Published:Updated:

`ஏக்கருக்கு ஒரு லட்சம்' - சிறுதானிய விவசாயிகளின் இலக்கும் பயணமும்!

சாமையைத் தானியமாக விற்பனை செய்தால் 24,000 ரூபாயும், அரிசியாக விற்பனை செய்தால் 34,000 ரூபாயும் கிடைக்கும். ஒரு ஏக்கர் வைக்கோலுக்கு 10,000 ரூபாயும் கிடைக்கும். உழவு, அறுவடை என 5,000 ரூபாய் செலவு போக மீதி லாபம்தான்.

சாமை வயலில் காளி
சாமை வயலில் காளி

ஒரு காலத்தில் 'அரிசி' என்றாலே சாமை அரிசிதான். அந்த அளவுக்கு முன்னோர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது சாமை. பசுமைப் புரட்சிக்குப் பிறகு சிறுதானியச் சாகுபடியின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது ஆரோக்கியம், உடல்நலம் சார்ந்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி விஷம் தெளிக்காத சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துவருகிறது.

தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் மேலாண்மை இயக்குநர் சிவலிங்கத்திடம் பேசினோம். "தமிழ்நாட்டில் சிறுதானியத்துக்கென்றே செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் எங்களுடையது. தமிழக வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை ஒத்துழைப்போடு இதைத் தொடங்கியிருக்கிறோம். கம்பெனி தொடங்கி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. 45 லட்சம் ரூபாய் மதிப்பில் எல்லா சிறுதானியங்களையும் மதிப்புக்கூட்டும் வகையில் இயந்திரங்களை அமைத்திருக்கிறோம். அவற்றில் விதைகளைக் கொட்டினால், அரிசியாக அரைத்து, பேக்கிங்காகக் கையில் கிடைக்கும். 22 லட்சம் ரூபாய் மானியமாகக் கிடைத்தது. ஒரே இயந்திரத்தில் சாமை, தினை, குதிரைவாலி ஆகிய மூன்று தானியங்களின் உமி நீக்கும்படியும், வரகை மட்டும் தனியாக உமி நீக்கும்படியும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை வாங்கத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை அணுகினால் வழிகாட்டுவார்கள்.

- பென்னாகரம் சுற்றுவட்டார கிராமங்களில் சிறுதானியச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நேரடி அனுபவம், சாமையின் மருத்துவப் பயன்கள், எந்த ரகம் ஏற்றது? உள்ளிட்ட விவரங்களை பசுமை விகடன் இதழில் முழுமையாக அறிய > அப்படியே விற்றால் 40 ரூபாய்... அரிசியாக்கினால் 85 ரூபாய்... இயற்கையில் செழிக்கும் சாமை!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

எங்கள் கம்பெனியில் 1,021 சிறுதானியச் சாகுபடி விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான விவசாயிகள் பாரம்பர்ய முறைப்படி ஆட்டு எரு, மாட்டு எருவை மட்டுமே பயன்படுத்திச் சாகுபடி செய்கிறார்கள். சென்னை, பெங்களூரு, ஓசூர், தருமபுரி, மயிலாடுதுறை எனப் பல இடங்களுக்கு அனுப்புகிறோம். ஆன்லைனில் 'டி-மில்லட்ஸ்' (D-Millets) என்ற பெயரில் இணையதளம் நடத்துகிறோம். அதன் மூலமாகவும் ஆர்டர்கள் கிடைக்கின்றன. இதனால் சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவதில் பிரச்னை இல்லை. சாமையில் உப்புமா மிக்ஸ், ஹெல்த் மிக்ஸ், பிஸ்கட், பொங்கல் மிக்ஸ், சப்பாத்தி மாவு, புழுங்கல் அரிசி எனப் பலவிதமாகத் தயார் செய்து விற்பனை செய்கிறோம்.

சாமை, தினை, கம்பு
சாமை, தினை, கம்பு

சாமையில் மட்டுமல்லாமல் தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு அனைத்திலும் இதைப் போன்ற பொருள்களைத் தயார் செய்கிறோம். ஒரு கிலோ சாமையை கிலோ 40 ரூபாய்க்கு வாங்குகிறோம். அதை அரிசியாக மாற்றி 85 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ சாமையை அரைத்தால் 600 கிராம் அரிசி கிடைக்கும். சரியான முறையைப் பின்பற்றிச் சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 600-1,000 கிலோ சாமை கிடைக்கும். குறைந்தபட்சம் 600 கிலோ தானியம் என வைத்துக்கொண்டாலும், அதை அரிசியாக மாற்றினால் 400 கிலோ அரிசி கிடைக்கும்.

சாமையைத் தானியமாக விற்பனை செய்தால் 24,000 ரூபாயும், அரிசியாக விற்பனை செய்தால் 34,000 ரூபாயும் கிடைக்கும். ஒரு ஏக்கர் வைக்கோலுக்கு 10,000 ரூபாயும் கிடைக்கும். உழவு, அறுவடை என 5,000 ரூபாய் செலவு போக மீதி லாபம்தான். `சிறுதானியத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் சம்பாதிக்க முடியும்' என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்" என்றவர் நிறைவாக, "முதன்முதலில் எங்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது பசுமை விகடன்தான். அதன் தொடர்ச்சியாக, அரசு அதிகாரிகளின் உதவியோடு சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு 280 டன் சிறுதானியங்களை கொள்முதல் செய்தோம். இந்த முறை 700 டன்னுக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். வெளி விவசாயிகளிடமிருந்தும் சிறுதானியங்களை வாங்குகிறோம். மதிப்புக்கூட்டி விற்பதால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை விவசாயிகளுக்கு வழங்குகிறோம்" என்றார்.

- பென்னாகரம் சுற்றுவட்டார கிராமங்களில் சிறுதானியச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நேரடி அனுபவம், சாமையின் மருத்துவப் பயன்கள், எந்த ரகம் ஏற்றது? உள்ளிட்ட விவரங்களை பசுமை விகடன் இதழில் முழுமையாக அறிய > அப்படியே விற்றால் 40 ரூபாய்... அரிசியாக்கினால் 85 ரூபாய்... இயற்கையில் செழிக்கும் சாமை!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

வீடியோ வடிவில்...