Published:Updated:

புரெவி புயலிலும் சாயாத ரத்தசாலி! - பலம்காட்டும் பாரம்பர்ய நெல்

ரத்தசாலி நெல்லுடன் விக்டர் ஜேம்ஸ் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ரத்தசாலி நெல்லுடன் விக்டர் ஜேம்ஸ் ராஜா ( ம.அரவிந்த் )

படிச்சோம் விதைச்சோம்

ஞ்சாவூர்-அம்மாப்பேட்டை சாலையில் உள்ள பூண்டிதோப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. எம்.காம், பட்டதாரியான இவர் தற்போது தமிழ்நாடு சூழலியல் சுற்றுலா தொடர்பாக முனைவர் பட்டத்திற்கான (பி.ஹெச்.டி) ஆய்வு செய்து வருகிறார். அதோடு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகிறார்.

ஒரு காலை நேரத்தில் தனது வயலிலிருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவைச் சந்தித்தோம். ‘‘எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல அப்பா ஜெயபால் விவசாயம் பார்த்துட்டு இருந்தார். நெல், கரும்பு, கடலை, வெள்ளரி, மிளகாய் பயிர்களைத்தான் சாகுபடி செய்வார். இயற்கை விவசாயம் பத்தி இப்ப இருக்க விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்திலேயே எங்க அப்பா இயற்கை விவசாயத்துல இறங்கிட்டாரு. 20 வருஷத்துக்கு முன்னாடியே வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைத் துளிகூட ரசாயனம் இல்லாம விளைய வெச்சுட்டு இருந்தார்.

ரத்தசாலி நெல்லுடன் விக்டர் ஜேம்ஸ் ராஜா
ரத்தசாலி நெல்லுடன் விக்டர் ஜேம்ஸ் ராஜா

அதுல பல சிக்கலும் இருந்துச்சு. அப்பவும் இயற்கை விவசாயத்தைக் கைவிடல. கொஞ்ச நிலத்துல இயற்கை விவசாயத்தைத் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருந்தார். அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு இயற்கை விவசாயம் மேல பெரும் காதல் உண்டாயிடுச்சு. ஒருமுறை திருச்சியில் நம்மாழ்வார் ஐயா கூட்டத்தில கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. அப்போது நம்மாழ்வார் பேசிய பேச்சு எனக்குள்ள ஆழமான விதையாக விழுந்திடுச்சு.

விவசாயத்துல அப்பாவுக்கு உதவியாக இருந்தேன். ‘பசுமை விகடன்’ல வர்ற கட்டுரைகளைப் படிச்சு இயற்கை விவசாய நுணுக்கங்களைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். பசுமை விகடன்தான் நான் முழு விவசாயியாக மாற உதவியது. 6 வருஷமா பல ஊர்களுக்குப் போய் இயற்கை விவசாயம் தொடர்பா பேசிகிட்டு இருக்கிறேன்’’ அறிமுகம் முடித்தவர் ரத்தசாலி ரகம் சாகுபடி விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நெல்லைப் புடைக்கும் பணியில்
நெல்லைப் புடைக்கும் பணியில்

‘‘பாரம்பர்ய ரகங்கள்மீதான மரியாதை பசுமை விகடன் கட்டுரைகள் மூலமா அதிகமாச்சு. நம்முடைய பாரம்பர்ய ரகமான ரத்தசாலி நெல் ரகத்தைப் பயிர் செய்ய நெனச்சேன். தெரிந்த விவசாயி ஒருத்தரிடம் ரத்தசாலி ரக விதைநெல் 40 கிராம், துளசி வாசனை சீரகச் சம்பா விதைநெல் 230 கிராம் கிடைச்சது.

உடனே ரெண்டு ரகத்தையும் தனித் தனியாக நாற்று விட்டேன். ஒரு விதைநெல் அரையடி இடைவெளியில இருக்குமாறு நாற்று விட்டேன். 25 நாள்லயே நாற்று நல்லா வளர்ந்துச்சு. ஒவ்வொரு தூர்லயும் 8 சிம்புகள் வரை வெடிச்சிருந்துச்சு.

எங்க நிலம் செம்மண் கலந்த மணல் சாரி. நிலத்துல 60 சென்ட்ல ஆட்டுக் கிடை அமைச்சேன். வேப்பங்கொட்டைகளைத் தூளாக்கி வயல்ல தூவினேன். தண்ணீர் பாய்ச்சிச் சகதியாகக் கொழ கொழன்னு மாறுற வரைக்கும் உழவு பண்ணி மட்டப்படுத்தினேன். பிறகு, ஒரு நாள் விட்டு, தண்ணீர் காய்ஞ்ச பிறகு நடவு பண்ணினேன். 10 சென்ட்ல ரத்தசாலி, 50 சென்ட்ல துளசி வாசனை சீரகச் சம்பா நாற்றை நடவு செஞ்சேன். நாற்றின் அடி வேரை ஆழமாக அழுத்தாம, ஒவ்வொரு நாற்றுக்கும் ஒண்ணேகால் அடி இடைவெளியில நடவு செஞ்சேன். நாற்றோட வேர் பகுதியைச் சேத்தோட மேல் மட்டத்தில வெச்சாலே போதும். வெளியாளுங்களை விடாம வீட்டுல இருக்க ஆளுங்களே நடவு பண்ணினோம்.

ரத்தசாலி நெல்
ரத்தசாலி நெல்

நெற்பயிர் அதிக இடைவெளியோட இருக்குறதால வயல் காயாமல் தண்ணீர் பாய்ச்சினோம். வயல் நல்ல சகதியாக இருந்ததால தண்ணீரை நீண்ட நேரம் சேமிச்சு வெச்சுக்குது.

ஒரு நாற்றுக்கு 60 தூர்கள் வரை வெடித்து வளர்ந்துச்சு. 20 நாள்கள் கழிச்சு பயிர்களுக்கிடையே வளர்ந்திருந்த களைச் செடிகளைக் கால்லயே சேத்துல மிதித்து விட்டோம். இடைவெளி அதிகமாக விட்டு நட்டதால களைச் செடிகளை மிதிக்குறதுல எந்தச் சிரமும் இல்லை.

30-ம் நாள் பஞ்சகவ்யா தெளிச்சேன். 70 நாள்கள் வரை தண்ணீர் பாய்ச்சினேன். 80 நாள்லயே பயிரில் இருந்த நெல் திரட்சியாக விளைஞ்சு, பொன்னைப் போல மின்னிச்சு. மற்ற வயல்களுக்கு மத்தியில எங்க வயல் இருக்குறதால, எல்லோரும் நடவு செஞ்ச பிறகே நாங்க நடவு நட்டோம்.

ஆனால் எந்த வயல்லயும் இல்லாத அளவுக்கு 90 நாள்லயே ரத்தசாலி அறுவடைக்குத் தயாராகிடுச்சு. இதனால எலித்தொல்லை அதிகமாகிடுச்சு. அதேபோல் சீக்கிரமே அறுவடைக்குத் தயாரானதால எங்க பயிர் இருக்கும் இடத்துக்கு மேற்பரப்பில் கதிர்நாவாய் பூச்சிகள் மொய்க்கத் தொடங்கிடுச்சு. உடனே ரூ.100-க்கு வசம்புத் தூள் வாங்கி அதை சாம்பலோட கலந்து தெளிச்சு விரட்டினேன்.

அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில புரெவி புயலோட சேர்ந்து மழை பெய்தது. பலமான காற்று. ஆனா, எங்க வயல்ல ஒரு பயிர்கூட அடியோடு சாயலை. இதனைப் பார்த்த மற்ற விவசாயிகளுக்குப் பெரிய ஆச்சர்யமாகிடுச்சு.

ரத்தசாலியை விதைநெல்லா பயன்படுத்தணும். மற்ற விவசாயிகளுக்கும் கொடுக்கணும்’ங்கிற நோக்கத்திலதான் பயிர் பண்ணினேன். சரியா 100-வது நாள்ல பழைய முறைப்படி கையினாலயே அறுவடை செய்து, கையினாலயே அடிச்சு நெல் மணிகளை ஒரு இடத்தில சேமிச்சேன். 10 சென்ட் இடத்தில 83 கிலோ நெல் கிடைச்சது.

சிவப்பு அரிசிலேயே ரொம்பவே சன்னமாக இருக்கக் கூடியது ரத்தசாலி மட்டுமே. ரத்தசாலி அரிசியில சாதம் வடிச்சு சாப்பிட்டா உடம்புல ஓடுற ரத்தத்தை எப்பவும் சுத்தமாக வெச்சிருக்கும். ‘ஹீமோகுளோபின்’ அளவு அதிகரிக்கும். இதனால் மனிதர்களுக்கு நோயில்லாம காக்கக்கூடிய தன்மை இந்த அரிசிக்கு உண்டுனு மருத்துவர்கள் சொல்றாங்க.

உடலுக்கு உறுதி, நஞ்சில்லா உணவை எல்லோரும் சாப்பிடணும்னு நினைச்சேன். அதனால ரத்தசாலியை விதை நெல்லாகவே கொடுத்துட்டு வர்றேன். ஒரு கிலோ ரூ.100-க்குக் கொடுக்கிறேன். பணம் இல்லாம பண்டமாற்று முறையிலயும் வாங்கிக்கலாம். ஒரு கிலோ விதை நெல்லை வாங்குற விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு ரெண்டு கிலோ நெல்லை திருப்பிக் கொடுக்கணும். இந்த ரகம் இருக்குன்னு தெரிஞ்சு ஆர்வமா வர்ற உள்ளூர் விவசாயிகளிடம் பணம் எதுவும் வாங்காம தலா 350 கிராம் விதைநெல் கொடுத்தேன்.

60 சென்ட் நிலத்துக்கும் சேர்த்து இரண்டு முறை உழவு ஓட்டிய செலவு ரூ.1,500. பஞ்சகவ்யா பணம் கொடுத்து வாங்குனதுல ரூ.1,000. வசம்புத் தூள் ரூ.100. ஆக மொத்தம் ரூ.2,600 தான் செலவு. நடவு, அறுவடை எல்லாம் வீட்டுல இருக்க ஆளுங்களே செஞ்சதால அதுக்கான செலவு இல்லை.

ரத்தசாலி பயிர் செஞ்ச 10 சென்ட் நிலத்துக்கு மட்டும் கணக்கு பார்த்தா மொத்த செலவே ரூ.500தான். இதனால் 10 சென்ட் நிலத்தில் ரூ.7,500 லாபம் கிடைச்சது. துளசி வாசனை சீரகச் சம்பா பயிரும் நல்ல விளைச்சலுடன் அறுவடைக்குத் தயாராகி வருது. பாரம்பர்ய ரகமான ரத்தசாலியைப் பல விவசாயிகள்கிட்ட கொண்டு சேர்ப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டதால் எனக்கு இரட்டிப்பு லாபம் கிடைச்சிருக்கு.

குறைந்த நாட்கள், அதிக விளைச்சல், நஞ்சில்லாத நல்ல உணவுனு பல காரணங்களால ரத்தசாலி ரகச் சாகுபடியை அர்த்தமுள்ளதா மாத்தியிருக்கு. நல்ல விதையை விதைத்தால் நல்ல மகசூல் நிச்சயம் என்பது போல நல்ல விளைச்சலால் மண்ணுடன் சேர்ந்து என் மனமும் மகிழ்ச்சியா இருக்கு” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, விக்டர் ஜேம்ஸ் ராஜா, செல்போன்: 97874 875076