நாட்டு நடப்பு
Published:Updated:

மாதம் ரூ.1,00,000; எருமை வளர்ப்பில் அசத்தும் டீக்கடைக்காரர்; பால் மதிப்புக் கூட்டுதலில் அதிக லாபம்!

எருமைகளுடன் சுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
எருமைகளுடன் சுப்ரமணியன்

கால்நடை

எருமை மாடுகள் வளர்ப்பு என்பது தற்போது மிகவும் அரிதாகி வருகிறது. இவற்றை வளர்ப்பது ஒரு கௌரவக் குறைச்சல் என்ற தவறான எண்ணம் இருந்து வருகிறது. இதனால் பலரும் எருமை வளர்ப்பில் இறங்க தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் 25-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை மிகவும் நேசிப்போடு வளர்த்து வருவது கவனம் ஈர்க்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செம்மண் கோட்டை கிராமம். இக்கிராமத்தின் பிரதான சாலையில் சுப்ரமணியனின் வீடும், இதற்கு எதிர்புறம் எருமை மாடுகள் வளர்ப்புக்கான கொட்டகையும் உள்ளது.

எருமைகளுடன் சுப்ரமணியன்
எருமைகளுடன் சுப்ரமணியன்

ஒரு மாலை வேளையில் சுப்ரமணியனை சந்திக்கச் சென்றோம். மேய்சலுக்கு விட்ட எருமை மாடுகளைக் கொட்டகைக்கு ஓட்டி வருவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தவர், நம்மைக் கண்டதும் சிரித்த முகத்துடன் வரவேற்றார். ‘‘அரை கிலோ மீட்டர் தூரத்துல மாடு மேய்ச்சல்ல நிக்குது. வாங்க போய் ஓட்டிக்கிட்டு வருவோம்’’ என்று நம்மையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாகக் கிளம்பினார்.

‘‘37 வருஷத்துக்கு முன்ன, ஒரே ஒரு எருமை மாட்டுல ஆரம்பிச்சது. இப்ப என்கிட்ட 18 எருமை மாடுகளும், 8 எருமை கன்றுக் குட்டிகளும் இருக்கு. இதுங்க முரா வகையைச் சேர்ந்த எருமை மாடுங்க. இதுங்கள எங்க குடும்ப உறவா நினைச்சு நேசிப்போடு வளர்த் துக்கிட்டு இருக்கோம். இதுங்களும் எங்க கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்கும். காசு பணத்துக்குப் பஞ்சம் இல்லாம, இன்னைக்கு நாங்க வசதியா வாழ்ந்துகிட்டு இருக்கோம்னா, அதுக்கு இந்த எருமை மாடுகள்தான் காரணம்’’ எனக் கூறிக்கொண்டே கன்றுக்குட்டி ஒன்றைப் பிடித்து முகத்தோடு முகம் புதைத்து கொஞ்சினார்.

மேய்ச்சலில் எருமைகள்
மேய்ச்சலில் எருமைகள்

‘‘எனக்கு இப்ப 64 வயசாகுது. மூணாவது வரைக்கும் படிச்சிருக்கேன் எங்க குடும்பத்துக்குனு சொந்தமா ஒன்றரை ஏக்கர் நிலம் இருந்துச்சு. என்னோட அப்பாவுக்கு உதவியா சின்ன வயசுலயே விவசாயத்துல இறங்கிட்டேன்.

எனக்குக் கல்யாணம் ஆன பிறகு, தனிக் குடித்தனம் போயிட்டோம். அதனால பொருளாதார ரீதியா ரொம்ப சிரமப் பட்டேன். இதுக்கு இடையில என் மனைவி யோட தங்கையையும் கல்யாணம் செஞ்சு கிட்டேன். வறுமை வாட்டி எடுத்துச்சு. மூணு பேரும் விவசாயக்கூலி வேலைக்குப் போவோம். ஆனாலும்கூட வறுமையில இருந்து மீண்டு வரவே முடியலை.

நாங்க கஷ்டப்படுறதைப் பார்த்து மனசு பொறுக்காத என்னோட மாமனார், 1985-ம் வருஷம், கொரடாச்சேரியில இருந்து 900 ரூபாய்க்கு ஒரு எருமை மாட்டை வாங்கிக் கிட்டு வந்து எங்கிககிட்ட கொடுத்தார். அப்ப அது நிறைமாச சினையா இருந்துச்சு. அடுத்த சில நாள்கள்ல அந்த எருமை மாடு கன்று போட்டுச்சு. இதுங்களை நல்லபடியா வளர்த்து பால் வியாபாரம் செஞ்சா, நிச்சயமா நல்ல நிலைக்கு வந்துடலாம்ங்கற நம்பிக்கையும் வைராக்கியமும் வந்துச்சு.

எருமை மாடு நிறைய பால் கொடுத்துச்சு. மேய்ச்சல்ல விட்டு வளர்த்ததால, எனக்கு செலவுகள் இல்லை. பால் மூலமா கிடைச்ச பணத்தைச் சேர்ந்து வச்சு, இன்னொரு எருமை மாட்டை கன்னுக்குட்டியோடு சேர்த்து வாங்கினேன். அடுத்தடுத்த வருஷங் கள்ல மாடுகளோட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சது.

மேய்ச்சலில் எருமைகள்
மேய்ச்சலில் எருமைகள்

எருமை மாடுகள் மூலம் கிடைச்ச பாலை வெளியில விக்காம, ஒரு டீ கடை வச்சு நாமலே பாலை பயன்படுத்திக்கிட்டா நிறைய லாபம் பார்க்கலாம்ங்கற ஒரு யோசனை வந்து ஒரு டீக்கடையை ஆரம்பிச்சேன். நான் நினைச்சது மாதிரியா வெற்றிகரமா அமைஞ்சிது.

எருமை மாட்டுப் பால்ல போடுற டீ ரொம்பச் சுவையா இருக்கும். அதனால கடை திறந்த சில நாள்கள்லயே என்னோட டீ கடை ரொம்பப் பிரபலமாயிடுச்சு. வியாபாரம் நல்லா சூடுபுடிச்சிடுச்சு’’ என்று சொன்னவர், இதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த விவரத்தை பகிர்ந்துகொண்டார்.

‘‘இப்ப என்கிட்ட 18 மாடுகளும், 8 கன்னுக்குட்டிகளும் இருக்கு. இதுல 7 மாடுகள் கறவையில இருக்கு. ஒரு மாடு தினமும் 7 லிட்டர் பால் கொடுக்குது. 7 மாடுகள்ல இருந்து மொத்தம் 49 லிட்டர் பால் கிடைக்குது. வெளியில கொஞ்சம்கூடப் பால் விற்பனை செய்றதில்லை. எங்க மாடுகள் கொடுக்கக்கூடிய பால் எல்லாத்தையுமே எங்க டீ கடைக்குத்தான் பயன்படுத்திக்குறேன். பால் ரொம்பத் திடமா இருக்குறதுனால, தண்ணி கலந்துக்குவோம். தண்ணி கலந்த பிறகுகூடப் பால் நல்லா திக்காதான் இருக்கும்.

எருமைகளுடன் சுப்ரமணியன்
எருமைகளுடன் சுப்ரமணியன்

தினமும் டீ போட்டு விற்பனை செய்றேன். ஒரு கிளாஸ் டீ 10 ரூபாய், பார்சல் டீ 15 ரூபாய் விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஒரு லிட்டர் பால்ல போடுற டீ மூலம் 60 ரூபாய் வருமானம் கிடைக்கும். 90 லிட்டர் பால்ல போடுற டீ மூலம் மொத்தம் 5,400 ரூபாய் வருமானம் கிடைக்கும். டீத்தூள், சர்க்கரை, காஸ், மாடுகளுக்கான அடர்தீவனத்துக்கான செலவுகள் போக, மீதி 3,000 ரூபாய் லாபமா கிடைக்கும். ஒரு மாசத்துக்கு 90,000 ரூபாய் லாபம் கிடைக்கும். சாணம் விற்பனை செய்றது மூலமா ஒரு மாசத்துக்கு 10,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆகமொத்தம் எருமை மாடுகள் வளர்ப்பு மூலம் எனக்கு மாசத்துக்கு 1,00,000 ரூபாய் லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு’’ எனத் தெரிவித்தார்.

‘‘எங்க குடும்பத்தோட பொருளாதார நிலை படிப்படியா முன்னேறினதுக்கு இந்த எருமை மாடுகள்தான் காரணம். அதுமட்டுமா. ஆரம்பத்துல ரோட்டுல விழுந்து கிடக்குற அளவுக்கு மதுவுக்கு அடிமையா இருந்த நான், பிறகு திருந்தி வந்ததுக்கும் என்னோட மாடுகள்தான் காரணம். எனக்கு ரெண்டு சம்சாரம் எட்டுப் பிள்ளைங்க. என்னையும் சேர்த்து மொத்தம் 11 பேர். இவ்வளவு பெரிய குடும்பம். ஆனாலும், பொருளாதார ரீதியா எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படாம இருந்த துக்கு இந்த எருமை மாடுகள் மூலம் கிடைச்ச வருமானம்தான் காரணம்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.


தொடர்புக்கு, சுப்ரமணியன்

செல்போன்: 95979 19077

கொட்டகையில் எருமைகள்
கொட்டகையில் எருமைகள்

கொட்டகை

‘‘20 அடி அகலம், 42 அடி நீளம் கொண்ட கொட்டகை அமைச்சிருக்கேன். மேற்கூரைக்கு ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட் போட்டிருக்கேன். தரைப்பகுதியில கருங்கல்லோ, சிமென்ட் தளமோ போட்டா சேறும் சகதியும் இருக்காது... சுத்தமா இருக்கும்னு எனப் பலரும் யோசனை சொன்னாங்க. ஆனா, நான் அதுமாதிரி செய்யலை. வெறும் மண்தரையாதான் விட்டு வச்சிருக்கேன்.

தரைப்பகுதி கருங்கல்லாகவோ, சிமென்ட் தளமாவோ இருந்தா, மாடு வழுக்கி கீழே விழுந்துடும். அதிக நேரம் படுத்திருக்கவும் சிரமப்படும். மண் தரையாவே இருந்தாலும் கூட, கொட்டகையை அடிக்கடி சுத்தம் பண்ணி பராமரிக்குறேன். சில சமயங்கள்ல சேறு, சகதி இருந்தாலுமேகூட எருமை மாடுகளுக்கு அது பெருசா பாதிப்பு ஏற்படுத்திறதில்லை. ஈ, கொசுக்கள் கடிக்காம பாதுகாக்குறதுக்காக, மாடுகளோட உடல் முழுக்க வேப்ப எண்ணெய் தடவி விடுவேன். கன்றுக்குட்டிகளுக்கு வயித்துல பூச்சி ஏற்படாம இருக்க 15 நாள்களுக்கு ஒரு முறை ஒரு கன்றுக்குட்டிக்கு 10 மி.லி வீதம் மருந்து ஊத்துவேன்.

சாணம்
சாணம்

சாணம் விற்பனை

மீன் குட்டைகள்ல போடுறதுக்காக நிறைய பேர், சாணம் வாங்கிக்கிட்டுப் போறாங்க. ஒரு லோடு 3,000 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு மாசத்துக்கு மூணு லோடு சாணம் விற்பனை செய்றேன்’’ என்கிறார் சுப்ரமணியன்.

தீவனமும் மேய்ச்சலும்

‘‘பெரிய மாடுகளுக்கு... தினமும் அரைக்கிலோ வீதம் கடலைப் புண்ணாக்கும், தவிடும் கலந்து தீவனம் கொடுப்பேன். கன்றுக்குட்டிகளுக்கு அதுல 50 சதவிகிதம் தீவனம் கொடுக்குறேன். கறவையில உள்ள மாட்டுக்குத் தினமும் கடலைப்புண்ணாக்கு, தவிடோடு சேர்த்து, ஒரு கிலோ வீதம் பருத்திக்கொட்டை புண்ணாக்கும் கொடுப் பேன். பெரிய மாடுகள், கன்றுக்குட்டிங்கள் எல்லாத்தையுமே, பசுந்தீவன தேவைக்காகத் தினமும் காலை பத்து மணியிலிருந்து சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் மேய்ச் சலுக்கு விடுவேன்’’ என்கிறார் சுப்ரமணியன்.

ஒரு வருஷம் கழிச்சிதான் சினை ஊசி

‘‘பொதுவா, ஒரு தாய் மாடு கன்று போட்டதுல இருந்து. அடுத்த மூணு மாசத்துலயே சினை ஊசி போட்டுடுவாங்க. ஆனா நான் அப்படிச் செய்றதில்லை. கன்று போட்டதுல இருந்து ஒரு வருஷம் கழிச்சிதான் சினை ஊசி போடுவேன். அந்தத் தாய் மாடு சினையாகி, அடுத்த 10 மாசத்துல கன்று போட்டுடும். இதைக் கடைப்பிடிக்குறதுனால என்னோட எருமை மாடுங்க நல்லா ஆரோக்கியமா இருக்கு. கன்று போட்ட மூணு மாசத்துலயே சினை புடிச்சி அடுத்த 10 மாசத்துல மறுபடியும் கன்று போட்டா, அதோட உடல் நலம் பாதிக்கப்படும். குடல் இறங்கி சீக்கிரமே வயதான நிலைக்கு ஆளாகிடும்.

தாய் மாடுகள் போடக்கூடிய கன்று கிடேரியாக இருந்தா, அதை நான் வச்சி வளர்ப்பேன். கிடா கன்றுக்குட்டியா இருந்தா, அதைப் பட்டுக்கோட்டை பக்கத்துல உள்ள பரக்கலக்கோட்டை ஆவுடையார் கோயிலுக்கு நேர்ந்து விட்டுடுவேன்’’ என்கிறார் சுப்ரமணியன்.

எருமைப்பால்
எருமைப்பால்

மூணு காம்பு பால்!

‘‘மாடுகளோட எல்லாக் காம்புலயும் பால் கறக்கமாட்டேன். மூணு காம்புகள்ல மட்டும்தான் பால் கறப்பேன். மீதி ஒரு காம்புல உள்ள பாலை கன்றுகுட்டிகளுக்கு விட்டுடுவேன். கன்றுகுட்டிகள் ஒரு வருஷம் வரைக்குமே தாய் பால் குடிச்சி வளர்றதுனால, நல்லா ஆரோக்கியமா, திடகாத்திரமா வளருதுங்க. மேய்ச்சல் மூலம் பசுந்தீவனம் கிடைச்சுது. போதுமான அளவுக்குப் பசுந்தீவனமும் கொடுக்குறேன். இதனால கன்றுக்குட்டிகள் நல்லா ஊட்டமா வளர்ந்து, அடுத்த ரெண்டு வருஷத்துல சரியான தருணத்துல பருவத்துக்கு வந்து சினைப்புடிச்சிடுது’’ என்கிறார் சுப்ரமணியன்.

கோமாரி நோய்

‘‘மழைக்காலங்கள்ல கோமாரி நோய் ஏற்பட்டு கால்நடைகள் பாதிக்கப்படாம தடுக்க அரசு சார்புல தடுப்பூசி போடு றாங்க. ஆனா, அது உரிய நேரத்துல போடப்படுறதில்லை. மழைக்காலம் தொடங்குறதுக்கு முன்னாடியே கோமாரி தடுப்பூசி போட்டாதான், அந்தப் பாதிப்பு ஏற்படாம கால்நடைகளைப் பாதுகாக்க முடியும். அரசாங்கம் இதுக்கு நடவடிக்கை எடுக்கணும்.

தென்னைக்கு எருமை எரு

எங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் வயலோட வரப்புல 20 தென்னை மரங்கள் இருக்கு. இது மூலமா வருஷத்துக்கு 3,000 காய்கள் கிடைக்குது. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை தென்னைக்கு எருமை மாட்டோட எரு வைக்குறேன். இதனால தான் தென்னை செழிப்பா இருக்கு’’ என்கிறார் சுப்ரமணியன்.

நிலம் வாங்கியிருக்கேன்... வீடு கட்டியிருக்கேன்...

‘‘எருமை மாடுகளால கிடைச்ச வருமானத்துலதான் என்னோட நாலு புள்ளைங்களோட கல்யாணமே நடந்துச்சு. அஞ்சு மகள்களைப் பெரிய அளவுல பட்டப் படிப்பும் படிக்க வச்சேன். ஊருக் குள்ள 30 சென்ட் இடமும், ஒன்றரை ஏக்கர் நிலமும் சொந்தமாக வாங்கியிருக்கேன். பன்னிரண்டு சதுரத்துல கான்கிரீட் வீடு கட்டியிருக்கேன். எருமை மாடுங்க வளர்க்குறதைக் கேவலமா பேசினா, அது என்னைப் பொறுத்தவரைக்கும் முட்டாள்தனம்னுதான் சொல்வேன்’’ என்கிறார் சுப்ரமணியன்.