Published:Updated:

பால் விவசாயிகளுக்கு பேரிழப்பு... காலமானார் `பால்’ செங்கோட்டுவேல்!

செங்கோட்டுவேல்
செங்கோட்டுவேல்

இன்று பால் விவசாயிகள் கணிசமான ஒரு வருமானத்தை எடுத்து வருகிறார்கள் என்றால் அதில் இவருக்கும் பங்குண்டு.

தமிழ்நாட்டில் `பால்' செங்கோட்டுவேலை பால் உற்பத்தியாளர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திடம் பேசி பால் கொள்முதல் விலையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வந்தவர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல். இன்று பால் விவசாயிகள் கணிசமான ஒரு வருமானத்தை எடுத்து வருகிறார்கள் என்றால் அதில் இவருக்கும் பங்குண்டு. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் இன்று (அக்.28) காலமானார்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் பேசியபோது, ``நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி கிராமத்தில் 22.12.1929-ம் ஆண்டு பிறந்தவர் செங்கோட்டுவேல். 1974-ல் அவருடைய ஊரில் கூட்டுறவு சங்கம் தொடங்கியதிலிருந்து அதில் உறுப்பினராக இருந்து பிறகு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக இருந்து வந்தார். இன்று ஒரு லிட்டர் மாட்டுப் பால் 32 ரூபாய், எருமைப்பால் 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்றால், அதற்கு இவர் முன்னெடுத்த பல போராட்டங்களே காரணமாகும். அரசிடம் 1980-லிருந்து 2020-ம் ஆண்டு வரை பால் கொள்முதல் விலை உயர்வு கேட்டு பல போராட்டங்களை நடத்தியுள்ளார். சுமார் 38 முறை அரசிடம் பால் கொள்முதல் விலை உயர்வு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

1978-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தை நிறுவுவதற்கு முதன்மை அமைப்பாளராக நியமிக்கப்பட்டு ஒன்றியத்தைப் பதிவு செய்தார். இந்தக் கூட்டுறவு ஒன்றியம் தொடங்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

கே.ஏ.செங்கோட்டுவேல்
கே.ஏ.செங்கோட்டுவேல்

1992-ல் மில்க் அண்டு மில்க் புராடக்ஸ் ஆர்டர் (Milk and Milk Products Order) என்ற உத்தரவைப் பிறப்பித்தது மத்திய அரசு. இந்த உத்தரவுப்படி தனியார் பால் நிறுவனங்களோ, கூட்டுறவு நிறுவனங்களோ குறிப்பிட்ட எல்லைகளுக்குள்தான் பால் கொள்முதல் செய்ய முடியும். அந்த எல்லையை விட்டு வேறு பகுதிகளில் பால் கொள்முதல் செய்யக்கூடாது என்றது அரசு. ``இந்த உத்தரவு நடைமுறைபடுத்தப்பட்டால் பால் கொள்முதலில் பெரிய பாதிப்பு உண்டாகும், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

நாட்டில் எல்லா பகுதிகளிலும் யார் வேண்டுமென்றாலும் பால் கொள்முதல் செய்தால் மட்டுமே பாலுக்கு அதிக விலை கிடைக்கும்" என்று வேண்டுகோள் விடுத்தார். இதன்படி அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆதரவுடன் அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து இந்த உத்தரவை ரத்து செய்யும்படி விளக்கிச் சொன்னார். அதன்பிறகு இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இன்று தனியாரும், கூட்டுறவும் போட்டிப்போட்டுக் கொண்டு பாலை கொள்முதல் செய்கின்றன. இதன்மூலம் இந்தியா முழுவதுமுள்ள பால் விவசாயிகள் இப்போது பயனடைந்து வருகின்றனர்.

2011-ம் ஆண்டு பால் கொள்முதல் விலை உயர்வு கேட்டு இவர் தலைமையேற்று நடத்திய பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் தமிழகமெங்கும் 8 நாட்கள் நடைபெற்று வெற்றி கண்டது. இப்படி பால் மட்டுமல்லாமல், விவசாய மின்சாரம் உள்ளிட்ட பல விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். அவருடைய இழப்பு எங்களுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பேரிழப்பு” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு