Published:Updated:

மிளகு உற்பத்தியில் முதலிடம்... காபி உற்பத்தியில் இரண்டாம் இடம்...!

கொழிக்கும் கொல்லிமலை கூட்டுறவுச் சங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
கொழிக்கும் கொல்லிமலை கூட்டுறவுச் சங்கம்!

கொழிக்கும் கொல்லிமலை கூட்டுறவுச் சங்கம்!

மிளகு உற்பத்தியில் முதலிடம்... காபி உற்பத்தியில் இரண்டாம் இடம்...!

கொழிக்கும் கொல்லிமலை கூட்டுறவுச் சங்கம்!

Published:Updated:
கொழிக்கும் கொல்லிமலை கூட்டுறவுச் சங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
கொழிக்கும் கொல்லிமலை கூட்டுறவுச் சங்கம்!

டையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்த கொல்லிமலை, தமிழகத்தின் முக்கியமான மலை வாசஸ்தலங்களில் ஒன்று. நாமக்கல் மாவட்டத்திலுள்ள இந்த மலைப்பகுதியில் விளையும் மிளகுக்குத் தனிச்சிறப்பு உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, சிறுதானியங்களும், பழ வகைப் பயிர்களுமே இங்கு அதிகம் விளைவிக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான விவசாயிகள் காபி மற்றும் மிளகு சாகுபடியில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால், மிளகு சாகுபடியில் தமிழகத்தில் முதலிடத்தில் இருக்கும் கொல்லிமலை, காபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

நாமக்கல் வழியாகச் சென்றால் மலை அடிவாரமான காரவள்ளி வருகிறது. அங்கிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து பயணித்தால், குளுமையும் இயற்கையும் வரவேற்கும் கொல்லிமலையை அடையலாம். பழங்குடியினர் சந்தை அமைந்திருக்கும் சோளக்காடு என்ற கிராமத்திலிருந்து அறப்பளீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவிலுள்ளது செம்மேடு பேருந்து நிலையம். அதற்கு அரை கிலோமீட்டருக்கு முன்பாக அமைந்திருக்கிறது ‘மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.’

காபி மற்றும் மிளகுப் பயிர்களுக்குரிய விலை கிடைப்பதை உறுதிசெய்யும் இந்தச் சங்கத்தின் மூலம், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. காபி கொட்டைகளைப் பதப்படுத்தித் தூளாக விற்பனை செய்யும் சங்கத்தின் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதுகுறித்த விவரங்கள் அறிந்துகொள்ள சங்கத்தின் அலுவலகத்துக்குச் சென்றோம்.

கொல்லிமலை
கொல்லிமலை
Favas Kalathil

இன்முகத்துடன் நம்மை வரவேற்ற சங்கத்தின் செயலாளர் மகேந்திரன், சங்கத்தின் செயல்பாடுகள்குறித்துப் பகிர்ந்துகொண்டார். “இயற்கை வளங்கள் நிறைஞ்ச கொல்லிமலை, விவசாயத்துக்கு ஏற்ற வளமான பூமி. விவசாயத்துல நிலையான வருமான வாய்ப்புகள் இல்லாம இங்கயிருக்க விவசாயிக பலவகையிலயும் சிரமப்பட்டாங்க. அதனால, இடுபொருள் வழங்குறது, பயிர்க்கடன், நகைக்கடன் கொடுக்குறது, விவசாயிககிட்ட விளைபொருள்களைக் கொள்முதல் செய்றதுக்காக 1977-ம் வருஷம் இந்தச் சங்கம் தொடங்கப்பட்டுச்சு.

பழங்குடி விவசாயிகளுக்காக, கொல்லிமலையில தொடங்கப்பட்ட முதல் சங்கம் இதுதான். இந்தச் சங்கம் மூலமா சிறு, குறு விவசாயிகதான் அதிகம் பயனடையிறாங்க. கொல்லிமலையில இருக்க 14 வருவாய் கிராமங்களும் தனித்தனி நாடுகளா வகைப்படுத்தப் பட்டிருக்கு. ஆரம்பகாலத்துல 14 வருவாய் கிராமங்களுமே இந்தச் சங்கத்தால பயனடைஞ்சது. இப்ப வாழவந்தி நாடு, திண்ணனூர் நாடு, சேலூர் நாடுனு 3 வருவாய் கிராமங்கள்ல இருக்க 5,700 விவசாயிகள் மட்டும்தான் சங்கத்தில உறுப்பினரா இருக்காங்க.

காபி ரோஸ்டிங் உற்பத்தி மையம்
காபி ரோஸ்டிங் உற்பத்தி மையம்சிறுதானிய பயிர்களுக்குப் பெயர்போன கொல்லிமலையில, 1980-ம் வருஷத்துக்குப் பிறகு, பலா, அன்னாசி, மா, வாழை உள்ளிட்ட பழ வகைப் பயிர்கள் அதிகம் விளைய வெச்சாங்க. ஆனா, முறையான போக்கு வரத்து வசதி இல்லாம, விவசாயிகள் அவங்க விளைபொருள்களை விற்பனை செய்றதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. அதனால, இந்தச் சங்கம் மூலம் பழங்களைப் பதனிடு வதற்கான தொழிற்சாலை ஆரம்பிச் சுச்சு. பலவிதமான பழங்களிலிருந்தும் ஜூஸ், ஜாம், ஊறுகாய்னு பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாராச்சு. ஆனா, விற்பனை செய்யுறதுல ஏகப்பட்ட சிக்கல். அதனால அந்தத் தொழிற்சாலைக்கு 10 வருஷத்துலயே பூட்டுப் போட்டுட்டாங்க” என்றவர், கொல்லி மலையில் மிளகு மற்றும் காபி சாகுபடி பிரபலமான கதையை விவரித்தார்.

காபி கொட்டை
காபி கொட்டை

“கடல் மட்டத்திலிருந்து 4,970 அடி உயரத்தில இருக்க ஏற்காட்டிலும், 4,600 அடி உயரத்தில இருக்கக் கொல்லிமலையிலும் சீதோஷ்ண நிலை ஏறக்குறைய ஒரே மாதிரி யாகத்தான் இருக்கும். கொல்லிமலையின் மண் வளமும், இங்கு நிலவுற பருவநிலையும், காபி சாகுபடிக்கு உகந்ததா இருக்குது. அதனால, கொல்லிமலையைச் சேர்ந்த சில ‘எஸ்டேட்’ முதலாளிங்க, கொடைக்கானல், ஏற்காட்டிலிருந்து காபி நாற்றுகளைக் கொண்டுவந்து வளர்த்தாங்க. 2000-ம் வருஷத்துக்குப் பிறகு, இங்குள்ள விவசாயிகள் பலரும் காபி சாகுபடி செய்ய ஆரம்பிச் சுட்டாங்க. காபி செடிகள்ல நிழலுக்காக சில்வர் ஓக் மரங்களை வளர்த்து, அதுல மிளகுக் கொடியைப் படரவிட்டாங்க. சிறு, குறு விவசாயிகள் உட்பட இங்குள்ள பெரும்பாலான விவசாயிகளும் காபிக்கு ஊடுபயிரா மிளகு சாகுபடி செய்றதுல ஆர்வம் காட்டுனாங்க.

பராமரிப்பு குறைவுங்கறதால, காபி பயிரை விடவும், மிளகுப் பயிரைச் சாகுபடி செய்றவங்க எண்ணிக்கை அதிகமாச்சு. ஒரு கட்டத்துல இங்க விளையுற மிளகுக்கு வரவேற்பு அதிகமாச்சு. இப்ப உற்பத்தியிலும் தரத்திலும் கொல்லிமலை மிளகு தான் தமிழ்நாட்டுல முதலிடத்துல இருக்குது. வருஷத்துக்கு 700 – 800 மெட்ரிக் டன் மிளகு, 600 மெட்ரிக் டன் காபி கொல்லிமலையில விளையுது. 2012-ம் வருஷத்துல இருந்து மிளகைக் கொள்முதல் பண்ணி விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். இப்ப, வருஷத்துக்குச் சுமார் 100 மெட்ரிக் டன் மிளகைக் கொள்முதல் செய்றோம்.

சென்னையில இருக்க மத்திய கூட்டுக் கொள்முதல் அமைப்பின் மூலம் ஆர்டர் எடுத்துத் தமிழகம் முழுக்க இருக்கப் பல்வேறு கூட்டுறவு பண்டகசாலைகளுக்கும் கொல்லி மலை மிளகு விற்பனை செய்யப்படுது” என்று மகிழ்ச்சியுடன் கூறிய மகேந்திரன், சங்கத்தின் தலைவர் ராஜேந்திரனை நமக்கு அறிமுகப் படுத்தினார்.

சங்க அலுவலகத்தின் அருகிலேயே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காபி ரோஸ்டிங் உற்பத்தி மையத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற ராஜேந்திரன், காபித்தூள் தயாரிக்கும் செயல்முறைகளை விவரித்தார். பிறகு, இந்த யூனிட்டின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

சங்க அலுவலகம்
சங்க அலுவலகம்

“ஆரம்பகாலத்தில, அறுவடை பண்ணுன காபி பழங்களைக் காலால மிதிச்சு, அம்மியில பதமாக அரைச்சுதான் அதிலிருந்து கொட்டை களை பிரிச்செடுத்தாங்க. இதனால, உடலுழைப்பு, நேரம் அதிகம் விரயமாச்சு. 2016-ம் வருஷம் எங்க சங்கம் சார்பா மெஷின் மூலமா காபி பழத்திலிருந்து கொட்டையைப் பிரிச்செடுக்க ஆரம்பிச்சோம். இதுக்காக ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் கட்டணம் நிர்ணயிச்சோம். இப்ப வரைக்கும் அது மூலமா கொட்டையைப் பிரிச்சு எடுக்குறாங்க. இந்த நிலையில, இங்கயிருக்க விவசாயிககிட்ட சந்தை விலையைவிடவும் குறைவான விலை கொடுத்து காபி கொட்டைகளைச் சிலர் கொள்முதல் பண்ணிட்டு வந்தாங்க. அதனால விவசாயிகளோட உழைப்புக்கு உரிய விலை கிடைக்கிறதை உறுதி செய்ய, கூட்டுறவுத்துறை மூலமா எங்க சங்கத்துல ‘காபி ரோஸ்டிங்’ அலகு (யூனிட்) போன வருஷம் ஆரம்பிச்சோம்.

தமிழ்நாட்டுல காபி அதிகமா விளைவிக்கப் படுற ஏற்காடு, கொல்லிமலை, கொடைக்கானல் பகுதிகள்ல, அரபிகா, ரொபஸ்டானு ரெண்டு ரகங்க மட்டும்தான் அதிகம் சாகுபடி செய்யப்படுது. தரத்துல இரண்டாம் நிலையாகக் கருதப்படுற ரொபஸ்டா ரகக் காபிக்கொட்டை மிகவும் சின்னதா இருக்கும். இது ஒரு கிலோ 200 ரூபாய்க்குத்தான் விலை போகும். தரத்துல முதல் நிலையாகக் கருதப்படும் அரபிகா ரகம்தான் கொல்லிமலையில அதிகம் விளைவிக்கப்படுது. அதை கிலோவுக்கு 320 ரூபாய் வீதம் கொடுத்து கொள்முதல் செய்றோம். அந்த காபி கொட்டைகளைக் காய வெச்சு, அரைச்சுத் தூளாக்கி, 50 கிராம் பாக்கெட் 18 ரூபாய்க்கும், 100 கிராம் பாக்கெட் 40 ரூபாய்க்கும் கூட்டுறவுத்துறைக்கு விற்பனை செய்றோம்.

இப்ப, இந்தச் சங்கம் மூலம் கடந்த ஒரு வருஷத்துல 35 டன் காபித்தூள் விற்பனையாகி யிருக்கு. தேவை அதிகமாயிட்டு வர்றதால அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள 100 டன் காபித்தூள் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கோம். அதனால, சங்க உறுப்பினர்கள் கிட்ட காபி சாகுபடியை அதிகப்படுத்த வலியுறுத்துறோம்” என்றவர், சங்கத்தின் தற்போதைய வளர்ச்சி குறித்துப் பேசினார்.

காபி ரோஸ்டிங் உற்பத்தி மையம்
காபி ரோஸ்டிங் உற்பத்தி மையம்

“மிளகு, காபிக்குக் கட்டுப்படியான விலை கொடுத்துக் கொள்முதல் செய்றோம். இதனால, தனியார் கொள்ளை லாபம் அடிக்கிறது தடுக்கப்படுது. அதோட, சங்கத்துக்கும் நிலையான வருவாய் கிடைக்குது. பணப் பயிர்களைச் சாகுபடி செய்றதால, இங்கயிருக்க விவசாயிகளோட வாழ்வாதாரம் முன்னேறியிருக்கு. மலைவாழ் மக்கள் எங்க மேல வெச்சிருக்க நம்பிக்கையால சங்கமும் வளர்ச்சிப் பாதையில போகுது. குறிப்பா, பல்வேறு நிர்வாகக் காரணங்களால, 2003-ம் வருஷம் இந்தச் சங்கத்துல 2 கோடி ரூபாய்க்கு அதிகமா நஷ்டம் இருந்தது. ஆனா, இப்ப வருஷத்துக்கு 15 கோடி ரூபாய் வர்த்தகம் செய்றோம். 26 லட்சம் ரூபாய் நிகர லாப இருப்புடன், சங்கம் வளர்ச்சிப் பாதையில போயிட்டு இருக்கு. சுற்றுலாப் பயணிகள் தங்குறதுக்கு நடுத்தர அளவிலான தங்குமிடங் களையும் (Cottage) வாடகைக்கு விடுறோம். சங்க வருவாயை அதிகரிக்குற வகையில, இன்னும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறோம்” என்றவர், நிறைவாக...

ராஜேந்திரன், மகேந்திரன்
ராஜேந்திரன், மகேந்திரன்

“கொல்லிமலையில ரசாயன உரப் பயன்பாடு பயப்படுற அளவுக்கு அதிகமில்ல. பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி யாகவும், தொழுவுரம் பயன்படுத்தியும்தான் இப்பவும் விவசாயம் செய்றாங்க. இதனால, கொல்லிமலை விளைபொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குது. ஏராளமான வளங்கள் இருந்தும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு அளவுக்குக் கொல்லிமலை இன்னும் பிரபலமாகல. இந்த மலையின் அருமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகமானா, இங்கு விளையுற விளைபொருள்களுக்கு இன்னும் வரவேற்பு அதிகமாகும். கொல்லிமலை மலைவாழ் விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்” என்றார்.தொடர்புக்கு,

மகேந்திரன் (செயலாளர்),

செல்போன்: 94436 85002

சிவகுமார் (உதவிச் செயலாளர்),

செல்போன்: 94867 63004

உற்பத்தி மையம்
உற்பத்தி மையம்

ஓரி மன்னனின் நினைவாக
காபித்தூள் விற்பனை!


‘காபி ரோஸ்டிங் யூனிட்’டின் செயல் அலுவலரான ராஜன், “13 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதத்திலுள்ள காபிக்கொட்டைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, இயந்திரங்களின் உதவியுடன் அரைத்துத் தூளாகத் தயாரிக்கிறோம். அதை பாக்கெட்டில் அடைச்சு, கொல்லிமலையை ஆண்ட ஓரி மன்னனை நினைவுபடுத்தும் வகையில, ‘ஓரி லேண்டு’ங்கற பிராண்டு பெயர்ல விற்பனை செய்றோம். தனியார் காபி நிறுவனங்கள் பலவும் 40 - 50 சதவிகிதத்துக்கும் மேல காபித்தூளில் சிக்கரியைச் சேர்ப்பாங்க. ஆனா, நாங்க தயாரிக்குற காபித்தூளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் (FSSAI) விதிப்படி 30 சதவிகிதம் மட்டும்தான் சிக்கரியைச் சேர்க்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism