Published:Updated:

``விலையை குறைச்சு கேட்டாங்க நானே ஒரு பிராண்டு உருவாக்கிட்டேன்"- கொய்யா சாகுபடியில் அசத்தும் விவசாயி

விவசாயி குமார்

செடிகள் வளர்ந்து முதல் அறுவடையின் போது 30 டன் கொய்யா கிடைத்தது. இயற்கையான முறையில் விவசாயம் செய்ததில் இவ்வளவு பெரிய பலன் கிடைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. – விவசாயி குமார்.

``விலையை குறைச்சு கேட்டாங்க நானே ஒரு பிராண்டு உருவாக்கிட்டேன்"- கொய்யா சாகுபடியில் அசத்தும் விவசாயி

செடிகள் வளர்ந்து முதல் அறுவடையின் போது 30 டன் கொய்யா கிடைத்தது. இயற்கையான முறையில் விவசாயம் செய்ததில் இவ்வளவு பெரிய பலன் கிடைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. – விவசாயி குமார்.

Published:Updated:
விவசாயி குமார்

இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட காதலால் திருவள்ளூர் மாவட்டம், தண்ணீர்குளம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை முறையில் கொய்யா விவசாயம் செய்து வருகிறார்‌ குமார். இவர் ராமநாதபுரம் மாவட்டம், மேலமடைகிராமத்தைச் சேர்ந்தவர். பட்டப்படிப்பு படித்துள்ள இவர், வெளிநாட்டில் 6 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு சொந்த ஊர் திரும்பினார். தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

விவசாயி குமார்
விவசாயி குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குமாருடைய கொய்யாத் தோட்டம் குறித்து அவரிடம் பேசியபோது, ``நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிறுவயது முதல் இருந்தது. நல்வாய்ப்பாக இந்த 10 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருவது தெரிந்து, உடனே வாங்கிவிட்டேன். விவசாயம் செய்ய வேண்டும் என்ற முடிவு செய்த பிறகு, தீர்க்கமாக இயற்கை முறையில்தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`இயற்கை விவசாயத்தில் நிறைய சாவால்கள் இருக்கு, கொஞ்சம் பார்த்து செய்யுங்க’ என்று பலரும் ஆலோசனை சொன்னார்கள். பின் நானும் வல்லுநர்களுடனான ஆலோசனைக்குப் பின் 2020 மார்ச் மாதம் கொய்யாச் சாகுபடி செய்வதற்கு நிலத்தை தயார் செய்தோம். இதற்கு முன் இது நெல் சாகுபடி செய்த நிலமாய் இருந்தது. அதனால நிலத்தை சீர்படுத்திய பின் ஜூன் மாதம் 1-ம் தேதி கொய்யா செடிகளை நட்டோம்.

10 ஏக்கர் நிலத்தில் அடர் நடவு விவசாயம் செய்ததில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செடிகள் வளர்ந்தன. அதில் தைவான் பிங்க், அர்கா கிரண், லக்னோ-49 என்று மூன்று வகை கொய்யா செடிகள் உள்ளன. செடிகள் வளர ஆரம்பித்த பிறகு, இலைகளைக் கவாத்து செய்து வந்தேன். கொய்யா பயிர் மட்டுமல்லாது எந்த பயிராக இருந்தாலும் நல்ல முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் நல்ல லாபம் அடையலாம்.

நாங்கள் செடிகளுக்கு தொடர்ந்து தரைவழி உரமாக ஜுவாமிர்தம், மீன் அமிலம், அமுதக் கரைசல், எருக்கு கரைசல், தொழு உரம், இ.எம், வேஸ்ட் டீ கம்போஸர் போன்றவற்றை கொடுத்து வந்தோம். பஞ்சகாவ்யா, அரப்பு மோர்க்கரைசல், எருக்கு கரைசல், தோமோர் கரைசல் போன்றவற்றை தெளிப்பு முறையில் கொடுத்து வந்தோம்.

இடுபொருள்களுடன்
இடுபொருள்களுடன்

பூச்சி விரட்டியாக வேப்பங்கொட்டை கரைசல், வசம்பு கரைசல், ஐந்திலை கசாயம், வேப்பங்கொட்டை பூண்டு கரைசல், 3ஜி கரைசல் (இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்) பத்தலை மற்றும் வேப்பிலை கரைசல் போன்றவற்றைக் கொடுத்து வந்தோம்.

இடுபொருள்களையெல்லாம் நாங்களே தயார் செய்வதால் அதற்குத் தேவையான மாட்டுச்சாணம், சிறுநீர் கிராமத்தில் நாட்டு மாடு வளர்ப்பவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உயிரங்களை அரசு தோட்டக்கலை மூலம் வாங்கி, அதையும் கொடுக்கிறோம்.

நிலத்தை வாங்கியபோது மண்ணில் மண்புழுக்களைப் பார்க்கவே முடியாது. ஆனால், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நிலத்தைப் பதப்படுத்தியதும் லேசாக நிலத்தை தோண்டினாலே மண்புழுக்கள் இருக்கிறது. அந்தளவுக்கு இயற்கை உரங்கள் மண்ணை வளப்படுத்தியுள்ளன.

செடிகள் வளர்ந்து முதல் அறுவடையின்போது 30 டன் கொய்யா கிடைத்தது. இயற்கையான முறையில் விவசாயம் செய்ததில் இவ்வளவு பெரிய பலன் கிடைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது ஆனால், விவசாயிகளுக்கே உள்ள மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால் உற்பத்தி செய்த பொருள்களை நல்ல விலைக்கு விற்க முடியாமல் போவது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டும், அதுவும் இயற்கை முறையில் கொய்யா சாகுபடி செய்து வியாபாரிகள் சீஸன் நேரங்களில் ₹15, ₹10-க்கு கேட்பார்கள். அப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால்தான் நான் உற்பத்தி செய்கிற பொருளை நானே விற்பனை பண்ண முடிவு பண்ணி `சுவை இயற்கையானது’ என்ற பிராண்டு பெயரில் நானே இப்போது விற்பனை செய்து வருகிறேன். `சுவை' அது எந்த உணவில் இருந்தாலும் இயற்கையானதாகவே இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் வகையில் இந்த பெயர் வைத்தேன். இப்போது ஒரு கிலோ கொய்யா ₹50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறேன். லட்சக்கணக்கில் லாபம் எடுத்து வருகிறேன்.

கொய்யாவுடன்
கொய்யாவுடன்

இயற்கை முறையில் இடுபொருள்களை இட்டு விளைவிப்பதால் கொய்யாவின் சுவை, மணம் எல்லாம் நல்லா தரமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கொரோனா காலத்தில் விற்பனை கொஞ்சம் குறைந்தது. அதனால் இ-பாஸ் பெற்று வாகனம் மூலம் சென்னையில் விற்பனை செய்தேன். வியாபாரம் நன்றாக இருந்தது. பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மருத்துவர்களும் கொய்யாவை சாப்பிட்டுவிட்டு என்னுடைய முயற்சியைப் பாராட்டினார்கள்.

கொய்யா சாகுபடி மட்டுமல்லாது இதிலிருந்து கிடைக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். செடிகளைக் கவாத்து செய்யும்போது வெட்டி எடுக்கும் இலைகளை காயவைத்து, பதப்படுத்தி, பொடியாக்கி கொய்யா இலை தேநீர் பொடி தயாரித்துள்ளேன். அதுமட்டுமல்லாது கொய்யாவை பொறுத்தவரையில் காய்தான் அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால், நிறைய பழங்களும் விளைகிறது. அந்தப் பழங்களை வைத்து பழக்கலவை (ஜாம்) தயாரிக்கவும் முடிவு செய்தோம். இந்தப் பழக்கலவையில் சிட்ரிக் அமிலத்துக்காக தோட்டத்தில் விளையும் எலுமிச்சையும், லேசான நிறத்திற்காகத் பீட்ரூட்டையும் பயன்படுத்துகிறோம். மற்றபடி எந்த செயற்கை ரசாயனங்களையும் சேர்ப்பது இல்லை. இவற்றை இன்னும் சந்தைக்குச் சென்று விற்கத் தொடங்கவில்லை. FSSAI-ன் முறையான அனுமதி பெற்று சந்தைப்படுத்த உள்ளேன்.”

கொய்யா சாகுபடி வயல்
கொய்யா சாகுபடி வயல்

மக்கள் தற்போது மாறிவரும் உணவுப் பழக்கங்கள் மற்றும் நோய்களில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடிந்தவரை இயற்கை வேளாண் முறையில் விளையும் பொருள்களை உண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதை உற்பத்தி செய்பவர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொதுமக்களும், சந்தை வியாபாரிகளும் இயற்கை வேளாண் முறையில் விளைந்த பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. என்னைப் போன்று இயற்கை விவசாயம் செய்தால் நல்ல லாபமும், நீண்ட ஆரோக்கியம் பெற முடியும்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.