பிரீமியம் ஸ்டோரி

வ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, ‘விவசாயம் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் கூடுதலாக இருந்திருக்கலாம்...’, ‘இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கலாம்’ என முன்னோடி விவசாயிகளும், பொருளாதார வல்லுநர்களும் கருத்துச் சொல்வதுண்டு. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நியாயமான கோரிக்கை, பெரும்பாலும் அரசின் கவனத்துக்குச் சென்று சேருவதில்லை.

எனவே, விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இந்த ஆண்டு புதிதாகப் பாலம் போட்டிருக்கிறது பசுமை விகடன். விவசாயம், பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பாகத் துறை சார்ந்த வல்லுநர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை அழைத்து 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைகளைத் தயாரிக்கத் திட்டமிட்டது பசுமை விகடன்.

விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள்
விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள்

இதற்கான கலந்துரையாடல் கூட்டம் சென்னை, மெட்ரோ மேனர் ஹோட்டலில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர் வ.நாகப்பன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், வேளாண் ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி, மூத்த பொறியாளர் வீரப்பன், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பூவுலகு சுந்தர்ராஜன், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஆலோசகர் ராம சுப்ரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

‘கூட்டுறவு வங்கிகள்போல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர்க்கடன் தருவது; ‘விவசாயம்’ என்ற பெயரில் இயங்கிவரும் பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாயக் கடன்கள் வழங்கத் தடை விதிப்பது; `ஆதார்’போல விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான தனிப்பதிவேடு உருவாக்குவது; விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக உர மானியத்தைச் செலுத்துவது; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட முக்கியமான பரிந்துரைகள் வகைப்படுத்தப் பட்டன. இவற்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விகடன் குழும நிர்வாக 
இயக்குநர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பரிந்துரைகளை வழங்கியபோது...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பரிந்துரைகளை வழங்கியபோது...

இந்தச் சந்திப்புக்காக, பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் நமக்கு உதவிகள் செய்தார். கடந்த ஜனவரி 19-ம் தேதி அன்று சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சரைச் சென்னை அக்கார்டு ஹோட்டலில் சந்திக்க, பசுமை விகடனுக்கு நேரம் வழங்கப்பட்டது. விவசாயிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோருடன் ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன் அமைச்சரைச் சந்தித்தார். இயற்கை விவசாயத்துக்கு அகில இந்திய அளவில் திட்டங்கள், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி உற்பத்திப் பொருள்களுக்குச் சாகுபடிச் செலவோடு 50 சதவிகித விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்; உரமானியத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவது... உள்ளிட்ட கோரிக்கைகள் அப்போது அமைச்சரிடம் பகிரப்பட, அக்கறையோடு கேட்டுக்கொண்டவர், ‘‘நிச்சயம் வாய்ப்புள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுகிறோம்’’ என்று உறுதியளித்தார்.

`விவசாய நகைக்கடனுக்கான வட்டி மானிய திட்டத்தை நிறுத்தியது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. ‘‘இந்தத் திட்டத்துக்கான முழுப் பலனும் விவசாயிகளுக்குச் சென்று சேரவில்லை. நகரத்தில் உள்ளவர்கள்கூட விவசாயிகளின் பெயரில் மானியம் பெற்றனர். அதனால்தான் அதை நிறுத்தினோம். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆலோசித்துவருகிறோம்’’ என்றார் அமைச்சர்.

அடுத்து அணைப் பாதுகாப்பு சட்டப் பிரச்னைகள் குறித்துப் பேசியபோது, ‘‘குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அங்கு ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தினார் பிரதமர். அந்தச் சமயத்தில் கட்சியின் சார்பில் குஜராத்தின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததைப் பார்த்தேன். நீர்ப் பாசனத் திட்டங்கள் நம் நாட்டுக்கு அவசியமானவை. இவற்றில் அதிக ஆர்வத்துடன் இருப்பதால், நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த ‘ஜல் சக்தி’ என்ற ஒரு துறையை உருவாக்கியிருக்கிறார் பிரதமர். பசுமை விகடன் சார்பில் நீர்ப்பாசனம் குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்த அமைச்சரைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கிறோம். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவருடன் விவசாயிகளைக் கூட்டி விவாதியுங்கள்’’ என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனை தந்தார் மத்திய நிதியமைச்சர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு