Published:Updated:

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: Live Updates: ``நம்மாழ்வார் மையம், தமிழ்வழியில் வேளாண் படிப்பு!"

பல தரப்பினரிடமும் வேளாண்மைக்கு கருத்துகள் கேட்கப்பட்டதால், தமிழக அரசு தாக்கல் செய்யும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

14 Aug 2021 12 PM

- சுமார் 2 மணி நேரம் நீடித்த பட்ஜெட் உரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

- வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.34,220 கோடி

14 Aug 2021 11 AM

- பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்துதல், கால்நடை நலம் மற்றும் நாட்டுகோழி இனப்பெருக்க பண்ணைக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு.

- கறவை மாடு வளர்ப்போரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க 14.28 கோடி ஒதுக்கீடு.

- அரசு மீன் பண்ணைகள், மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.7.07 கோடி ஒதுக்கீடு.

14 Aug 2021 11 AM

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் `நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' தொடங்கப்படும்.

- திருச்சி - நாகை வழித்தடம் வேளாண் தொழிற்சாலைக்காக பெருந்தடமாக அறிவிக்கப்படும்.

- வேளாண்மையில் தொழில் முனைவோரை ஈர்க்க தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் அமைக்கப்படும்.

14 Aug 2021 11 AM

புதிய தோட்டக்கலை கல்லூரி

- கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை படிப்பை தமிழில் வழங்க நடவடிக்கை.

- கிருஷ்ணகிரி ஜீனூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்படும்.

- தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மையம் அமைக்கப்படும்.

- ஈரோட்டில் 100 ஏக்கரில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

14 Aug 2021 11 AM

- ரூ.10 கோடியில் விவசாயிகளை வியாபாரிகளுடன் இணைக்கும் மின்னணு ஏல முறை நடைமுறைப்படுத்தப்படும்.

- 15 மாவட்டங்களில் ரூ.3.5 கோடியில் உலர் களங்கள் அமைக்கப்படும்.

- நீலகிரி மாவட்டம், எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த வேளாண் கிராம சந்தை ரூ.2 கோடியில் அமைக்கப்படும்.

- சென்னை மாநகராட்சியில் கொளத்தூரில் `நவீன காய்கறி விற்பனை அங்காடி' தொடங்கப்படும். இதன்மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும்; விவசாயிகளும் நியாயமான விலை கிடைக்கப்பெறுவர்.

- கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்றவற்றிற்கு புவிசார் குறியீடு பெற அரசு முயற்சி செய்யும்.

- சென்னை, சேலம், திருப்பூர், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகள் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்படும்.

14 Aug 2021 11 AM

நவீன குளிர்ப்பதனக் கிடங்குகள்

விலைவீழ்ச்சியால் விவசாயிகள் தவிப்பதைத் தவிர்க்கவும், விளைபொருள்களை சேமித்து வைக்கவும் ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரு இடங்களில் ரூ.10 கோடி செலவில் புதிய குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

14 Aug 2021 11 AM

உழவர் சந்தைகள் மேம்பாடு

தற்போது உழவர் சந்தைகள் மூலம் தினமும் 2000 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் சுமார் 8000 விவசாயிகள் மூலம் 4 லட்சம் நுகர்வோர்களுக்கு சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன. இதை இன்னும் ஊக்குவிக்கும்வகையில் உழவர் சந்தைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

50 உழவர் சந்தைகளை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்திட 12.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சியில் புதிய உழவர் சந்தைகளும் தொடங்கப்படும்.

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை விவரங்கள் டிஜிட்டல் பலகைகளில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்படும். வரத்து அதிகமுள்ள 50 உழவர் சந்தைகளிலும், 50 விற்பனைகூடங்களிலும் முதல்கட்டமாக இந்த டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படும்.

- உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

- நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

உழவர் சந்தை
உழவர் சந்தை
14 Aug 2021 11 AM

- 100 சதவிகித மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

- 1,700 நீர்ச் சேமிப்பு கட்டமைப்புகள் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

- நவீன முறையில் பூச்சி மருந்து தெளிக்க 4 ட்ரோன்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்க ரூ.23.29 கோடி ஒதுக்கீடு.

- கடலூர் மாவட்டம், வடலூரில் ரூ.1 கோடி செலவில் தோட்டக்கலைப் பூங்கா அமைக்கப்படும்.

- நகர்ப்புறங்களில் 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய 1 லட்சம் மாடித்தோட்ட தளைகள் வழங்கப்படும்.

- ஊரகப் பகுதிகளில் 12 விதைகள் அடங்கிய 2 லட்சம் தளைகள் வழங்கப்படும்.

- காய்கறி, கீரைச் சாகுபடியை அதிகரிக்க மானியம் அளிக்கும் திட்டம் ரூ.95 கோடியில் செயல்படுத்தப்படும்.

- பழப்பயிர் சாகுபடியை அதிகரிக்க விதைப்பண்ணைகள் மூலம் பலவகைச் செடிகள் வழங்கப்படும்.

- பண்ருட்டியில் 5 கோடி செலவில் பலாப் பயிர் மையம் அமைக்கப்படும்.

14 Aug 2021 10 AM

- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படும்.

- 50 உழவர் சந்தைகளின் தரத்தை ஆய்வு செய்து மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு.

- சூரியசக்தி பம்ப்செட்களை உருவாக்க 114 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

- தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2,327 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- இந்தாண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 4,508 கோடி ஒதுக்கீடு.

- சிறு,குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 59 கோடியில் கூட்டுப் பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படும்.

- தென்னை சாகுபடியை அதிகரிக்க 17 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

14 Aug 2021 10 AM

இயற்கை விவசாயிகளுக்குப் பரிசு

இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுபவர்களை மாநில அரசு இனி கௌரவிக்கும். பாரம்பர்ய முறையைப் பின்பற்றி அதிக உற்பத்தியைப் பெறும் விவசாயிகளை அரசு சிறப்பிக்கும். புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இதற்காக 6 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021
14 Aug 2021 10 AM

வேளாண்மைக்கு என தனி அருங்காட்சியம்

உழவர்கள் பற்றிய உண்மைகளைப் பற்றியும், வேளாண்மையின் மகத்துவத்தைப் பற்றியும் இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம். இதற்காக சென்னையில் வேளாண்மைக்கு என தனி அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரவை இயந்திரம், பாரம்பர்யமிக்க நெல் ரகங்கள், பாரம்பர்ய கால்நடைகளின் புகைப்படங்கள், ஐந்திணைகளின் மாதிரிகள், உள்ளூர் பயிர் ரகங்கள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்படும்.

14 Aug 2021 10 AM

- நீடித்த நிலையான பருத்தி இயக்கத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

- டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளுக்காக தஞ்சாவூரில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் துவக்கப்படும்.

14 Aug 2021 10 AM

ரூ.12.44 கோடியில் சிறுதானிய இயக்கம்

சாமை, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும்.

சிறுதானிய இயக்கம் கடலூர், திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்டமாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.12.44 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

14 Aug 2021 10 AM

நெல் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்

தமிழக அரசு நடப்பாண்டில் சன்ன ரகத்திற்கு 70-லிருந்து 100-ஆகவும், சாதாரண ரகத்திற்கு 50-லிருந்து 100-ஆகவும் ஊக்கத்தொகையை உயர்த்தியிருக்கிறது.

எனவே இனி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,060 ரூபாய்க்கும், சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,015 ரூபாய்க்கும் வழங்கப்படும்.

- மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் அறுவடைக்குப் பிறகு இழப்புகளை தவிர்க்கவும் ரூபாய் 52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021
14 Aug 2021 10 AM

மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்

- நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.

- தமிழகத்தின் பாரம்பயர் நெல் ரகங்களை பாதுகாக்க இயற்கை வேளாண்மை அமைப்பு செயல்படும்.

- விதைப்பண்ணைகளில் சுமார் 200 ஏக்கரில் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

- கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 42.50 வழங்கப்படும்.

- மானாவாரி நிலங்களில் மரக்கன்றுகளை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும்.

- கரும்பு பிழித்திறனை அதிகரிக்க ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.

- பயறு வகைகளை மதிய உணவுத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.

- பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை.

- 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் விதைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14 Aug 2021 10 AM

ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டு திட்டம்

இளைய தலைமுறையினருக்கு கணினியைப் பற்றி தெரியும் அளவுக்கு கழனியைப் பற்றி தெரிவதில்லை. இதனால் இளைஞர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது குறைந்துள்ளது. இதை மாற்ற `ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டு திட்டம்' இந்த ஆண்டு 5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2500 இளைஞர்களுக்கு இந்த ஆண்டு இதற்காக பயிற்சிகள் வழங்கப்படும்.

14 Aug 2021 10 AM

இளைஞர்களை வேளாண்மைக்கு கொண்டுவருதல்

இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்க இந்த அரசு கவனம் செலுத்தும். வேளாண் மாணவர்களுக்கு இதற்காக பட்டப்படிப்பின் போதே பயிற்சிகள் வழங்கப்படும்.

14 Aug 2021 10 AM

இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம்

இயற்கை வேளாண் பணிகளை சிறப்பு கவனத்துடன் செயல்படுத்த `இயற்கை வேளாண்மைக்கு' என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.

இயற்கை விவசாயிகளின் பட்டியல் வட்டாரம்தோறும் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு `இயற்கை விவசாயிகள்' என சான்றிதழ் வழங்கப்படும்.

பனை உற்பத்தியை பெருக்க திட்டம்

- பனை விதைகள், பனை விதைப்புக்கு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

14 Aug 2021 10 AM

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் அறிமுகம்

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதலை அதிகப்படுத்தவும்,

சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கவும்,

மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதலை ஊக்கப்படுத்தவும்,

கால்நடை விவசாயிகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும்,

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கவும்

280 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

14 Aug 2021 10 AM

- விளைநிலம் வீட்டுமனைகள் ஆவதால் சாகுபடி பரப்பு குறைகிறது.

- 11.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரிக்க முடிவு.

- 60 சதவிகிதமாக இருக்கும் சாகுபடி பரப்பு 75 சதவிகிமாக உயர்த்தப்படும்.

- இருபோக சாகுபடி 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.

14 Aug 2021 10 AM

போராடும் விவசாயிகளுக்கு காணிக்கை

தமிழக வேளாண்மை பட்ஜெட் 2021, தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக உறுதியோடு போராடிவரும் விவசாயிகளுக்கு காணிக்கை எனச் சொல்லி பட்ஜெட் உரையைத் தொடங்கினார் அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
14 Aug 2021 9 AM

இன்னும் சற்று நேரத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

வேளாண் பட்ஜெட்டை இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

14 Aug 2021 7 AM

தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்

ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டுக்கு இது புதுசு. இதன் மூலம் வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும், விவசாயிகளுக்கு மானியங்கள் நிறைய கிடைக்கும், உணவு உற்பத்தி பெருகும் என்று நம்பப்படுகிறது.

தஞ்சாவூர், கோவை, மதுரை மண்டல வாரியாகவும், மாநில அளவில் சென்னையிலும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடமும், விவசாயப் பிரதிநிதிகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இதுதவிர பல தரப்பினரிடமும் வேளாண்மைக்கு கருத்துகள் கேட்கப்பட்டதால், தமிழக அரசு தாக்கல் செய்யும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேளாண்மை பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்யப்படுகிறது. அதன் விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு