Published:Updated:

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: `மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது!' - கொதிக்கும் விவசாயிகள்

நெல்
நெல்

விலைவாசி உயர்வு மற்றும் கொரோனா முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சற்று அதிகமாக வழங்கப்படும் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

2021-22-ம் ஆண்டுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக, குவிண்டாலுக்கு 1,940 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ``இது நியாயமான விலை அல்ல; மத்திய அரசு, வழக்கம் போல் இந்த ஆண்டும் தங்கள் வயிற்றில் அடித்துவிட்டது" என விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். கடந்த ஆண்டு 1,868 ரூபாய் வழங்கப்பட்டது. விலைவாசி உயர்வு மற்றும் கொரோனா முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சற்று அதிகமாக வழங்கப்படும் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ``இந்த ஆண்டுக்கு வெறும் 72 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, 1940 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எப்படி எங்களுக்கு கட்டுப்படியாகும்? எங்களது உழைப்புக்கும் முதலீட்டும் ஏற்ற லாபம் கிடைக்காது" என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

நெல்
நெல்
கழிவுநீர் பிரச்னையால் கவலையுறும் தஞ்சை விவசாயிகள்; நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி விளைப்பொருள்களுக்கு உற்பத்தி செலவோடு, கூடுதலாக 50 சதவிகிதம் லாபம் சேர்த்து, விலை நிர்ணயிக்கப்படும் என 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியும், மத்திய பா.ஜ.க அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இது ஒருபுறமிருக்க, விலைவாசி உயர்வு, வேலையாட்கள் கூலி உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளதாக விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன், ``2004-ம் ஆண்டு, வேளாண் விஞ்ஞானி எம்,எஸ்.சுவாமிநாதன் குழு வழங்கிய பரிந்துரையின்படி, விளைபொருள்களை சாகுபடி செய்வதற்கான உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் லாபம் சேர்த்து விலை நிர்ணயிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை மத்திய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்தவில்லை. இந்த ஆண்டுக்கு 1,940 ரூபாய் மட்டுமே விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் இந்த விலை போதுமானதல்ல. டீசல் விலை உயர்வு காரணமாக டிராக்டர், நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம் ஆகியவற்றின் வாடகை உயர்ந்துவிட்டது. இடுபொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்’’ என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இந்நிலையில், மத்திய அரசு நெல்லுக்கான ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு வெறும் ரூ.72 உயர்த்தி அறிவித்துள்ளது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டதுபோல உள்ளது’’ என்றார்.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

தஞ்சையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி ஜீவக்குமார், ``விவசாய இடுபொருட்களின் விலை மட்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால், விவசாயிகளின் உற்பத்தி பொருளான நெல் உள்ளிட்ட விளைபொருள்களுக்கு மட்டும் உரிய விலை கிடைப்பதில்லை.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

100 நாள் வேலை திட்டப்பணிகளால், விவசாயத் தொழிலாளர்களின் தினக்கூலி உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 மட்டுமே உயர்த்தியுள்ளது, விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் மத்திய அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறை கிடையாது என்பதை இது மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மத்திய பாஜக அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக செயல்படக்கூடிய அரசு என்பது ஏற்கெனவே நாங்கள் அறிந்ததுதான்’’ எனக் கடுமையாகச் சாடினார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வாபஸ் பெற்று, விவசாயிகளை ஓரளவுக்காவது திருப்திப்படுத்தக்கூடிய விலையை அறிவிக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு