Published:Updated:

`பெரிய விவசாயியா ஆகணும்கிறதுதான் என் லட்சியம்!' - இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரிப் பெண்

குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர்

தஞ்சாவூரைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஒருவர், விவசாயத்தின்மீது கொண்ட ஆர்வத்தால், தன் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்ததுடன், தன் சொந்த முயற்சியில் 1,500 மரக்கன்றுகளை நட்டு அசத்தியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு அருகில் உள்ள பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், குறிஞ்சிமலர். பட்டதாரிப் பெண்ணான இவர், விவசாயத்தின்மீது ஆர்வம்கொண்டு, தன்னுடைய வீட்டில், சொந்த முயற்சியால் காய்கறித் தோட்டத்தை அமைத்துள்ளார். பின்னர், விவசாயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதற்குரிய பயிற்சியை எடுத்துக்கொண்ட பிறகு, தற்போது இரண்டரை ஏக்கர் நிலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட தேக்கு மரக்கன்றுகளை நட்டு அசத்தியிருக்கிறார்.

குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர்

இதுகுறித்து குறிஞ்சி மலரிடம் பேசினோம், ``எங்க தாத்தா, தமிழ்ப் புலவராக இருந்தவர். தமிழ் மீதும் மண் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால், எங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பனிமலர், தங்க மலர்,பொன் மலர், ஆதிரை நல்லாள், இசை அமுது, நகை மொழி எனப் பெயர் வைத்திருந்தார். எங்க அப்பா சபாபதிக்கு நான் ஒரே மகள். நான் பி.டெக் உயிரி தொழில்நுட்பவியல் படித்தேன். படிப்பு முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. அப்பா, `நான் நல்ல வேலைக்குப் போக வேண்டும்' என விரும்பினார்.

Vikatan

அதனால், சென்னையில் நல்ல வேலை தேடி அழைந்து கொண்டிருந்த எனக்கு, ஒரு வேலை கிடைத்தது. அதில் ஓரளவுக்கு சம்பளம் கிடைத்தாலும் என் மனதுக்கு நிறைவைத் தரவில்லை. பசுமை பூமியாக சொந்த ஊர் இருந்தும் அங்கு இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னைத் துளைத்தெடுத்தது. அத்துடன், எங்க அப்பா கெமிக்கல் இன்ஜீனியரிங் படித்தவர். ஆனால், அதற்குரிய வேலை கிடைக்காமல் திருப்பூரில் பனியன் ஃபேக்டரியில் வேலைபார்த்துவருகிறார்.

மரக்கன்று
மரக்கன்று

இதையும் கவனத்தில்கொண்ட நான், `படித்த படிப்பிற்கான வேலை செய்ய வேண்டும், இல்லை என்றால் மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும்' என முடிவெடுத்தேன். உடனே, சென்னையில் பார்த்த வேலையை உதறிவிட்டு, சொந்த ஊருக்கு பஸ் ஏறினேன். இதற்கு முன்பே நம்மாழ்வார் அய்யா பேசிய ஏகப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், `மண் நன்றாக இருந்தா மற்றது எல்லாம் தானாக நல்லா அமையும்' என அவர் அடிக்கடி பேசுவதைக் கேட்டேன்.

வீட்டுக்கு வந்ததும், `இனி நான் வேலைக்குப் போகமாட்டேன் விவசாயம் செய்யப் போகிறேன்' என சொன்னதும், எல்லோரும் அதிர்ந்துவிட்டார்கள். `நம்மகிட்ட விவசாயம் செய்ய போதுமான நிலம் இல்லையே? தவிர, பொம்பளை புள்ள உனக்கு விவசாயத்தில் என்ன தெரியும்' எனக் கேட்டனர். அதற்கு, `கற்றுத் தெரிந்துகொள்வேன்' எனக் கூறி, விவசாயத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டேன். மேலும், அதற்குரிய பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். குமிழ் சந்திரசேகர் என்பவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்.

குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர்

கிடைத்த அனுபவத்தை வைத்து வீட்டுக்கு அருகிலேயே அவரை, பாகற்காய், புடலை, பீர்க்கங்காய், புளிச்சக் கீரை உள்ளிட்டவைகளைப் பயிர் செய்தேன். இதன் விதைகளை நன்றாகக் காயவைத்து, கால்சியம் சத்து மிகுந்த சுவற்றிற்கு அடிக்கும் சுண்ணாம்பை விதைகளின் மீது லேசாகத் தெளித்து நிலத்தில் ஊன்றினேன். நன்கு வளர ஆரம்பித்த செடிகள், பின்னர் காய்த்துக் குலுங்கத் தொடங்கின. அன்றைக்கு என் மனம் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காய்கறிகள் எங்க வீட்டுக்கு மட்டும் இல்லாமல், அருகில் இருந்தவர்களுக்கும் பறித்துக் கொடுத்து மகிழ்ந்தேன்.

`நமக்கெல்லாம் விருது கொடுப்பாங்களான்னு யோசிச்சேன்!'- மழைநீரை சேகரித்த விவசாயி; நெகிழவைத்த கலெக்டர்

அதன்பிறகு, விவசாயத்தின்மீது நான் வைத்திருக்கும் வைராக்கியத்தை எல்லோரும் உணர ஆரம்பித்தனர். என்னுடைய உறவுக்காரர் ஒருவர், இரண்டரை ஏக்கர் நிலத்தை, `தேக்கு மரக்கன்றுகள் ஊன்றிக் கொடுக்க வேண்டும்' என என்னிடம் ஒப்படைத்தார். நிலத்தின் பரப்பைவைத்து 1,500 கன்றுகள் ஆகும் எனச் சொன்னேன். உடனே வாங்கிக் கொடுத்துவிட்டார். அதன் பிறகு, கன்று நடுவதற்கு ஏற்ற வகையில் நிலத்தைத் தயார் படுத்தியதுடன் தண்ணீர் பாய்கின்ற வகையில் லேசான வரப்புகள் அமைத்தேன்.

மரக்கன்று
மரக்கன்று

பின்னர், மூன்று பேரின் துணையுடன் எட்டுக்கு எட்டு இடைவெளி விட்டு 1,500 மரக்கன்றுகளை நான்கு நாள்களில் நட்டு முடித்தேன். `ஒரு வருடம் கழித்து கன்றுகள் மரமாக வளர்ந்திருக்கும். இதன் நடுவே ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யலாம்' என்றும் கூறினேன். இது எனக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. யார் என்னை மரக்கன்று ஊன்ற அழைத்தாலும் செய்துதர தயாராக இருக்கிறேன். அடுத்ததாக, பஞ்ச கவ்யா, அமிர்தக் கரைசல், மண் புழு உரம் தயாரிப்பதுடன், இதைக் குறைந்த விலையில் விவசாயிகளுக்குக் கொடுத்தும், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்போகிறேன். எங்களுக்கென அரை ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில், நான் நினைத்தபடி விவசாயம் செய்ய இருக்கிறேன். வரும் காலத்துல பெரிய பெண் விவசாயியாக இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம். மனசு விரும்பி, மண்ணை நேசிச்சி இதில் ஈடுபடுவதால், உடலோடு மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு