தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளது அந்தோணியார்புரம். ஊரைச் சுற்றி அடர்ந்து காணப்படும் பனை மரங்களே இந்த ஊரின் அடையாளம். பனைமரத்தில் இருந்து பதநீர் இறக்கியும் கருப்பட்டி காய்ச்சியும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் இவ்வூரைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள். இது தவிர, கடந்த 19 ஆண்டுகளாகப் பதநீர் விற்று, இங்குள்ள ஆர்.சி.நடுநிலைப்பள்ளியின் நிதிக்காகப் பணம் சேர்த்தும் வருகிறார்கள் கிராம மக்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பதநீர் சீஸன் காலமான மார்ச் முதல் ஆகஸ்ட் வரை இந்த ஊரில் இருந்து பதநீர் இறக்கி வரும் பனைத் தொழிலாளர்களிடம் இருந்து பதநீரை ஊர் நல கமிட்டியினர் வாங்கி, அதனை விற்பனை செய்து பள்ளி நிர்வாகத்தைச் சமாளித்து வருகிறார்கள். இப்பள்ளியின் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு வகுப்பு எடுக்கும் 3 ஆசிரியைகளுக்கு ஊர் கமிட்டி சார்பில் தலா ரூ.10,000 மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆசிரியைகளின் ஊதியம் தவிர மின் கட்டணம், வகுப்பறைகள் கட்டடப் பராமரிப்பு உள்ளிட்ட இதர செலவினங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திடீரென வீசிய சூறைக்காற்றில் 70 பனைமரங்கள் அடியோடு சரிந்து விழுந்தன. இது குறித்து அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்களிடம் பேசினோம், ``எங்க கிராமத்தைச் சுற்றி சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருக்கு. 100-க்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் பனைத்தொழிலை செய்துட்டு இருக்கோம்.

ரெண்டு நாளாகவே வெயில் குறைஞ்சு காத்தும் மழையுமாத்தான் இருந்துச்சு. அடிச்ச சூறைக்காத்துல பனைமரமே அதிக வேகத்துல அசைந்தாடுச்சு. காத்து அதிகமா வீசுனதுனால நாங்க பனந்தோட்டத்துக்குள்ளப் போகலை. முருங்கை மரம் மாதிரி சடசடன்னு பனைகள் விழுந்துச்சு. மரங்கள் நெருக்கமா இருக்குறதுனால ஒண்ணுமேல ஒண்ணு விழுந்ததுல அடுத்தடுத்த மரங்கள் ஒடிஞ்சு விழுந்துச்சு. கீழ விழுந்ததுல எல்லா பனைகளுமே பலன் தரக்கூடியதுதான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போன வருஷம் பெய்ஞ்ச அதிகப்படியான மழையால மழைத்தண்ணி தேங்கி நின்னுச்சு. சமீபத்துல பெய்ஞ்ச கோடை மழை தண்ணியும் ஒரு அடி உயரத்துக்கு தேங்கி நிற்குது. இதனால, பனைமரங்களோட வேர்கள் அரிச்சிடுச்சு. பனை சீஸன் மாதங்கள்ல மொத்தம், ஒரு மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீர், அதை மதிப்புக்கூட்டினால் கிடைக்கும் கருப்பட்டி, பனங்கிழங்கு, ஓலைகள் ஆகியவற்றின் மூலம் 4,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்.

இப்போ 70 மரங்கள் கீழே விழுந்துட்டதுனால வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கு. வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் கீழே விழுந்த மரத்துக்கு சராசரியா 15-ல இருந்து 20 வயசாவது இருக்கும். திரும்ப விதை ஊன்றி அந்த மரங்கள் மாதிரி பலனுக்கு வரணும்னா குறைஞ்சது 10 வருஷமாவது ஆகும். அதுதான் எங்களுக்கு கவலையா இருக்கு. இந்தப் பகுதிகள்ல தண்ணி தேங்கி நிற்காம வடியுறதுக்கு அரசு நடவடிக்கை எடுக்கணும். அதோடஎங்களுக்குநிவாரணமும் வழங்கணும்” என்றனர்.