நாட்டு நடப்பு
Published:Updated:

ஜாம், சாஸ், தட்டு, குவளை காகிதம், தடுப்புச் சுவர், திரவ வெல்லம்; கரும்பிலிருந்து கலக்கல் பொருள்கள்!

கரும்பிலிருந்து கலக்கல் பொருள்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கரும்பிலிருந்து கலக்கல் பொருள்கள்

மதிப்புக்கூட்டல்

கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் சர்க்கரை ஆலைகளையே சார்ந்திருப்பதால், பலவிதமான பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறார்கள். அறுவடைக்குத் தயாரான கரும்புகளைச் சர்க்கரை ஆலைகள் உரிய நேரத்தில் அறுவடை செய்வதில்லை. பல வாரங்கள் காலதாமதம் செய்வதால், விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள். அரவை செய்த கரும்புக்கான பணத்தைக் கொடுக்காமல் விவசாயிகளை இழுத்தடிப்பது, அரசு நிர்ணயத்த சட்டப்பூர்வமான விலையைத் தர மறுப்பது எனச் சர்க்கரை ஆலைகள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இந்நிலையில்தான் கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளின் பிடியில் சிக்கி தவிக்காமல், மாற்றுப் பாதையில் பயணித்து வெற்றிநடைப் போட கைக்கொடுக்கிறது மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம்.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்

கரும்பிலிருந்து ஏராளமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க முடியும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். அந்த வகையில், கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், கரும்பில் பல்வேறு விதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்ய, விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது இந்நிறுவனம்.

ரஜூலா சாந்தி
ரஜூலா சாந்தி

கரும்பு மதிப்புக்கூட்டுதல் தொடர்பாக நம்மிடம் விரிவாகப் பேசிய இந்நிறுவனத்தின் விரிவாக்க அலுவலர் முனைவர் ரஜூலா சாந்தி, “தென்னையைப் போலவே கரும்பின் அனைத்துப் பகுதிகளுமே பயனுள்ளவைதான். கரும்புச் சாறு, சக்கை, தோகை ஆகியவற்றிலிருந்து பல்வேறு விதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்து, விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட, எங்கள் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாகப் பயிற்சி அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட விவசாயிகள் பலர், மதிப்புக்கூட்டலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கரும்பிலிருந்து சாறு எடுத்தவுடன் எஞ்சி இருக்கும் சக்கையில் நிறைய பயன்பாடுகள் உள்ளன. சர்க்கரை ஆலைகள், கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது அனைவரும் அறிந்த விஷயம். இது தவிர இன்னும் பல வகைகளில் கரும்புச் சக்கை பயனளிக்கிறது.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்

கரும்புச் சக்கையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனைப் பயன்படுத்தி, துகள் பலகைகள் (Particle Boards) தயாரிக்க முடியும். கரும்புச் சக்கை துகள் பலகைகள் மூலம்... வீடுகளுக்குத் தேவையான மர ஜாமான்கள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர உணவகங்களுக்குப் பயன் அளிக்ககூடிய அலங்காரத் தடுப்பு சுவர் (Partition Wall) போன்றவற்றைத் தயாரிக்க முடியும். கரும்புச் சக்கையில் கிட்டத்தட்ட 48 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது. 50 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கும். சக்கையாக இருக்கும்போது, அது உதிரியாக இருக்கும். எனவே இதனைப் பிணைப்பதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கரும்புச் சக்கை துகள் பலகைகள் செய்யலாம். ஆண்டுக்கு 400 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யும் நம் நாட்டில், ஏராளமான கரும்புச் சக்கைகள் வீணாக்கப்படுகின்றன. இவற்றை மதிப்புக்கூட்டினால், மிகப் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும்.

முறையாகத் திட்டமிட்டால், மரச்சாமான்களில் செய்யப்படும் பொருள்களில் பெரும்பாலானவற்றை, கரும்புச் சக்கையில் தயார் செய்ய முடியும். இதனால் மரங்கள் அழிக்கப்படுவது தவிர்க்கப்படும். கரும்புச் சக்கையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி... தட்டு, குவளை போன்றவற்றைத் தயாரிக்கலாம். குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் மரங்களைப் பயன்படுத்தித்தான் காகிதம் தயார் செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க, கரும்புச் சக்கையிலிருந்தும் காகிதம் தயாரிக்கலாம்.

கரும்புச்சக்கை
கரும்புச்சக்கை

கரும்பு சருகில் மதிப்புக்கூட்டல்

கரும்பு நடவு செய்த, 5-7 மாதங்களில் சருகுகளை உரிப்பது வழக்கம். அறுவடைக்குப் பிறகும் ஏராளமான சருகுகள் கிடைக்கும். பெரும்பாலான விவசாயிகள் அந்தச் சருகை எரித்துவிடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதோடு, சுற்றுச்சூழலும் மாசடைகிறது.

கரும்பு சருகிலிருந்தும் ஏராளமான மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கலாம். 100 டன் கரும்பு உற்பத்தி செய்கிறோம் என்றால், அதில் 10-11 சதவிகிதம் சருகு கிடைக்கும். கரும்பு சருகில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. 0.5% நைட்ரஜன், 0.15% பாஸ்பரஸ், 0.7% பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. கரும்பு சருகுகளை முறையாகப் பதப்படுத்தி, பல மாதங்களுக்குச் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கரும்பு சருகுகளைப் பயன்படுத்திக் காளான் உற்பத்தி செய்யலாம். மண்புழு உரம் தயாரிக்கவும் கரும்பு சருகுகளைப் பயன்படுத்தலாம்.

திரவ வெல்லம்
திரவ வெல்லம்

திரவ வெல்லம்

கரும்பு சாறினை பதப்படுத்தி, திரவ வெல்லம் தயார் செய்யலாம். திரவ வெல்லம் பல மாதங்கள் வரை தரம் இழக்காமல் இருக்கும். திரவ வெல்லத்தை நமக்குத் தேவையானபோது ஜாம் மற்றும் சாஸாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். திரவ வெல்லத்தைப் பயன்படுத்தி, மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே மிக எளிய முறையில் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தயார் செய்யலாம். திரவ வெல்லத்தோடு, கோகோ பவுடர் கலந்து சாக்லேட் தயார் செய்யலாம். திரவ வெல்லத்தோடு பால் பவுடர் கலந்தால், நல்ல வாசனையான, சுவையான பால் ஃபர்பி கிடைக்கும். இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். திரவ வெல்லத்தில் சோயா மாவு, கோதுமை, நிலக்கடலை, பாதாம், பிஸ்தா போன்றவற்றைக் கலந்து விதவிதமான தின்பண்டங்கள் தயார் செய்யலாம். இந்த தின்பண்டங்களை நன்கு அலங்காரப்படுத்தி விற்பனை செய்தால், மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும். திரவ வெல்லத்தைப் பயன்படுத்தி ஐஸ்க்ரீமும் தயாரிக்கலாம்.

மெழுகு
மெழுகு

மெழுகு, சுவையூட்டி

ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் பளபளப்பாக இருக்க, விற்பனையாளர்கள் அவற்றின் மீது ரசாயனத்தன்மை வாய்ந்த மெழுகு தடவுகிறார்கள். அதற்கு மாற்றாக, கரும்புச் சாறிலிருந்து மெழுகு தயார் செய்து பயன்படுத்தலாம். இதில் எந்தவித ரசாயன பொருள்களும் சேர்க்கப்படாததால், உடலுக்குத் தீங்கு செய்யாது. சமீபகாலமாக, நம்முடைய மக்கள் உணவில் சுவையை அதிகப்படுத்த, ரசாயன சுவையூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். மோனோ சோடியும் குளூட்டாமேட் என்ற வேதிப்பொருளில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு செய்யக்கூடியது. அதற்கு மாற்றாக, கரும்புச் சாறிலிருந்து சுவையூட்டிகள் தயார் செய்து பயன்படுத்தலாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இதை அதிகளவு உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு கரும்பிலிருந்து பல்வேறு விதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்ய... விவசாயிகளுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் இந்நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

உரம்
உரம்

தொடர்புக்கு:

கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம்,

வீரகேரளம், கோவை மாவட்டம்.

தொலைபேசி; 04222472621/ 219

திரவ வெல்லத்தில் லாபம் அதிகம்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயி தசரத ராஜ்குமார், கரும்பு மதிப்புக் கூட்டலில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார். “எங்களுக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கும். நாங்க பல தலைமுறையா கரும்பு சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கோம். என்னோட தாத்தா, அப்பா எல்லாம் வெல்லம், நாட்டுச்சர்க்கரை காய்ச்சி விற்பனை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. எங்க பகுதியில சர்க்கரை ஆலை வந்த பிறகு வெல்லம் காய்ச்சிறதை கைவிட்டுட்டு, எங்களோட கரும்பை அங்க விற்பனை செஞ்சிக்கிட்டு இருந்தோம். ஆரம்பத்துல எந்தப் பிரச்னையும் இல்லாமதான் இருந்துச்சு. காலப்போக்குல பலவிதமான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்துச்சு. இதுக்கு என்னதான் தீர்வுனு யோசிக்க ஆரம்பிச்ச சமயத்துலதான், வீரகேரளத்துல உள்ள, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தைப் பத்தி கேள்விப்பட்டு, அங்கவுள்ள அலுவலர்கள்கிட்ட ஆலோசனைகள் கேட்டேன்.

தசரத ராஜ்குமார்
தசரத ராஜ்குமார்

கரும்பு மதிப்புக்கூட்டலுக்கான பயிற்சியிலயும் கலந்துகிட்டேன். கடந்த சில வருஷங்களா, என்னோட தோட்டத்துல கரும்பு விதைக் கரணை உற்பத்தி செஞ்சு, மற்ற விவசாயிகளுக்கு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். பொதுவா, கரும்போட மேல் பாகத்துல சர்க்கரை சத்து ரொம்பக் குறைவா இருக்கும், அதைத்தான் விதைக் கரணையா பயன்படுத்த முடியும். வருஷத்துக்குச் சுமார் 22 லட்சம் விதைக் கரணை விற்பனை செய்றேன். விதைக் கரணை பயன்படுத்தியது போக, மீதியுள்ள வேர் பகுதி கரும்புல வெல்லம், திரவ வெல்லம் தயார் செஞ்சு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். கரும்போட கீழ் பாகத்துல சர்க்கரை சத்து அதிகமா இருக்கும்.

திரவ வெல்லம் தயார் செய்ய, எந்த ஒரு ரசாயனப் பொருளும் தேவையில்லை. எலுமிச்சைச் சாறும், நெல்லிக்காய்ச் சாறும்தான் தேவைப்படும். வெல்லத்தை விட, திரவ வெல்லம் உடம்புக்கு நல்லது. ஒரு மாசத்துக்கு 200-300 லிட்டர் திரவ வெல்லம் விற்பனை செய்றேன். ஒரு லிட்டர் 250 ரூபாய்னு விற்பனைச் செய்றேன். பல மாசங்களானாலும் திரவ வெல்லம் கெட்டுப்போகாது. தீபாவளி பலகாரங்கள் செய்யத் திரவ வெல்லம் ரொம்பவே உதவியா இருக்கும். திரவ வெல்லத்தை ரொம்ப எளிதா பயன்படுத்தலாம்’’ எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு, தசரத ராஜ்குமார், செல்போன் 93641 14374