நாட்டு நடப்பு
Published:Updated:

கறவை மாடுகள் வளர்ப்பு... கௌரவமான வருமானம்! பால் உற்பத்தியில் கலக்கும் பெண்கள்!

பால் உற்பத்தியில் கலக்கும் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பால் உற்பத்தியில் கலக்கும் பெண்கள்

பால் உற்பத்தி

பாலுக்கு உரிய விலை இல்லை, அதிகரித்து வரும் தீவனச் செலவு எனப் பால் உற்பத்தியில் சில பிரச்னைகள் இருந்தாலும் கிராமப்புற பொருளாதாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதில் பால் உற்பத்திக்கு முக்கியப் பங்குண்டு. குறிப்பாகக் கறவை மாடு வளர்ப்பில் பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு என்ற ஊரில் செயல்படும் சீனிவாசன் சர்வீஸஸ் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம், பால் உற்பத்தி செய்யும் பெண் விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. அந்த வகையில் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இரண்டு பெண்களின் கதையைத்தான் இங்கே பார்க்கிறோம். போளூர் அடுத்த ஏரிகுப்பம் அண்ணா நகரைச் சேர்ந்த விஜய லட்சுமியை ஒரு பகல் வேளையில் சந்தித்துப் பேசினோம்.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

“பொறந்தது இந்த ஊருதான். பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுக்கப்புறம் கல்யாணமாச்சு. அப்படியே விவசாயத்துக்கு வந்துட்டோம். விவசாயத்தோடு ஒரு மாடும் வளர்த்துட்டு வந்தோம். வழக்கமா, மாடு மேய்க்கிறது, தண்ணி காட்டுறதுனு இருந்தோம். கிடைக்கிற பாலைக் கறந்து வித்துக்கிட்டு இருந்தோம். வந்தவரை லாபம்னுதான் இருந்தோம். 5 வருஷத்துக்கு முன்ன சீனிவாசன் அறக்கட்டளையிலிருந்து வந்தாங்க. ‘மாடுகள்ல பால் உற்பத்தியை அதிகரிக்கணும்னா, சில அறிவியல் தொழில்நுட்ப முறையைப் பின்பற்றணும். அதேமாதிரி ஒரே மாட்டை வெச்சு வளர்க்கிறதவிடக் கூடுதலா 2 மாடுகள வளர்த்தா வருமானமும் அதிகரிக்கும்’னு சொல்லி எங்கள அழைச்சுட்டுப் போய்க் கறவைமாடு வளர்ப்பு பத்தி பயிற்சியும் கொடுத்தாங்க.

பால் வாங்கும் பணியில்
பால் வாங்கும் பணியில்

அந்தப் பயிற்சியிலதான் பால்ல கொழுப்புச்சத்து, இதர சத்துகளை (எஸ்.என்.எஃப்) எப்படி அதிகரிக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். வழக்கமாகப் பால்ல கொழுப்புச்சத்து 4.6 - 4.8 பாயின்ட்டுக்குக் குறையக் கூடாது. எஸ்.என்.எஃப்னு சொல்லப்படுற இதர சத்துக்கள் 8 பாயின்டுக்கு கீழ குறையக் கூடாது. இப்படி இருந்தாதான் பாலுக்கு 30 ரூபாய்க்குக் குறையாம விலை கிடைக்கும். அதை அதிகரிக்கிறதுக்கான வழிமுறைகள் பத்தி பயற்சி கொடுத்தாங்க. அதேமாதிரி மாடுகள வாங்குறதுக்கு லோன் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தாங்க. அதன்படி 2 மாடுகள வாங்கினேன். இப்போ மொத்தமா 4 மாடுகள் இருக்கு” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

பால் வாங்கும் பணியில்
பால் வாங்கும் பணியில்

“முதல்ல மாடுகளைப் பராமரிக்கிறப்ப கடையிலிருந்து வாங்கிட்டு வர்ற தீவனம் போட்டு தண்ணி காட்டுவோம் அவ்வளவு தான். பயிற்சியெல்லாம் எடுத்ததுக்கப்புறம் கடலைப் புண்ணாக்கு அரைக்கிலோ, கேழ்வரகு கஞ்சி அரை லிட்டர், கடையில வாங்குற தீவனம் 2 கிலோனு ஒரு மாட்டுக்கு காலை, மாலைனு ரெண்டு வேளை கொடுத்திடுவோம். நாங்க மேய்ச் சலுக்கு விடுறதால, பசுந்தீவனம் தனியா கொடுக்கிறதில்ல.

சுழற்சி முறையில 2 - 3 மாடுகள் எப்பவுமே பால் கறந்துட்டு இருக்கும். அந்த வகையில ஒரு நாளைக்கு 17 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் 30-32 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். அந்த வகையில மாசத்துக்கு 15,300 ரூபாய் வருமானம். இதுல பாதி தீவன செலவுக்குப் போயிடும். மீதிதான் கையில நிக்கும்.

கொள்முதல் நிலையம்
கொள்முதல் நிலையம்

இந்த வருமானம் போதாது. கூடுதலா வருமானம் பாக்குறதுக்கு ஏதாவது வழி சொல்லுங்கனு சீனிவாசன் அறக்கட்டளைக் காரங்ககிட்ட சொன்னேன். ‘பால் கொள் முதல் நிலையம் கட்டித் தர்றோம். பால் வாங்குறீங்களா’னு கேட்டாங்க. சரினு சொன்னதும், எங்க ஊர்லயே 3,10,000 ரூபாய் மதிப்புல கொள்முதல் நிலையத்தைக் கட்டிக் கொடுத்தாங்க.

இப்போ அந்தக் கொள்முதல் நிலையம் மூலமா, விவசாயிகள்கிட்ட இருந்து பாலை வாங்கித் தனியார் பால் நிறுவனத்துக்கு அனுப்பிட்டு இருக்கேன். தினமும் 400 லிட்டர் வாங்கி அனுப்பிட்டு இருக்கேன். அதுமூலமா மாசம் 8,000 ரூபாய் கிடைக்குது. மொத்தமா பால் உற்பத்தி, பால் வாங்குறது மூலமா மாசம் 23,300 ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவுகள் போக எப்படியும் மாசம் 12,000 ரூபாய் லாபம் நிக்கும்.

மாடுகளுடன் விஜயலட்சுமி
மாடுகளுடன் விஜயலட்சுமி

எனக்கு 3 பெண் பிள்ளைங்க. மூணு பேருமே அரசுப் பள்ளியில படிக்கிறாங்க. மூணு பேருக்குமே செல்வ மகள் திட்டத்துல மாசம் 1,000 ரூபாய்னு 3,000 ரூபாய் போட்டுக் கிட்டு வர்றேன். பிள்ளைங்களுக்கு 18 வயசு ஆனதுக்கப்புறம் படிப்புக்கு 2 லட்சம், 21 வயசுக்கு அப்புறம் திருமணத்துக்கு 4 லட்சம் கிடைக்கும். அதுக்கு இப்போதிருந்தே சேமிச்சு கிட்டு வர்றேன். இந்தப் பால் உற்பத்திக்கு வந்ததுக்கப்புறம்தான் தொலைதூர கல்வியில பி.ஏ தமிழ் இலக்கியம் சென்னைப் பல்கலைக் கழகத்துல முடிச்சேன். போட்டித் தேர்வு களுக்கும் எழுதிக்கிட்டு இருக்கேன். இந்தக் கணிசமான வருமானம்தான், பிள்ளைங்கள படிக்க வெச்சுகிட்டு, வீட்டுச் செலவையும் பாத்துக்கிட்டு இருக்க உதவியாக இருக்கு. இதோடு கொஞ்சம் விவசாயமும் இருக்குது. அதை என் கணவர் பாத்துக்குறாரு. சுய சம்பாத்தியமா, என் சொந்தக்கால்ல நிக்குற துக்கு இந்தக் கறவைமாடுகள்தான் எனக்குக் கை கொடுத்துட்டு இருக்கு” என்று மாடுகளை அணைத்தவாறே விடைகொடுத்தார் விஜயலட்சுமி.

மாட்டுடன் லஷ்மி
மாட்டுடன் லஷ்மி

இதே ஊரைச் சேர்ந்த லஷ்மியும் 4 கறவை மாடுகள் வளர்த்து பால் உற்பத்தி மூலம் வருமானம் பார்த்து வருகிறார்.

போளூர் வட்டம், மாம்பட்டு அருகேயுள்ள மேற்குக் கொல்லை மேடு கிராமத்தில் மாடுகளைப் பராமரித்து வரும் பவானியைச் சந்தித்தோம். “எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் தான் இருக்கு. முதல்ல கன்னுக்குட்டிகள வாங்கி அதை மாடாக்கி விற்பனை செஞ்சு கிட்டு வந்தேன். 10,000 ரூபாய்க்கு மேல கன்னுக்குட்டிகள வாங்குவோம். அதை வளர்த்து 30,000, 40,000 ரூபாய்க்கு விப்பேன். ஒரு கணிசமான வருமானம் கிடைச்சுகிட்டு இருந்துச்சு.

பவானி
பவானி

அப்போதான் சீனிவாசன் அறக்கட்டளைக் காரங்க ‘நீங்க ஏன் கறவை மாடு வாங்கி வளர்க்கக் கூடாது’னு கேட்டாங்க. எனக்கு அவ்வளவு வசதி இல்லனு சொன்னேன். ‘கறவை மாடுகளை வாங்குறதுக்குக் கடன் வசதி ஏற்படுத்தித் தர்றோம்’னு சொன்னாங்க. அதன்படி 2 மாடுகள வாங்கினோம். இப்போ 5 மாடுகள் எங்கிட்ட இருக்கு. ஒரு நாளைக்கு 30 - 35 லிட்டர் பால் கறந்துட்டு இருக்கோம். ஒரு லிட்டர் 27 ரூபாய்னு இங்கே வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. இதுமூலமா மாசம் 24,000 - 30,000 ரூபாய் வருமானம் எடுத்துக்கிட்டு இருக்கோம். மேய்ச்சலுக்கு விடுறோம், தீவனப் புல் கொடுக்கிறோம். கடையில விக்குற தீவனம், தாது உப்புக் கலவை கொடுக்குறோம். உரிய நேரத்துல தடுப்பூசி போடுறோம்.

மகனுடன் பவானி
மகனுடன் பவானி

மாடுகளுக்கு இன்ஸூரன்ஸ் போடுறதுக்கும் வழிகாட்டினாங்க. அதன்படி 5 மாடுகளுக்கும் காப்பீடு செஞ்சிருக்கோம். பால்ல வர்ற வருமானத்த வெச்சுதான் என் மகனை டிகிரி படிக்க வெச்சேன். இப்போ என் பையன் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகிக்கிட்டு இருக்கான். அவன் போய்ச் சம்பாதிக்கிற வரை இந்தப் பால் வருமானம்தான் எங்கள காப்பாத்தும். வெளியில ஒரு வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிறதவிட, கறவைமாடு மூலமா வர்ற வருமானத்த ரொம்பக் கௌரவமா நினைக்கிறேன்” என்று விடை கொடுத்தார் பவானி.


தொடர்புக்கு, சீனிவாசன் சர்வீஸஸ் டிரஸ்ட், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்.

தொலைபேசி: 04181 299279

விவசாயிகளுக்கு உதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்குச் சில முக்கிய உதவிகளைச் செய்து ஊக்கம் அளித்து வரும் சீனிவாசன் சர்வீஸஸ் டிரஸ்ட்டின் அலுவலகம், போளூரை அடுத்து படவேட்டில் உள்ளது. இதன் கள இயக்குநர் தியாகராஜன் நம்மிடம் பேசியபோது, “டி.வி.எஸ் குழுமத்தின் சார்பில் 1996-ம் ஆண்டுத் தொடங்கப்பட்டது சீனிவாசன் சர்வீஸஸ் டிரஸ்ட். விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றி வருகிறோம். தற்போது 5 மாநிலங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவையாற்றி வருகிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் மேம்பாடு, வேளாண் வளர்ச்சி, கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் என்று இயங்கி வருகிறோம். இதில் மகளிர் மேம்பாடு என்ற வகையில் நபார்டு, போர்டு பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பெண்களுக்குத் தொழில் செய்ய சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் வசதி ஏற்படுத்தித் தருகிறோம்.

கால்நடை முகாம்
கால்நடை முகாம்

கிராமங்களில் கறவை மாடு வளர்ப்பு தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வருகிறது. குறிப்பாகப் பெண்களுக்கு வருமானம் ஈட்டுவதற்குக் கறவை மாடுகள் வாங்க கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். மாடுகளை வாங்குவது மட்டுமல்லாமல், அதை எப்படிப் பராமரிக்க வேண்டும், பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளையும் சொல்லிக் கொடுக்கிறோம். மாடுகளுக்கு இன்ஷூரன்ஸ் செய்வது என்பது நிறைய பேருக்குத் தெரியாமல் இருந்தது. அதை முறையாக எப்படிப் போடுவது என்பதற்கும் உதவி வருகிறோம். கால்நடை நோய் தடுப்பு முகாம் நடத்தி வருகிறோம். இதுவரையில் ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். 750 ஹெக்டேர் தனியார் மற்றும் அரசு நிலங்களில் மரங்களை வளர்த்துக் கொடுத்திருக்கிறோம். அருகிலுள்ள கொணாவெட்டு ஏரியை சீரமைத்துக் கொடுத்திருக்கிறோம். பள்ளிக்கூடங்கள், அங்கான்வாடி மையங்களை, மலைவாழ் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களைச் சீரமைத்திருக்கிறோம். கொரோனா காலங்களில் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்குப் பயிற்சி, கடன் வசதி என்று உதவி வருகிறோம். ஆர்வமுள்ள திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் எங்களை அணுகலாம்” என்றார்.

தியாகராஜன்,  சாரங்கபாணி
தியாகராஜன், சாரங்கபாணி

மாடுகளுக்குக் காப்பீடு செய்வது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கீழுர் கால்நடை உதவி மருத்துவர் சாரங்கபாணியிடம் பேசியபோது, “தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் ஆடு, மாடு, பன்றிகளுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். இதில் ஓராண்டு, மூன்றாண்டு என்ற வகையில் காப்பீடு செய்து கொள்ளலாம். ஓராண்டு காப்பீட்டுத் திட்டத்தில் 35,000 ரூபாய் விலை மதிப்புள்ள மாடுகளுக்கு அரசு மானியம் தவிர்த்து (50 சதவிகிதம்) விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ரூ.254 (50 சதவிகிதம்). எஸ்.சி, எஸ்.டி மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள விவசாயிகள் 155 ரூபாய் (30 சதவிகிதம்) கட்டினால் போதும். ரூ.35,000-க்கு மேல் விலை மதிப்புள்ள மாடுகளுக்கு 100 சதவிகித பிரீமியத் தொகையை விவசாயிகளே செலுத்த வேண்டும். அதாவது 50,000 ரூபாய் விலை மதிப்புள்ள மாட்டுக்கு 725 ரூபாயை பிரீமியத் தொகையாகச் செலுத்த வேண்டும்.

அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் அல்லது பால் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக மாடுகளுக்குக் காப்பீடு செய்துகொள்ளலாம். ஒரு விவசாயி 5 மாடுகள் வரை காப்பீடு செய்யலாம். ஆடுகள் என்றால் 50, பன்றிகள் என்றால் 25 எண்ணிக்கையில் காப்பீடு செய்யலாம். ஒவ்வோர் ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, அறிவிப்பு வெளியாகும். அந்தச் சமயத்தில் மேலே சொன்ன மானியத் தொகையில் காப்பீடு செய்துகொள்ளலாம்.

காப்பீடு செய்யும் மாடுகளுக்கு 2 முதல் 8 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆடுகளுக்கு 1 முதல் 3 வயதுக்குள் இருக்க வேண்டும். நிமோனியா, நுரையீரல் பாதிப்பு, வயிறு கோளாறு, தடுப்பூசி இல்லாத நோய்கள், விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்துவிட்டால் இழப்பீடு கிடைக்கும். அதேபோன்று தடுப்பூசி போட்டு தடுக்கக்கூடிய நோய்கள், பாம்புக்கடி, நிர்வாகத் தவறுகளால் ஏற்படும் கால்நடை உயிரிழப்புகளுக்கு இழப்பீடு கிடைக்காது. மனிதர்களைப் போலவே கால்நடைகளும் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்த பிறகு காப்பீட்டு நிறுவனத்துக்குப் பரிந்துரை செய்வார். அதன்பிறகு 15 நாள்களில் இழப்பீடு கிடைக்கும்” என்றார்.

கால்நடை மருத்துவர் சாரங்கபாணி, செல்போன்: 96559 46787.