Published:Updated:

`அவர்கள் கவலைப்படுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்!’ - டீக்கடை உரிமையாளரின் அசத்தல் முயற்சி

sapling
sapling

புதுக்கோட்டையில் கஜா புயலால் இழந்த மரங்களையும், பசுமை நிறைந்த சூழலையும் மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்குச் செம்மரம், சந்தன மரக்கன்றுகளை வழங்கி அசத்தி வருகிறார்.

புதுக்கோட்டை வாசிகளுக்கு வம்பன் 4 ரோட்டில் உள்ள பகவான் டீக்கடையை கட்டாயம் தெரிந்திருக்கும். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலில் பொதுமக்கள் வீடுகள், மரங்கள், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர். அப்போது, வம்பன் பகவான் டீக்கடையின் உரிமையாளர் சிவக்குமார், தனது டீக்கடையில், வாடிக்கையாளர்கள் வைத்திருந்த அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து அசத்தினார்.

tea shop with customers
tea shop with customers

அரசே புயல் நிவாரணம் முழுமையாகக் கொடுக்க முன்வராத நிலையில், இவரின் செயலை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இது ஒரு சிறிய முயற்சிதான் என்றாலும், சிவக்குமாரின் சேவை மனப்பான்மையைப் பல்வேறு சமூக அமைப்புகளைக் கவர்ந்தது.

அதன் பலனாக சிவக்குமாருக்கு பல்வேறு அமைப்புகள் விருதுகள், சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டின. இந்த நிலையில்தான், டீக்கடன் தள்ளுபடியின் தொடர்ச்சியாக, தற்போது, பகவான் டீக்கடை உரியாளர், தனது வாடிக்கையாளர்களுக்கு (21-ம் தேதி) முழுவதும் இலவசமாக சந்தன மரம், செம்மரக்கன்றுகளைக் கொடுத்து அசத்தி வருகிறார்.

sapling
sapling

இதுபற்றி சிவக்குமாரிடம் பேசினோம், "என்னுடைய கடைக்கு வர்றவங்க பெரும்பாலும் விவசாயிகள்தாம். கஜா புயலுக்குப் பிறகு எல்லாருக்குமே பாதிப்புதான். ஒருவருக்கொருவர் டீக்கடையில் உட்கார்ந்துதான் தங்களுடைய வீடு, மரம் போனதைப் பற்றி எல்லாம் சொல்லி ரொம்பவே கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாங்க. அவற்றையெல்லாம், பார்த்துக்கிட்டு, கேட்டுக்கிட்டு இருக்கவே கஷ்டமா இருக்கும். நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்குச் செய்யணும்" என்று அப்ப மனசில் எண்ணம் உருவானுச்சு. உடனே, எதைப் பத்தியும் யோசிக்காமல், வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீக்கடன்களை தள்ளுபடி செய்தேன்.

அது, அந்த நேரத்தில வாடிக்கையாளர் பலருக்கும் ஆறுதலாக இருந்துச்சு. அவர்களே எனக்கிட்ட சொல்லி சந்தோஷப்படுவாங்க. இதே மாதிரிதான், 3 மாசத்துக்கு முன்னால வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு வந்தார். தான் ஆசையாக வளர்த்த மரங்கள் எல்லாத்தையும், கஜா புயல் வேரோடு சாய்த்துப் போட்டுருச்சு. இப்போது, மரக்கன்றுகள் வாங்கி நடுவதற்குக்கூட தன்னிடம் பணம் இல்லை என்று புலம்பினார்.

sivakumar
sivakumar

அப்பவே, மரக்கன்றுகளைப் பொதுமக்களுக்கு கொடுக்க முடிவு பண்ணிட்டோம். ஆனாலும், அப்போதைக்கு மழையே சுத்தமாக பெய்யலை. அப்போது கொடுத்திருந்தா, இந்த நேரம் மரக்கன்றுகள் எல்லாம் காய்ஞ்சு கருகிப்போகிருக்கும். இப்போது மழை சீஸன் ஆரம்பிச்சிருக்கதால, மரக்கன்றுகளைக் கொடுத்திடலாம்னு முடிவு செஞ்சேன்.

அரிமளம் பக்கத்துல கள்ளுக்குடியிருப்புக்கு நேரடியாகப் போய் செம்மரம், சந்தன மரம், கேரளா முல்லை உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மரக்கன்றுகளை வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். சந்தன மரக்கன்று குறைந்த அளவுதான் கிடைச்சிச்சு. கஜா புயலால், இழந்த பசுமையை மீட்டெடுக்கணும் அது இப்போதைக்கு என்னோட நோக்கம். தொடர்ந்து, லட்சக்கணக்கான மரங்களை பொதுமக்களுக்குக் கொடுக்கணும்.

tea shop
tea shop

என்னைப்போல ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு மரக்கன்றுகளைக் கொடுத்து, இன்னும் கொஞ்ச வருஷத்துல, கஜா புயலுக்கு முன்னாடி இருந்த பசுமை நிறைந்த புதுக்கோட்டையை உருவாக்கணும். தொடர்ந்து வருடம் முழுவதும் பச்சிளங்குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கைவசம் இருக்கு. வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால், அதுவும் சாத்தியம்தான்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு