`நகைக்கடன் தள்ளுபடி அடகுக் கடைக்காரர்களுக்குத்தான் நற்செய்தி... ஏன்?' - விவசாயிகள் சொல்லும் காரணம்

``தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு, அடகுக்கடைகாரர்களுக்கும் நகைக் கடைக்காரர்களுக்கும்தான் மிகவும் இனிப்பான செய்தி" என்கிறார் சுந்தர விமலநாதன்.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 6 சவரன் வரையிலான நகை அடகுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால் கிராமப்புற ஏழை எளிய மக்கள், சிறு குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயனடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இது எந்தளவுக்கு உண்மை, இதன் யதார்த்தம்தான் என்ன விவசாயிகளிடம் பேசியபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன. நகைக் கடன் தள்ளுபடியால் கூட்டுறவு வங்கிகளை விரைவில் இழுத்து மூடும் நிலை நெருங்கிக் கொண்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாய கடன் 12,110 கோடி ரூபாயை ஏற்கனவே தமிழக அரசு தள்ளுபடி செய்த நிலையில், தற்போது நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் தற்போது அறிவித்துள்ளார். ``கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.
இப்பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக தமிழக அரசு மீட்டு வருகின்றது. இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாயத் தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். கொரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை. நகைக் கடன் பெற்று திரும்பச் செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்துப் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு எந்தளவுக்கு கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கை கொடுக்கும்? இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளருமான சுவாமிமலை சுந்தர விமலநாதனிடம் பேசியபோது, ``இந்த அறிவிப்பு, அடகுக்கடைகாரர்களுக்கும் நகைக் கடைக்காரர்களுக்கும்தான் மிகவும் இனிப்பான செய்தி. தமிழ்நாட்டில் தேநீர் கடை இல்லாத கிராமங்களை கூட நிறைய பார்க்கலாம்... ஆனால் அடகுக் கடை இல்லாத கிராமங்களை பார்ப்பது மிகவும் அரிது. எல்லா கிராமங்களிலும் வடநாட்டுக்காரர்கள் இத்தொழிலை செய்து வருகிறார்கள். மேலும் அரசு ஊழியர்களில் ஒரு சிலரும், இதில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களுக்கும் கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கும் ரகசிய தொடர்பு உண்டு. கூட்டுறவு வங்கி அலுவலர்கள், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு கடன் கொடுப்பதை விட, அடகு கடைகாரர்களுக்கு நகை கடன் கொடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் அவர்கள் கமிஷன் அதிகம் கொடுக்கிறார்கள். கிராமப்புற மக்களிடம் அதிக வட்டிக்கு நகையை அடகு பிடிக்கும் இவர்கள், அதனை கூட்டுறவு வங்கிகளில் மிகவும் குறைவான வட்டிக்கு அடமானம் வைக்கிறார்கள். அடகுக் கடையில், தங்களது, நகைகளை அடமானம் வைத்தவர்கள், அதனை மீட்க சென்றால், மறுநாள் வரச் சொல்வது வழக்கம். காரணம், கூட்டுறவு வங்கியில் அந்த நகை அடமானம் வைக்கப்பட்டிருக்கும். நகைக் கடைகாரர்களும் தங்களது மூதலீட்டுக்காக, குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகைக் கடன் தள்ளுபடியால் 80 சதவீதம் அடகுக்கடைகாரர்களும் நகைக் கடைகாரர்களும்தான் பலனடையப் போகிறார்கள்.

2016-17-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நிலவிய வறட்சியின் காரணமாக இங்கு விவசாயிகள் வாங்கிய குறுகிய கால பயிர்க் கடன்களை, மத்திய கால மறுகடனாக தமிழக அரசு ஒத்தி வைத்திருந்தது. அந்தக் கடன்களை விவசாயிகளால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த, கூட்டுறவு வங்கி விவசாய கடன் 12,110 கோடி தள்ளுபடி பலனும் அந்த விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. காரணம், அரசாணையில் குறுகிய கால பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் விவசாயிகள் பயனடைய வேண்டுமென்றால், அதை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அடகுக்கடைகாரர்களும், நகைக்கடைகாரர்களும் பயனடையும் வகையில் நகைக் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.’’ என ஆதங்கப்பட்டார்.
மத்திய கால மறுகடன் தள்ளுபடி குறித்த விவசாயிகளின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும்.