழ்ச்சியாக இருந்தேன்" என வேலையை விட்டு பண்ணைக்குச் சென்றபோது, சங்கீதா சர்மா உதிர்த்த வார்த்தைகள் இவை.

தனது பண்ணையில் தந்தை உபயோகப்படுத்திய ரசாயன உரங்களில் இருந்தே இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். ஏன் ரசாயனம் உபயோகிக்க வேண்டும், ஏன் கலப்பின விதைகளை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து அதற்கு விடையும் கண்டுபிடித்திருக்கிறார், சங்கீதா சர்மா. யார் வேண்டுமானாலும் இவரது பண்ணையைப் பார்வையிடலாம், எப்போது வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம்.

Vikatan

2018-ம் ஆண்டு கர்நாடக மகளிர் சாதனையாளர் விருது, சமீபத்தில் வாங்கிய கரிம பல்லுயிர்ப் பாதுகாப்புக்கான விருது என அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத உழைப்புக்காக சங்கீதா வாங்கிய விருதுகள் ஏராளம். ஒவ்வொரு விருது வாங்கும்போதும், இவர் உச்சரிக்கும் வார்த்தை "ரசாயன வேளாண்மையிலிருந்து எதிர்காலச் சந்ததியைப் பாதுகாப்போம்" என்பதுதான். இதைச் சொல்லாக மட்டும் இல்லாமல், செயலிலும் செய்து காட்டிக் கொண்டிருக்கிறார், சங்கீதா சர்மா.

அடுத்த கட்டுரைக்கு