Published:Updated:

நாளை தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் விவசாயிகள்; வைக்கப்போகும் கோரிக்கைகள் என்னென்ன?

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்ததற்காக தமிழக முதல்வரைச் சந்தித்து நாளை விவசாயிகள் நன்றி தெரிவிக்க இருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10 விவசாயிகள் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திக்க இருக்கிறார்கள். ``தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினைப் பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என சட்டப்பேரவையில் நடைபெற்ற மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக விவசாயிகளின் வரலாற்றில் ஒரே அறிவிப்பில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுவது இதுதான் முதல் முறை என நெகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில்தான் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் ஒருங்கிணைப்பில் 10 விவசாயிகள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்கள்.

Tamilnadu Chief minister MK Stalin
Tamilnadu Chief minister MK Stalin
`ஒரே அறிவிப்பில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள்; இதுதான் முதல் முறை!' - நெகிழும் விவசாயிகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து, 2003-ம் ஆண்டிலிருந்து 4.23 லட்சம் விவசாயிகள் தமிழ்நாட்டில் காத்திருக்கிறார்கள். இது கிடைக்காததால் விவசாயிகள் சந்தித்து வரும் இடர்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நிலத்தடி நீரை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் வேதனையைச் சந்தித்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

குறிப்பாக தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தமிழக அரசின் சார்பில் தஞ்சையிலும் சென்னையிலும் நடத்தப்பட்ட விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இது குறித்து வலியுறுத்தினோம். தமிழக சட்டமன்றத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி மானியக்கோரிக்கைக்கு சில தினங்களுக்கு முன்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதுபோன்று இன்னும் பல வகைகளிலும் அரசின் கவனத்திற்கு எங்களது கோரிக்கையை கொண்டு சென்றோம். இந்நிலையில்தான் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் வரலாற்றில் ஒரே அறிவிப்பில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுவதுதான் இதுதான் முதல் முறை. விவசாயிகளின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு, இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்க விரும்பினோம். இதற்கு முறைப்படி அனுமதி கோரினோம். அனுமதி கிடைத்துள்ளது. நாளை முதல்வரைச் சந்திக்கும் போது சில கோரிக்கைகளையும் வலியுறுத்தவுள்ளோம்.

Farmer (Representational Image)
Farmer (Representational Image)
AP Photo / Rajesh Kumar Singh
`அது கார்ப்பரேட்களுக்கே உதவியது!' - நீக்கப்பட்ட ஒப்பந்த பண்ணை தொழில் சட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி

அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டு 50,000 மின் இணைப்புகள் வழங்க்ப்படும் என அறிவித்தார்கள். தட்கல் திட்டத்தில் பணம் கட்டியவர்களுக்கு அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒரு வருடம் ஆகியும் அவர்களில் பலருக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழாண்டு புதிதாக வழங்கப்படவுள்ள விவசாய மின் இணைப்பு ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவர்கள், மலைவாழ் உழவர்கள், பெண் உழவர்கள், திருநங்கை உழவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளி உழவர்கள், சிறு, குறு குத்தகை விவசாயிகள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள், முன்னாள் படை வீரர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க, 5,000 மின் இணைப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். காய்கறி, மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. மற்ற விவசாயிகளைப்போல் இவர்களும் வேளாண் உற்பத்தியில்தான் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஒருதலைபட்சமாக இவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 15,000 விவசாயிகள் இதுபோல் கட்டண மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

நீர்நிலைகளில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே விவசாய மின் இணைப்பு பெற முடியும் என 1965-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற்றால்தான் மின் இணைப்பு பெற முடியும் என்ற சூழல் உருவானது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். டெல்டாவைப் பொறுத்தவரை, ஆறுகளும், வாய்க்கால்கலும் விவசாய நிலங்களோடு பின்னி பிணைந்துள்ளவை. இந்த விதிமுறையை நீக்கினால்தான் விவசாயிகள் பலன் பெற முடியும். இதுபோல் இன்னும் சில கோரிக்கைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு