Published:Updated:

`5,309 கி.மீ நீளம்; தூர்வாரப்படும் 1,325 வாய்க்கால்கள்!’- தஞ்சையில் குடிமராமத்துப் பணிகள் தீவிரம்

தூர் வாரும் கலெக்டர் கோவிந்தராவ்
தூர் வாரும் கலெக்டர் கோவிந்தராவ் ( ம.அரவிந்த் )

ஒரு நபருக்கு 32 மீட்டர் என ஒதுக்கப்பட்டு இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5,309 கிலோ மீட்டர் நீளத்தில் 1,325 வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன.

தஞ்சாவூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 நாள் பணியாளர்களைக் கொண்டு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆய்வுக்குச் சென்ற கலெக்டர் தானே வாய்க்காலில் இறங்கி மண் வெட்டியின் மூலம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். கலெக்டரின் இந்தச் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாசன வாய்க்காலை தூர் வாரும் கலெக்டர்
பாசன வாய்க்காலை தூர் வாரும் கலெக்டர்

தஞ்சாவூரில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. அத்துடன் ஆறுகளிலிருந்து `டி’ பிரிவு என சொல்லப்படுகிற வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்குத் தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்கால்களை அந்தந்தக் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளைக் கலெக்டர் கோவிந்தராவ் வாளமரக்கோட்டை, காட்டூர், தென்னமநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அப்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மண் வெட்டியைக் கையில் எடுத்து, தானே வாய்க்காலில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். மண்ணை வெட்டி வாய்க்காலின் கரையில் போட்டார். அத்துடன், ``நம்ம ஊருக்காக, நம்ம விவசாயிகளுக்காக இந்தப் பணியைச் செய்கிறோம்.

ஆய்வு செய்த கலெக்டர்
ஆய்வு செய்த கலெக்டர்

இதில், எந்தச் சுனக்கமும் இல்லாமல் ஏனோ தானோ வென்று செய்யாமல், முழுமையாக முறையாகச் செய்யும் பட்சத்தில் உங்கள் ஊருக்கும் நல்லது நடக்கும் நமக்கும் சந்தோஷமாக இருக்கும். நம்முடைய முதுகெலும்பான விவசாயிகளும் மகிழ்ச்சியாக விவசாயம் செய்வார்கள்’’ எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அனைவரும் நெகிழ்ந்ததுடன் கலெக்டருக்கு நன்றி கூறினார்கள். இதையடுத்து, `இந்தப் பணியை சிறப்பாகச் செய்வோம் சார்’ என உறுதி கூற விறுவிறுப்பாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கலெடர் கோவிந்தராவிடம் பேசினோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணிதுறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.128 கோடியில் குளங்கள், பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடக்கின்றன. இதன் மூலம் தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் 608 குளங்கள் தூர்வாரப்படுகின்றன. இதில், முத்தாய்ப்பான விஷயம் என்னவென்றால் ஆறுகளிலிருந்து டி பிரிவு வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்கு பாசனத்துக்காகத் தண்ணீர் செல்கிறது.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

இந்த வாய்கால்கள் சேதமடைந்து தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்தன. இதனால், தண்ணீர் வந்தும் பயன் பெற முடியாமல் விவசாயிகள் இதுவரை தவித்தனர். அதன்படி எந்தெந்த ஊர்களில் தண்ணீர் செல்லாதபடி வாய்கால்கள் இருக்கின்றன என்பது குறித்த புள்ளி விவரங்களைக் கடந்த டிசம்பர் மாதமே எடுத்ததுடன் அவற்றைத் தூர் வாருவதற்கு எவ்வளவு செலவாகும் எனத் திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டது. தற்போது நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

அதன்படி அந்த வாய்க்கால்களை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒரு வகையில் பாசன வாய்க்கால்கள் புத்துயிர் பெறுவதுடன் மற்றொரு வகையில் 100 நாள் பணியாளர்களுக்கு வேலைகிடைத்து வருமானமும் கிடைக்கிறது.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

ஒரு நபருக்கு 32 மீட்டர் என ஒதுக்கபட்டு இதன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 5,309 கிலோ மீட்டர் நீளத்தில் 1,325 வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன. `இது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இதை முறையாகச் செய்யுங்கள்’ எனக் கூறி ஊக்கப்படுத்துவதுடன் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறேன். கடைமடைப் பகுதியில் உள்ள குக்கிராமத்தின் வயலுக்கு அருகில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் பாய்வதால், நிச்சயம் விவசாயிகளுக்கு பெரிய நன்மையை இந்தப் பணி தரும். ஊரும் பசுமையாக மாறும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு