Published:Updated:

`சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் டிராக்டர்!' - டஃபே நிறுவனம் அறிவிப்பு

டிராக்டரில் உழவு
டிராக்டரில் உழவு

விவசாயிகளுக்கு உதவும் வகையில் டஃபே டிராக்டர் நிறுவனம் இலவசமாக உழவு ஓட்டிக்கொள்ள டிராக்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதுவும் உலகுக்கு உணவிடும் விவசாயிகள் விளைபொருள் உற்பத்தி, அதன் விற்பனை என்று பல சவால்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் டஃபே டிராக்டர் நிறுவனம் இலவசமாக உழவு ஓட்டிக்கொள்ள டிராக்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தற்போதைய சாகுபடி காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை, டஃபே அறிவித்துள்ளது.

டிராக்டர்
டிராக்டர்

இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 50,000 விவசாயிகளின் 1,20,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021 மே மாதம் முதல் 2021 ஜூலை வரை மாநிலம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும். தமிழ்நாட்டில் 2 ஏக்கர் அல்லது அதற்கு (2 ஏக்கருக்கும்) குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய விவசாயிகளின் நலனுக்கான இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளோம்.

16,500 மேஸி ஃபெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்கள் (Massey Ferguson and Eicher tractors) மற்றும் 26,800 வேளாண் சாதனங்களை இத்திட்டத்தின் மூலம் டஃபே நிறுவனம் வழங்குகிறது.

தமிழக அரசின் உழவன் செயலியில் (Uzhavan app) உள்ள ஜேஃபார்ம் சர்வீசஸின் டிஜிட்டல் செயல்தளத்தின் வழியாகவோ, கட்டணமில்லாத உதவி எண் 1800-4200-100 வழியாகவோ விவசாயிகள் பதிவு செய்து டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது வாடகைக்கு வழங்கலாம். தமிழ்நாடு அரசின் வேளாண்துறை மற்றும் அத்துறையின் மாவட்ட அதிகாரிகளின் ஆதரவோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளது.

உழவன் செயலி
உழவன் செயலி

எப்படிப் பதிவு செய்வது?

ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் விவசாயிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உழவன் செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும். உழவன் செயலியில் கேட்கும் விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும். பிறகு, செயலியின் முகப்பு பக்கத்தில் வேளாண் இயந்திரம் வாடகை மையம் என்ற பிரிவு இருக்கும். அதை க்ளிக் செய்து இருப்பிடம், பயிர், பரப்பளவு விவரங்களைப் பதிவு செய்துகொள்ளவும். அடுத்து இயந்திரத்தை வாடகைக்கு எடுக்க என்ற பிரிவை க்ளிக் செய்து மீண்டும் ஒருமுறை நிலத்தின் பரப்பளவு, பயிர் ஆகிய விவரங்களைக் கொடுத்து சமர்ப்பித்தால் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் வரும்.

உழவு ஓட்டுவதற்கு மட்டுமல்லாமல் விதை போடுவதற்கு, களையெடுப்பதற்கு எனப் பலவித பணிகளுக்கும் கருவிகளை வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போதும் டஃபே நிறுவனம் இந்த வசதியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு