Published:Updated:

புகையிலை வேண்டாம்... கஞ்சா பயிரிட போட்டி போடும் மாநிலங்கள்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

புகையிலை வேண்டாம்... கஞ்சா பயிரிட போட்டி போடும் மாநிலங்கள்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

ண்மையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு, அவையிலிருந்த அத்தனை உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களும்தான். அப்படி என்னதான் பேசினார்.

‘‘ஒருவர் என்னிடம் சொல்லியதைச் சொல்கிறேன். 1960-களில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவருக்கு ஒரு ரகசிய கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், ‘நான் பல ஆண்டுகளாக நேர்மையாக வேலை பார்த்து வருகிறேன்; ஆனால், சம்பளம் ஒருபோதும் உயர்த்தப்படவில்லை’ எனக் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த ஆணையத்தின் தலைவர், அந்தக் கடிதம் எழுதிய நபருக்கு அவரது பெயர் மற்றும் பணி நிலவரம் பற்றி விசாரித்துப் பதில் கடிதம் எழுதினார். உடனே அந்த நபர், மாநில அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சி.சி.ஏ பதவியில் பணிபுரிவதாகப் பதில் கடிதம் எழுதினார்.

அதற்கு முன்பு சி.சி.ஏ பதவி குறித்து அந்த ஆணையத்தின் தலைவருக்குத் தெரியாது. அது தொடர்பாக மேலும் சில விவரங்களை அந்த நபரிடம் கேட்டார். அதற்கு அந்தக் கடிதம் எழுதிய நபர். ‘என் பணி, பதவி குறித்து வெளியில் பகிரக்கூடாது. ஆனால், பணி ஓய்வுபெற்ற பிறகு, அதாவது 1975-ம் ஆண்டுக்கு பிறகு அதைப்பற்றிச் சொல்ல முடியும்’ என்று பதில் அளித்தார்.

‘சம்பள உயர்வு தேவை என்றால், உங்களின் பணி விவரங்களை ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று கடிதம் அனுப்பப்பட்டது.

‘உண்மையைச் சொல்லவில்லையென்றால் சம்பள உயர்வு கிடைக்காது’ என்பதை உணர்ந்த அந்த ஊழியர், ‘சி.சி.ஏ பதவி என்பது சர்ச்சிலின் சிகார் (சுருட்டு) உதவியாளர் (Churchill’s Cigar Assistant)’ என்று அந்த ஆணையருக்கு விளக்கம் அளித்துக் கடிதம் எழுதினார்.

தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியிலிருந்து சுருட்டுக்களை வாங்கி, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் 10 டவுனிங் தெருவுக்கு (பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் அதிகாரபூர்வ இல்லம்) அனுப்ப வேண்டியது சர்ச்சிலின் சிகார் உதவியாளர் பணியாகும். 1945-ம் ஆண்டுத் தேர்தலில் சர்ச்சில் தோல்வி அடைந்த பிறகும் அவருக்குச் சி.சி.ஏ தொடர்ந்து சுருட்டு அனுப்பி வந்தார். சரி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இது முடிவடையும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால் அது தொடர்ந்தது, அந்தப் பதவியும் நீடித்தது’’ என்று பிரதமர் மோடி முடிக்கச் சிரிப்பலைகள் எழுந்தன.

புகையிலையைச் சுருட்டி புகைப்பதால் இதற்குச் சுருட்டு என்று பெயர். ஆங்கிலத்தில் ‘சிகார்’ (Cigar) அழைப்பார்கள். அமெரிக்காவில் விளைந்த இந்தப் பயிரை, கடலோடி கொலம்பஸ் 1492-ம் ஆண்டு ஐரோப்பாவுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். புகையிலைப் பயிருக்குத் தண்ணீர் வளம், நல்ல மண்வளம், காலநிலை... போன்றவை தேவை. ஐரோப்பாவில் இதைப் பயிரிடுவதற்கான சூழ்நிலை இல்லை. எனவே, 16-ம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வழியாக பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்த பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வின்ஸ்டன் சர்ச்சில்
வின்ஸ்டன் சர்ச்சில்

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள காலநிலை, புகையிலைச் சாகுபடிக்குச் சாதகமாக இருந்தது. இதனால், இதன் சாகுபடியும் இங்கு அதிகரித்தது.

இரண்டாம் உலகப்போர் வந்தது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் விரும்பிப் பிடித்த சுருட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆம், உலகப்போர் நடந்ததால், அவர் விரும்பி பிடித்த ஹவாய் சுருட்டுகள் கடல் வழியே வர முடியவில்லை. ஹவாய் தரத்தில் வேறு எங்கு சுருட்டுகள் கிடைக்கின்றன என்ற ஆய்வில் இறங்கியது இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தது. உடனடியாகச் சி.சி.ஏ என்ற சர்ச்சிலின் சிகார் (சுருட்டு) உதவியாளர் பதவி உருவாக்கப்பட்டது. இந்த உதவியாளர் திருச்சிராப்பள்ளியில் உள்ள உறையூரில் தயாரிக்கப்படும் சுருட்டுகளை, மாதம்தோறும் விமானம் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரதமர் பதவியிலிருந்து இறங்கிய பிறகும்கூட, சர்ச்சிலுக்கு இங்கிருந்து சுருட்டை அனுப்பியுள்ளார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், இது நீடித்தது. எனவே, எல்லாவற்றிலும் மாற்றங்கள் தேவை. ஆகவே, தான் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்..’’ என்று பிஜேபி அரசின் வேளாண் சட்டங்களுக்கு முட்டுக்கொடுத்து, இந்த கதையை சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. வேளாண் சட்டங்களின் கதை நாடறிந்தது. புகையிலை கதையினை பார்ப்போம்.

‘புகையிலை, இறப்பின் எளிய வழி’ என்று 2008-ம் ஆண்டு உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்தது. புகையிலை மூலம் உருவாகும் நலக்கேடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தியா இதற்குச் செவி சாய்த்து, புகையிலைப் பொருள்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்ததோடு புகையிலைப் பொருள்களுக்குக் கூடுதல் வரியும் விதித்தது. இதன் மூலம் ஓரளவு புகையிலைப் பயன்பாடு குறைந்துள்ளது. இதன் எதிரொலி புகையிலைச் சாகுபடியிலும் தெரிகிறது.

‘‘16-ம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வழியாக பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்த பகுதிகளில் புகையிலை அறிமுகப்படுத்தப்பட்டது.’’

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளில் நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் புகையிலைச் சாகுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் செல்வ வளத்தில் திளைத்த விவசாயிகள் அந்தப் பகுதியில் உள்ளனர். இப்போது அந்த நிலங்களில், மிளகாய், வெண்டை, கத்திரி... போன்ற மாற்றுப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சேலம், திருப்பூர்... போன்ற மாவட்டங்களில் சிறிய அளவில் புகையிலைச் சாகுபடி நடந்து வருகிறது. புகையிலையைச் சாகுபடி செய்யாதீர்கள் என்று அரசே சொல்லும் நிலை உருவாகியிருக்கிறது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

அதே சமயம், கஞ்சா என்ற `மரிஜுவானா’ (Marijuana) சாகுபடி செய்ய, சில மாநிலங்கள் போட்டிபோட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கஞ்சா பயன்பாட்டுக்குத் தடை இருக்கும் சூழலில், இரண்டு மாநிலங்களில் மட்டும் உற்பத்திக்கும் பயன்பாட்டுக்கும் தடை இல்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. 2017-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் கஞ்சா விளைவிக்கவும் பயன்படுத்தவும் (மருத்துவப் பயன்பாடு மட்டுமே) தடை இல்லை என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2019-ம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்திலும் மருத்துவப் பயன் பாட்டுக்குக் கஞ்சா பயிரிடலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவா மாநில அரசும் கஞ்சா பயிரிடும் பணிகளில் இறங்கியுள்ளது.

கஞ்சா சிறந்த வலி நிவாரணி. தூக்கமின்மை, மன அழுத்தம், வலிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி, பார்கின்சன் நோய், பசியின்மை, ஆஸ்துமா, மூட்டுவலி, புற்றுநோய் போன்ற வற்றால் உருவாகும் நாள்பட்ட வலிகளையும் போக்கும் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.

ஆனால், கஞ்சாவுக்கு மருத்துவக் குணம் இருக்கிறதா, இல்லையா என்று இப்போதும் உலகெங்கும் விவாதம் நடந்துகொண்டிருக் கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 34 நாடுகளில் கஞ்சாவை மருத்துவத்துக்குப் பயன்படுத்த அனுமதி இருக்கிறது. இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று, சிசிலித் தீவில் நோயாளிகளுக்குக் கஞ்சா இலவசமாகவே கொடுத்து வருகிறார்கள். கஞ்சாவின் இலை மற்றும் விதைகள் மூலம் மருந்து தயாரிக்கிறார்கள்.

கஞ்சா செடி
கஞ்சா செடி

கடந்த ஆண்டு, பெங்களூருவில் கஞ்சாவை மருத்துவத்துக்காகப் பயன்படுத்தும் முதல் ஆயுர்வேத மருத்துவ நிலையம் திறக்கப் பட்டிருக்கிறது. இதையொட்டி ‘மருத்துவப் பயன்பாட்டுக்காகக் கஞ்சாவை அனுமதிக்க வேண்டும்’ என்று பலரும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இன்றைக்கும் வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை மற்றும் மகா சிவராத்திரியன்று `பாங்’ என்ற பெயரில் கஞ்சாவில் கிராம்பு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றைச் சேர்த்துப் பானமாக உட்கொள்கிறார்கள். கஞ்சாவைத் தொடர்ந்து பயன்படுத்தினால், அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவார்கள் என்பதால்தான், அரசாங்கம் கடுமை காட்டுகிறது.

ஒருமுறை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள, பூங்கா நகர், புறநகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். இரவு 9 மணிக்கு மேல் இருக்கும். அங்கிருந்த கடைக்கு, இரண்டு இளைஞர்கள் வந்து, ‘‘ண்ணா... கடலை பர்ப்பி ரெண்டு பாட்டில் வேணும். கணக்குல வைச்சுக்கோ’’ என்று கேட்டார்கள். ‘‘டேய், சின்ன வயசு பசங்க. கெட்டுப்போகாதீங்கடா’’ என்று அக்கறையாகச் சொன்னார் கடைக் காரார். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், நிலக்கடலை பர்ப்பி பாட்டில்களுடன் இருட்டில் மறைந்தார்கள்.

‘‘நிலக்கடலை சாப்பிடறது நல்லதுனு உலகச் சுகாதார நிறுவனமே சொல்லுது. நீங்க என்னடான்னா, அந்தப் பசங்களைச் சாப்பிடாதீங்கன்னு சொல்றீங்களே..?’’ என்று கடைக்காரரிடம் கேட்டேன்.

‘‘சார், விஷயம் தெரியாதா? டோப்பு (கஞ்சா) அடிக்கப்போறானுங்க. இனிப்புச் சாப்பிட்டா, டோப்பு போதை சீக்கிரமா இறங்காது. அதனாலத்தான், கடலை பர்ப்பியை வாங்கிட்டுப் போறானுங்க. மெட்ராஸ்ல விக்கிற பாதி பர்ப்பியை டோப்பு அடிக்கிறவனுங்கதான் வாங்கறாங்க...’’ என்று சொல்லி அதிர்ச்சி அடைய வைத்தார்.