Published:Updated:

`சர்க்கரைக்கு பதில் ரேஷன் கடைகளில் ஏன் வெல்லம் கொடுக்கக்கூடாது?' - விவசாயிகள் கோரிக்கை

Jaggery
Jaggery ( Photo: Vikatan )

தமிழக அரசு ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பில் வெள்ளை சர்க்கரைக்கு, மாற்றாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் விவசாயிகள்.

பொங்கல் விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றின் விலை சரிந்துள்ளது. இதன் காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையை சமாளிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகிறார்கள். குறிப்பாக, தமிழக அரசு ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பில் வெள்ளை சர்க்கரைக்கு, மாற்றாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Jaggery
Jaggery
Photo: Vikatan

சர்க்கரை ஆலைகள், பல வகைகளிலும் கரும்பு விவசாயிகளை கசக்கிப் பிழிகின்றன. கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளானார்கள். இந்நிலையில்தான் இதிலிருந்து விடுபட்டு, விடிவு பிறக்கும் விதமாக, வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு இவர்களுக்கு கை கொடுக்கத் தொடங்கியது. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் வீரமாங்குடி, அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், தேவன்குடி, உள்ளீக்கடை, பட்டுக்குடி, மணலூர், மகாளிபுரம் உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களில் வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு தொழிலில் ஈடுபடக்கூடிய விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இப்பகுதியில் ஏற்கெனவே, பல குடும்பங்கள் பாரம்பர்யமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தபோதிலும், சமீப காலமாக, இன்னும் பல விவசாயிகள் இத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபடத் தொடங்கினார்கள். தீபாவளி மற்றும் பொங்கல் சமயங்களில் இவற்றின் உற்பத்தி மற்றும் வியாபாரம் களைகட்டும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் தொடர் கனமழையால், வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரையின் உற்பத்தி மற்றும் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இவற்றின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய வீரமாங்குடியைச் சேர்ந்த கரும்பு விவசாயி இளஞ்செழியன், ``வெல்லம், நாட்டுச் சர்க்கரை உற்பத்தியை நம்பி, இந்தப் பகுதிகள்ல மட்டுமே பல ஆயிரம் ஏக்கர்ல கரும்பு பயிர் செய்யப்படுது. சுமார் 250 விவசாய குடும்பங்கள், வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிப்புல ஈடுபட்டிருக்கு. 700-க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தத் தொழிலை நம்பி இருக்காங்க.

Jaggery
Jaggery
Photo: Vikatan

தீபாவளி மற்றும் பொங்கல் சமயங்கள்ல வியாபாரம் நல்லா நடக்கும். இங்க இருந்து கேரளாவுக்கு வருஷம் முழுக்கவே வெல்லம் விற்பனைக்கும் போகும். கேரளா மக்கள் தங்களோட உணவுப் பழக்கத்துல அதிகமாக வெல்லம் சேர்த்துக்குவாங்க. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், இங்கயிருந்து கேரளாவுக்கு வெல்லம் விற்பனையாகுறது பெருமளவு குறைஞ்சிடுச்சு. தீபாவளி, பொங்கல் வந்தால், ஓரளவுக்கு நிலைமை சரியாகிடும்னு எதிர்பார்த்தோம். ஆனாலும், நிலைமை சீர் ஆகலை. உற்பத்தி மற்றும் விற்பனைல 59 சதவிகிதம் சுணக்கம் அடைஞ்சிருக்கு. வழக்கமா நான் 1,500 சிப்பம் (30 கிலோ மூட்டை) உற்பத்தி செய்றது வழக்கம். இந்த ஆண்டு 600 சிப்பம் உற்பத்தி செஞ்சாலே பெரிய காரியம். தொடர் கனமழையால இதுல ஏகப்பட்ட இடையூறுகள். எல்லாத்தை சமாளிச்சு தாண்டி வந்தாலும்கூட, இந்த ஆண்டு கிலோவுக்கு 5 ரூபாய் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

அச்சு வெல்லம் 35, உருண்டை வெல்லம் 37, நாட்டுச் சர்க்கரை 38 ரூபாய்க்கும் விலை போயிக்கிட்டு இருக்கு. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு உற்பத்தி செலவு பல வகைகளிலும் அதிகரிச்சிருக்கு, கிலோவுக்கு 50 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சால்தான் ஓரளவுக்காவது சமாளிக்க முடியும். பொங்கல் விழானு சொன்னாலே, வெல்லம், நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துறதுதான் தமிழ்நாட்டு மக்களோட பாரம்பர்ய வழக்கம். ஆனால், ரேஷன் கடைகள்ல வழங்கப்படக்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புல வெள்ளை சர்க்கரை கொடுக்குறாங்க. கரும்பு விவாயிகளுக்கு கை கொடுக்கவும், நம்மோட பாரம்பர்ய வழக்கத்தை மீட்டெடுக்கவும் இனிமேலாவது ரேஷன் கடைகள்ல வெல்லம், நாட்டுச் சர்க்கரை வழங்கணும்’’ என வலியுறுத்தினார்.

Jaggery
Jaggery
Photo: Vikatan / Ramkumar.R
நெருங்குகிறது தைப்பொங்கல்... சூடுபிடிக்கும் வெல்லம் தயாரிக்கும் பணி! #VikatanPhotoStory

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைக்குத் தமிழக அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும் என்ற ஆதரவுக் குரல்கள் பல தரப்பிலிருந்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆன்லைன் மூலம் இவற்றை விற்பனை செய்வதற்கான வழிகாட்டக்கூடிய முயற்சிகள் மற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து பசுமை விகடன் பரீசிலித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு