Published:Updated:

செலவுக்கு ஏற்ற வரவு தற்சார்பு விவசாயத்தில் நிறைவு!

அறுவடையான கேரட்டுடன் முகேஷ் சேகரன்

தற்சார்பு

செலவுக்கு ஏற்ற வரவு தற்சார்பு விவசாயத்தில் நிறைவு!

தற்சார்பு

Published:Updated:
அறுவடையான கேரட்டுடன் முகேஷ் சேகரன்

"விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து நகரத்துலதான் வசிச்சேன். வேலைக்குப் போனபிறகும் அதே வாழ்க்கை முறைதான். அலாரம் வெச்ச மாதிரி ஒரே மாதிரியான வேலை. தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மன நிறைவுக்கான விஷயங்கள் எதுவுமில்லாததுபோல உணர்ந்தேன். ‘இது மட்டும்தான் வாழ்க்கையா’ங்கிற கேள்வி எனக்குள்ள உருவாச்சு. ஒரு கட்டத்துல அதுக்கான விடைதேட ஆரம்பிச்சேன். அதோட முடிவு இப்ப நானொரு இயற்கை விவசாயி’’ சிரித்தபடியே கூறும் முகேஷ் சேகரன், வேலையை விட்டுட்டு நகர வாழ்க்கையிலிருந்து விலகி, நீலகிரி மாவட்டத்தில் தனியாளாக விவசாயம் செய்து வருகிறார்.

ஊட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கேத்தி டவுனில் உள்ள கம்மந்து கிராமத்தில் அமைந்துள்ளது இவரது தோட்டம். காலை வேளையில் விவசாய வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

“என்னுடைய பூர்வீகம் நீலகிரி மாவட்டம்தான். அப்பா ராணுவத்துல வேலை பார்த்ததால, பல ஊர்கள்ல வசிச்சோம். கோயம்புத்தூர்ல இன்ஜினீயரிங் படிச்சேன். பெங்களூரு, சென்னையில ஐ.டி வேலையில 6 வருஷம் இருந்தேன். வருஷத்துக்குச் சிலநாள் இந்த ஊருக்கு வந்து தங்கிட்டுப்போவோம். வேலையில நல்ல வருமானம் கிடைச்சாலும், மனநிறைவு கிடைக்கல. சுயதொழில் செய்யுற ஆர்வத்துல இயற்கை விவசாயம் மேல மதிப்பு ஏற்பட்டுச்சு. எவ்வளவு ஏற்ற இறக்கம் வந்தாலும் உறுதியா சமாளிச்சுடலாம்னு மனசைப் பக்குவப்படுத்திக்கிட்டுதான் இதுல இறங்குனேன்.

வயலில் முகேஷ் சேகரன்
வயலில் முகேஷ் சேகரன்

2018-ம் வருஷம் வேலையிலிருந்து விலகினேன். விவசாயத்துல எந்த முன் அனுபவமும் எனக்கு இல்ல. விவசாயத்த கத்துக்க ஒரு வருஷம் செலவு பண்ணினேன். கர்நாடகாவுல பல விவசாயிகளைச் சந்திச்சேன்.

பூர்வீக ஊர்லயே விவசாயம் செய்யலாம்னு நீலகிரிக்கு வந்தேன். என் குடும்பத்துல பலரும் படிச்சவங்க; முற்போக்கா யோசிக்கிறவங்க. நிச்சயமா நான் ஜெயிச்சுக்காட்டுவேன்னு சொன்னேன். என்னை முழுமையா நம்பி இங்க அனுப்பினாங்க. எங்க பூர்வீக நிலம் கால் ஏக்கர் இருந்துச்சு. அதுக்கு பக்கத்துலயே அரை ஏக்கர் நிலத்தை என் சேமிப்புப் பணத்துல குத்தகைக்கு எடுத்தேன். தோட்டக்கலைத்துறை மூலம் நிறைய பயிற்சிகள் கிடைச்சது. நான் விவசாயம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, இந்த முக்கால் ஏக்கர்லயும் ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சிருக்காங்க. அதனால, 6 மாசம் நிலத்தைச் சும்மா விட்டுட்டேன். அதுக்கு பிறகு, நவதானியங்கள் விதைச்சேன். அது வளர்ந்ததும் அப்படியே மடக்கி உழுதேன். வீடு, கொட்டகை, காலியான நிலம் எல்லாம் போக, 60 சென்ட்லதான் இப்போ விவசாயம் செய்றேன்.

முதல் சாகுபடியில கேரட், பீட்ரூட், புரொக்கோலி, முட்டைக்கோஸ் போட்டேன். கேரட் தவிர, மற்ற மூணு பயிர்களும் ஓரளவுக்கு விளைச்சல் கொடுத்துச்சு. ஒவ்வொரு சாகுபடியிலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். மலைப் பயிர்கள் சிலவற்றை மட்டுமே தொடர்ந்து சாகுபடி செய்றேன். இதுவரைக்கும் 5 சாகுபடி முடிஞ்சிருக்கு. கடைசியா, 40 சென்ட்ல கேரட் பயிரிட்டுக் கடந்த ஜனவரியில அறுவடை செஞ்சேன். அதுல, 750 கிலோ கேரட் கிடைச்சது. அதைத் தரம் வாரியா பிரிச்சு விற்பனை செய்தேன். அந்த வகையில, 40,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதேபோல, 20 சென்ட்ல பூண்டு விதைச்சு, மார்ச்ல அறுவடை செஞ்சேன். அதுல, 200 கிலோ பூண்டு விளைச்சல் கிடைச்சது. ஆனா, சரியான விலை கிடைக்கல. அதனால மொத்த பூண்டையும் அப்படியே விதைத் தேவைக்கு வெச்சுகிட்டேன்.அடுத்த போகத்துக்கான விதை, அக்னி அஸ்திரம் தயாரிப்பு தேவைக்குப் போக, மீதமுள்ள பூண்டை மட்டும் சுற்றுவட்டார மக்களுக்குக் கொடுத்திடலாம்னு இருக்கேன். தலா 10 சென்ட்ல பயிரிட்டிருக்கிற கேரட், பீட்ரூட் மட்டும் அறுவடை நடந்துகிட்டு இருக்கு. இந்த 20 சென்ட் நிலத்துல அடுத்து பூண்டு பயிரிடப் போறேன். தவிர, 10 சென்ட்ல கேரட், 30 சென்ட்ல பீன்ஸ் போட்டிருக்கேன். இது 10 நாள்கள் பயிரா இருக்கு” என்றவர், மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

வயலில்
வயலில்

“நீலகிரி மாவட்டத்துல மாடுகள் வளர்ப்போர் குறைவுதான். மேட்டுப்பாளையத்துல இருந்துதான் சாண எருவை கொண்டுவரணும். எருவுக்கான செலவைவிட போக்குவரத்துச் செலவுதான் அதிகம். சொந்தமா மாடு இல்லாம விவசாய பூமி முழுமை பெறாதுனு அலிகார் ரகத்துல ஒரு கறவை மாட்டையும், ஒரு கன்னுக் குட்டியையும் வாங்கினேன். இதைப் பக்கத்துல இருந்து கவனிச்சுக்குற தேவை இருக்கிறதால, கடந்த ரெண்டு வருஷமா என்னோட வீட்டுக்குக்கூட நான் போகல. அப்பப்போ என் குடும்பத்தினர்தான் என்னை வந்து பார்த்துட்டுப் போறாங்க.

தோட்டத்துலயே தங்கிக்க பழைய பொருள்களைக் கொண்டே தகரத்தாலான ஒரு வீடும், மாட்டுக்கு ஒரு கொட்டகையும் அமைச்சிருக்கேன். இங்கு சோலார் பவர்தான். ஒரு மின்விளக்கு மட்டும்தான் பயன்படுத்துவேன். ஒரு கேஸ் அடுப்பு வெச்சு எளிமையான உணவுகளைச் சமைச்சு சாப்பிடுறேன். இங்க வருஷம் முழுக்க குளிர் இருக்கும். அதனால, ஃபேன் வசதிகூட தேவைப்படாது. என் நிலத்துலயே ஊத்து தண்ணி கிடைக்குது. அதை ஒரு குட்டையில சேகரிச்சு பயிர்களுக்குப் பயன்படுத்துறேன். அதே தண்ணியைத்தான் நானும் காய்ச்சு குடிக்கிறேன். சுத்துவட்டாரத்துல கரடி, காட்டெருமை, மான், முயல், முள்ளம்பன்றி தொந்தரவுகள் அதிகம் இருக்கு. நாம தொந்தரவு செய்யாத பட்சத்துல அவை நம்மை எதுவும் செய்றதில்ல. ஆனா, விளைபொருள்களைச் சாப்பிடுறது, சேதாரம் செய்றதுனு நிறைய தொந்தரவுகள் செய்யும். மத்தபடி இந்தத் தனிமை வாழ்க்கையும் நல்லாவே இருக்கு. அனுபவத்தின் வாயிலாக விவசாயத்துல ஏற்படுற சவால்களைச் சரிசெய்றேன். அனுபவமுள்ள விவசாயிகள், தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனைகளையும் கேட்டுப்பேன். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், மீன் அமிலம் எல்லாம் சுழற்சி முறையில இலைவழி தெளிப்பா கொடுத்திடுவேன்’’ என்றவர் நிறைவாக,

மாட்டுடன்
மாட்டுடன்

‘‘இப்போ செலவுக்கு ஏத்த வரவு மட்டும்தான் கிடைக்குது. என்னைப் பொறுத்தவரை இதுவே நல்ல வளர்ச்சிதான். விளைச்சல் நல்லா இருந்தாலும்கூட, இயற்கை விளைபொருள்னு கூடுதல் விலை கிடைக்கிறது இல்ல. எல்லாச் சவால்களையும் சரிசெஞ்சுட்டா இன்னும் சிறப்பான வருமானம் கிடைக்கும். அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டிருக்கேன். அடுத்து கோழி, முயல், மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் யோசனை இருக்கு. மலைவாழ் மக்கள்போல இயற்கையுடனான இந்த வாழ்க்கை முறைக்குப் பழகிட்டேன். நகரத்து வாழ்க்கையில கிடைக்காத மனநிறைவை இந்த வாழ்க்கை முறை எனக்குக் கொடுத்திருக்கு” என்றவர் மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, முகேஷ் சேகரன்,

செல்போன்: 73580 71134

செலவுகளைக் குறைக்கும் கம்போஸ்டிங் கழிவறை!

“செலவுகளைக் குறைக்கும் யோசனையிலயும், இயற்கையான தீர்வை முன்வெச்சும்தான் இந்த கம்போஸ்டிங் கழிவறையை கட்டினேன். பெரிய குழி எடுத்து, அதுல தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரெண்டு பேரல் வெச்சிருக்கேன். அதுக்கு மேல மரப்பலகையால மூடியிருக்கேன். பலகையின் மேற்புறத்துல இந்தியன் மாடல்ல ரெண்டு கழிவறை அமைச்சிருக்கேன். அதுக்கு அடிப்புறத்துல இருக்கும் பேரல்ல மலம் சேகரமாகும். இதைச் சாதாரண கழிவறையைப் போலவே பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் மலம் கழிச்ச பிறகு, துர்நாற்றம் வீசாத வகையில சில கைப்பிடி அளவுக்கு மரத்தூளை டாய்லெட் துளையில தூவி விட்டுடுவேன்.

மலம் சேகரமாகும் பேரல்ல தண்ணீர், யூரின் எதுவும் கலக்கக் கூடாது. அதனால, பக்கத்துலயே இன்னொரு குழாய் வழியே சிறுநீர், தண்ணீர் வெளியேறும்படி செய்திடுவேன். நாலு மாச பயன்பாட்டுல முதல் பேரல் நிரம்பிடுச்சு. நிரம்பிய பேரலை 6 மாசத்துக்கு காற்று புகாதபடி மூடி வெச்சுடணும். பிறகு, தண்ணீர் படாதவாறு 5 மாசம் வெயில்ல நல்லா உலர்த்தி, அப்புறமா நிலத்தில் குழி எடுத்துக் கொட்டி மூடிடலாம். வெயில்ல உலர்த்திய பிறகு, இதை மரங்களுக்கு மட்டும் அடியுரமா பயன்படுத்தலாம்னு சிலர் சொல்றாங்க. ஆனா, நான் முயற்சி பண்ணிப் பார்க்கல” என்கிறார் முகேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism