தமிழக வேளாண் பட்ஜெட் 2022 Live Updates: ``இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க ₹1 லட்சம் நிதியுதவி!"

இன்று காலை 10 மணிக்கு 2022-23-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இப்போது பட்ஜெட்டை வாசித்து வருகிறார் அமைச்சர். அதன் முக்கியமான அம்சங்கள் இங்கே...
- தோட்டக்கலைத்துறை மூலம் தமிழ்நாடு அங்கக வேளாண் இயக்கம் (Tamilnadu Organic Farming Mission) 30 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
- திண்டிவனம், தேனி, மணப்பாறையில் ரூ.381 கோடியில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
- பி.எம் கிசான் திட்டத்தை நடைமுறைத்தப்பட்ட நிலவுடைமைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பட்ஜெட் உரை நிறைவடைந்தது
- விதை சான்றளிப்பு பணிகளை விரைவாக வெளிப்படையாக செய்ய ஸ்பெக்ஸ் மென்பொருள் உருவாக்கம்.
- மூலிகைத் தோட்டங்களில் அமைக்க 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்தத் தோட்டங்கள் 4,000 வீடுகளில் அமைக்கப்படும்.
- நாட்டின மீன்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் நாட்டின மீன்கள் வளர்க்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, மீன் குஞ்சு கட்டமைப்பு வலுத்தப்படுத்தப்பட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
- புதிய வேளாண் இயந்திரங்கள், நடமாடும் பழுது நீக்கம் வாகனம் அமைக்க 3.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு. நீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பராமரிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
- பட்டுத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 2022 - 23-ம் ஆண்டில் நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் மூலம் 625 ஏக்கரில் மர மல்பெரி மற்றும் 500 மண்புழு உரக்கூடங்கள் அமைக்க 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- மல்லி, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்களின் சாகுபடியை அதிகரிக்க 5.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- வேளாண் விற்பனை சார்ந்த சேவைகள், செய்திகள் மற்றும் உழவர் சந்தை விலை ஆகியவற்றை வழங்க வேளாண் விற்பனைத்துறை கணினிமயமாக்கப்படும்.
- ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அச்சு வெல்லம், தூள் வெல்லம் தயாரிக்க முதற்கட்டமாக 100 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 1 லட்சம் என்ற கணக்கில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.
- உள்நாட்டு மீன் வகைகளின் உற்பத்தியை ஊக்கப்படுத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- 15 மாவட்டங்களில் விவசாயிகள் ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
- காவிரி, வெண்ணாறு ஆகிய நதிகள் பாயும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களைத் தூர்வார ஒன்றிய - மாநில அரசு நிதியின் கீழ் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார துறைக்கு 5,000 கோடி ரூபாய் வழங்கப்படும்.
- கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் 50% மானிய விலையில் 5,000 ரூபாயில் வழங்க ஏற்பாடு.
- பண்ணை இயந்திரமாக்கலை ஊக்குவிக்க 150 கோடி ஒதுக்கீடு.
- பண்ணைக் கருவிகளுக்கு மானியம் வழங்குவதன் மூலமாக 35,000 விவசாயிகள் பயன்பெறுவர்.
- 145 சூரிய கூடார உலர்த்திகளை 40 சதவிகித மானியத்தில் அமைக்கும் திட்டம் 3 கோடி ரூபாய் ஒன்றிய மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
- 10 குதிரை திறன் வரையிலான சூரிய சக்தியால் இயங்கும் 3,000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் 65.34 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும்.
- விவசாயிகள் இடுபொருள்கள் எடுத்துச் செல்லவும், அறுவடையான விளைபொருள்களை எடுத்துச் செல்ல வசதியாகவும் கிராம பஞ்சாயத்துகளில் சாலைகள் அமைக்க 604 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- 10 லட்சம் பனை விதைகளை அரசு அளிக்கும்.
- மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்புக் கூடம், பனை ஏறும் இயந்திரம் வழங்க 75% மானியம்.
- பனை வெல்லம் தயாரிக்கும் பயிற்சி, உபகரணங்கள் 250 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25 லட்ச பனை விதைகள் நடப்படும்.
- 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கப்படும். புதிய உழவர் சந்தைகளை உருவாக்க 10 கோடி ஒதுக்கப்படும்.
- மகளிரின் அன்றாட வருமானத்தை உயர்த்த மல்லிகை, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்களின் சாகுபடியை 4,250 ஏக்கரில் மேற்கொள்ள ரூ.5.37 கோடி ஒதுக்கீடு
- பூண்டு சாகுபடிக்கு வாய்ப்புள்ள கல்வராயன் மலை, கொல்லிமலை பகுதிகளிலும், பூண்டு சாகுபடி விரிவுபடுத்தப்படும். 1,250 ஏக்கர் பரப்பில் பூண்டு சாகுபடி மேற்கொள்ள 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- 8 கோடி ரூபாய் செலவில் தேன் வளர்ப்புக் கூடங்கள் அமைக்கப்படும்.
- 37 தேன் வளர்ப்புக்கூடங்கள் 8.58 கோடி ரூபாய் ஒன்றிய - மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.
- உள்ளூர் பயிர்களை ஊக்குவிக்கும்பொருட்டு மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்தப்படும்.
- ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளின் பங்கு தொகையைக் குறைத்து உதவிட நடைமுறையில் உள்ள மானியத்தோடு சேர்த்து 20% கூடுதல் மானியம் வழங்க ஏற்பாடு.
- ஏற்றம்தரும் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் குறைந்த வருமானம் தரும் பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள் மலர்கள் சாகுபடி செய்யவும் குறுகிய கால பயிர் சாகுபடி செய்யவும் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 20,000 ஏக்கரில் செயல்படுத்தப்படும்.
- தென்னை, மா, கொய்யாவில் ஊடுபயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊடுபயிர் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை
- விவசாயிகள் இடுபொருள்களைப் பெறும்போது தங்கள் பங்களிப்புத் தொகையை இ-செலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை மூலம் செலுத்த வழிவகை செய்யப்படும்.
- கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் விதைக்கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுகள், ஒரு பருவ விதைக்கரும்பு, கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், உரங்கள் வழங்க ஒன்றிய மாநில நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
- விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க மாவட்ட, வட்ட அளவில் அமைப்புகள் உருவாக்கப்படும்.
- ட்ரோன்கள் மூலம் பூச்சிமருந்து தெளிக்க உழவர் பயிற்சி நிலையங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
- பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- விதை முதல் உற்பத்தி வரை விவசாயிகள் தெரிந்துகொள்ள நவீன செயலி (ஆப்) ஒன்று கொண்டுவரப்படும்.
- மயிலாடுதுறையில் 75 லட்சம் ரூபாய் செலவில் மண் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும். சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்துவதால் 1,20,000 விவசாயிகள் பயன்பெறுவர்.
- மயிலாடுதுறையில் உள்ள கே.ஆர் ராமசாமி சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பழங்குடி மற்றும் ஆதி திராவிட விவசாயிகளுக்கு சிறப்பு மானியம் 20 சதவிகிதம் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
மண் வளம் அறிய சிறப்பு இணையதளம்
- சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைக் கொண்டு `பயறு பெருக்க சிறப்பு மண்டலம்' உருவாக்கப்படும்.
- விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நடவுக்கன்றுகள், பழ மரச்செடிகள், தென்னை மரக்கன்றுகளைக் கணிணியில் முன்பதிவு செய்து காலத்தே சாகுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- `தமிழ் மண் வளம்' என்ற பெயரில் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் சிறப்பு இணையதளம் உருவாக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் பகுதியின் மண்வளத்தை அறிந்துகொள்ள முடியும்.
- திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.
- மரச்சாகுபடியை ஊக்குவிக்க ரூ.12 கோடியில் மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
- முதலமைச்சர் தலைமையில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.
- சூரியகாந்தி சாகுபடியை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படும்.
- பருத்தி உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் 15.32 கோடி செலவில் ஒன்றிய - மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படும்.
- 30,000 மெட்ரிக் டன் விதை நெல் மற்றும் எண்ணெய் வித்து விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்
- சீர்மிகு நெல் சாகுபடிக்கு 32 கோடி ஒதுக்கீடு.
- மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சிறுதானிய சாகுபடி, சிறுதானிய உணவு உற்பத்தி ஆகியவற்றை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் 500 குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- 6 மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்திக்கு 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- 2,500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
- 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், மகாகனி, தேக்கு போன்ற மரங்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும்.
இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படித்த 200 இளைஞர்களுக்கு வரும் நிதியாண்டில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க புதிய திட்டம்
- நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- நெல்லின் உற்பத்தித்திறனை அதிகரிக்க குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்யும் புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 250 ஏக்கரில் செயல் விளக்கத்திடல் அமைக்கப்படும்.
- பாரம்பர்ய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மை தொகுப்புகள் 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய்
- கிராமங்களில் வீடுகளுக்கு தென்னங்கன்று வழங்கும் திட்டம் 300 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.
- பயிர் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த 2,339 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் புதிய திட்டம் நடைமுறை. இதற்கென நடப்பாண்டு 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- 5 கோடி ரூபாய் செலவில் 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்.
- 71 கோடி ரூபாய் செலவில் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- நெல் பாதுகாப்பு இயக்கத்தின் வாயிலாக அரசுப் பண்ணைகளில் 200 ஏக்கரில் 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- 2022 மார்ச் 14 வரை நெல் சாகுபடி பரப்பு 53.50 லட்சமாக உயர்ந்துள்ளது. 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி உயர்ந்துள்ளது.
- தமிழ்நாட்டில் உரம் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளால் பாதிக்கப்பட்ட 3,31,000 விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய இடுபொருள் மானியம் 154 கோடியே 69 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
- விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

கால்நிலை மாற்றத்தை எதிர்கொள்ள!
``காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக்குழு தன் 6-வது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, காலநிலை மாற்றத்தால் வானிலை நிகழ்வுகள், வேளாண்மை, மீன்வளம் ஆகியவை பாதிக்கப்படும். இதனால் வாழிட கட்டமைப்புகள் பாதிப்பு, தனிநபர் வாழ்வும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டிலிலுள்ள 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனத் தெரியவந்திருக்கிறது. எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். மாற்று சாகுபடி பயிர்களான, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றை சாகுபடி செய்ய இந்த நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கப்படும்."
தொடங்கியது வேளாண் அமைச்சரின் உரை
``கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியிட்ட 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுவிட்டன. மீதம் 6 திட்டங்களுக்கும் விரைவில் நிறைவேற்றப்படும்."
``கடந்த ஆண்டு பிறந்த குழந்தையாக இருந்தது வேளாண் பட்ஜெட். இந்தாண்டு நடக்கிகிற குழந்தையாக இருக்கிறது. அடுத்த பட்ஜெட் ஓடுகிற குழந்தையாக இருக்கும்."
- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தாக்கலாகும் இரண்டாவது வேளாண் பட்ஜெட்

`வேளாண்மைக்கு... தனி பட்ஜெட்!’ வேண்டும் என்கிற நீண்டகால கோரிக்கை, கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றி வைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, 2021-22-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக இன்று தாக்கல், செய்யப்பட உள்ள 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் இன்னும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், நிறைய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த பட்ஜெட்டின் முக்கியமான அம்சங்களை தவறாமல் படிக்க இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்!