Published:Updated:

கீழே விழும் நெற்று வேண்டாம்... தரமான தென்னை நாற்றுக்கான தொழில்நுட்பம்!

கூட்டம்

பிரீமியம் ஸ்டோரி
‘ஊரடங்கு காலத்தை வீணாகக் கழிக்கக் கூடாது’ என்று நினைத்த பலரும், காணொலி கலந்துரையாடல் மூலமாக உரையாடல் நடத்தி வருகிறார்கள்.

தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகள் வரை காணொலி கலந்துரையாடலில் கலக்கி வருகிறார்கள். இந்த நிலையில், பசுமை விகடனும் வாசகர்களுக்காகக் காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. வாசகர்கள் இல்லத்திலிருந்தபடியே இயற்கை விவசாய உத்திகளைக் கற்றுக்கொண்டார்கள்.

“ஊரடங்கு நேரத்தில் இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு தொடர்பான பல்வேறு நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். பசுமை விகடன் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என நம்மிடம் கேட்டார், திருப்பூர் அறப்பொருள் வேளாணகத்தின் நிறுவனரும், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சிவராமன். பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து கடந்த ஜனவரி மாதம் ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சி வகுப்பை நடத்தின.

தென்னை நாற்று
தென்னை நாற்று

அறப்பொருள் வேளாணகம் பண்ணையில் நடந்த அந்தப் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் காணொலி (வீடியோ) மூலமாகக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம். ஏப்ரல் 26, ஏப்ரல் 30 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

‘ஊரடங்கு காலத்தில் தோட்டக்கலைப் பயிர்கள்... பிரச்னைகளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் முதல் கலந்துரையாடல் ஏப்ரல் 26-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கியது. வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். அப்போது பேசியவர், “ `இயற்கைக்கு மீறிய சக்தி எதுவும் இல்லை’ என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்சார்பு வாழ்க்கையின் மீது உலகின் கவனம் திரும்பியிருக்கிறது. எங்கள் அமைப்பின் மூலம் திருப்பூரில், விவசாய நிலங்களில் இதுவரை எட்டு லட்சம் மரங்களை நடவுசெய்திருக்கிறோம். நடவு செய்வதோடு விட்டுவிடுவதில்லை. தொடர்ந்து தண்ணீர் ஊற்றி மரங்களை வளர்த்துவருகிறோம். நாங்கள் நடவு செய்த அத்தனை மரங்களும் பசுமையாக இருக்கின்றன. இந்த முயற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். `ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம் தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்’ என முடிவு செய்தோம். இந்த இக்கட்டான காலகட்டத்திலும் பசுமை விகடன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. பசுமை விகடனுக்கு நன்றி’’ என்றார்.

கீழே விழும் நெற்று வேண்டாம்... தரமான தென்னை நாற்றுக்கான தொழில்நுட்பம்!

தாய்மரம் தரமானதாக இருக்க வேண்டும்!

இயற்கை விவசாயத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் முறைகள் குறித்துப் பேசத் தொடங்கினார் சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும், பேராசிரியருமான முனைவர் செந்தூர்குமரன். தோட்டக்கலைப் பயிர்கள் பராமரிப்பு பற்றி ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டார். `தரமான தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்வது எப்படி?’ என்ற கேள்வியை விவேகானந்தன் என்பவர் முன்வைத்தார். அதற்கு பதிலளித்த செந்தூர்குமரன், “தரமான நாற்று உற்பத்தி செய்ய, தரமான தாய் மரத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

25 முதல் 40 வயது மரமாக இருக்க வேண்டும். வளைவு, நெளிவு இல்லாத நேராகச் செல்லும் மரமாக இருக்க வேண்டும். அடி பெருத்து இருக்க வேண்டும். மரத்தில் 33 மட்டைகள் இருக்க வேண்டும். ஏழு பாளைகள் இருக்க வேண்டும். ஐந்து பாளைகளில் பிஞ்சு, இளநீர், தேங்காய் எனப் பல்வேறு நிலைகளில் காய்கள் இருக்க வேண்டும். அது போன்ற மரங்களிலிருந்து நெற்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

சிவராமன்,  செந்தூர்குமரன்
சிவராமன், செந்தூர்குமரன்

கீழே விழும் நெற்றுகளைப் பயன்படுத்தக் கூடாது. நெற்றுக்கான காய்களை வழக்கம்போல் 40 நாள்களில் வெட்டாமல், கூடுதலாக 20 நாள்கள் மரத்திலேயே விட வேண்டும். அதன் பிறகு அந்தக் காயை எடுத்து நிழலில் 20 நாள்கள் காயவைக்க வேண்டும். காய் சுருங்காமல், நிறம் மட்டும் மாற வேண்டும். அதன் பிறகு அரையடி மணலைப் பரப்பி, அதில் காய்களை மூக்குப் பகுதி மேலே இருப்பதுபோல் அடுக்கிவைக்க வேண்டும். அதில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு காய்க்கும் ஐந்து முதல் 10 செ.மீ இடைவெளி இருப்பதுபோல் அடுக்கி, மணலால் மூடிவைக்க வேண்டும். அப்போது இரண்டு காய்களுக்கும் இடையிலுள்ள மணல், காயிலுள்ள ஈரத்தை உறிஞ்சும். அதில் ஒரு மாதம் வைத்திருக்க வேண்டும். பிறகு, அதை எடுத்து நாற்றங்காலில் மணலில் நெருக்கமாக அடுக்கிவைத்து தண்ணீர் தெளித்துவந்தால் 80 முதல் 90 நாள்களில் முளைவிடும். அதன் பிறகு ஆறு மாதங்கள் வைத்திருந்து நடவு செய்யலாம்’’ என்றார்.

மேல்மண்ணை நகரவிடக் கூடாது!

நீர் மேலாண்மை தொடர்பாகப் பேசிய நீரியல் வல்லுநர் பிரிட்டோராஜ், “கடந்த 50 வருட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் கோடை மழை ஆறேழு முறை பெய்திருக்கும். ஆனால், சமீபகாலமாக இரண்டு மழை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் பெய்வதுதான் கோடைமழை. சில மாவட்டங்களில் மட்டும் பெய்தால் அது வெப்பச் சலன மழை. எனவே, தற்போது அரிதாகக் கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும். நிலத்தின் மேல்மண் நகராமல் பாதுகாக்க வேண்டும்.

 பிரிட்டோ ராஜ், கார்த்திகேய சேனாபதி
பிரிட்டோ ராஜ், கார்த்திகேய சேனாபதி

ஒரு நிலத்தின் மண் மழைநீரில் கரைந்து அடுத்த நிலத்துக்குப் போகக் கூடாது. அதற்கு ஒவ்வொரு நிலத்திலும் வரப்பு அருகே கரை அமைக்க வேண்டும். குழியெடுக்கும் மண்ணை மேல்பக்கம் கரையாக அமைக்க வேண்டும். இப்படிச் செய்தால், மழைநீரில் உருண்டு வரும் மேல்மண், குழிக்குள் சேகரமாகும். தண்ணீரும் நிலத்துக்குள் இறங்கும்.பண்ணைக்குட்டை ஒவ்வொரு நிலத்திலும் கட்டாயம் இருக்க வேண்டும். இது வேளாண் பொறியியல்துறை மூலமாக இலவசமாக அமைத்துத் தரப்படுகிறது. இதை அமைக்கலாம். பண்ணைக்குட்டை அமைக்க முடியாத விவசாயிகள் குறைந்தபட்சம் 10 மணி நேரம் ஜே.சி.பியை இயக்கி, குழியெடுக்கலாம். 10 மணி நேரத்தில் எவ்வளவு பெரிய குட்டை எடுக்க முடியுமோ அதை எடுத்தால்கூடப் போதும். அதற்கு அதிகபட்சம் 8,000 ரூபாய்தான் செலவாகும். அந்தக் குட்டையில் மழைநீரைச் சேமிக்க வேண்டும். பொதுவாக, பண்ணைக்குட்டைகள் நமது போர்வெல், கிணறுகளின் மேல் பகுதியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றவர், “ஒவ்வொரு பயிர் செய்யும்போதும், பயிருக்கான ‘செயல்பாட்டுப் பட்டியல்’ இருக்க வேண்டும். 140 நாள் பயிராக இருந்தால், முதல் நாள் முதல் 140 நாள்களும் செய்ய வேண்டிய பணிகளைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, `20-ம் நாள் களையெடுக்க வேண்டும்’, `30-ம் நாள் வளர்ச்சி ஊக்கி தெளிக்க வேண்டும்’ போன்ற விவரங்களைக் கையில் வைத்துக்கொண்டு பயிர் செய்யத் தொடங்க வேண்டும். அந்தந்த நாள் செயல்பாட்டைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதைச் செய்தாலே பரிந்துரைக்கப்படும் மகசூலை எடுக்க முடியும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சேனாபதி, தனது சவுக்குச் சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “2008-ம் ஆண்டு பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையைப் படித்த பிறகுதான் சவுக்குச் சாகுபடியைத் தொடங்கினேன். ஜிங்குலியானா ரகச் சவுக்கை ஐந்து ஏக்கரில் சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு 50 டன் மகசூல் கிடைத்தது. மறுதாம்பிலும் நல்ல மகசூல் கிடைத்தது. 32 மாதத்தில் இந்த மகசூல் கிடைத்தது. அப்போது டன் 6,000 ரூபாய் போனது. ஆனால், தற்போது விலை குறைந்திருக்கிறது. தற்போது டன் 3,500 ரூபாய்தான் விலை போகிறது’’ என்றார்.

காணொலி கலந்துரையாடல் மூலம் அரசுத் திட்டங்கள், மானியங்கள், பாசனத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டன. பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு