Published:Updated:

`எங்க வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நானே விளைவிக்கிறேன்!' - சீர்காழி மாணவியின் மாடித்தோட்டம்

``மரம், செடி, கொடி வளர்த்தால் மழை பெறலாம். இங்கு இயற்கை முறையில் காய்கறிகள் பயிர் செய்வதில் நேரிடையாகப் பங்கு பெறுவதால், அந்த அனுபவத்தைக்கொண்டு எங்க வீட்டு மாடியிலும் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறோம்.''

மாணவி கமலி
மாணவி கமலி

ஒவ்வொருவர் வீட்டின் மாடியிலும் இயற்கை முறையிலான காய்கறிகள் விளைவிக்கப்பட வேண்டும்' என்ற அவசியத்தை பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் செயல் முறையோடு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பள்ளி ஒன்றின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்து வழிகாட்டுவது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்

நாகை மாவட்டம், சீர்காழியில் சபாநாயக முதலியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மாடியில் சுமார் 1,300 சதுரடி பரப்பளவில் இயற்கை முறையிலான காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர். வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, புதினா, மஞ்சள், கத்திரி, அவரை, கரணை எனப் பல்வேறு வகையான காய்கறிகளோடு, ரோஜா, மல்லி, சாமந்தி எனப் பலவிதமான பூச்செடிகளையும் பயிரிட்டுள்ளனர். தேங்காய் நார், செம்மண் கலந்து நூற்றுக்கணக்கான சாக்குப் பைகளில் நிரப்பி அதில் பயிர் நடவு செய்கிறார்கள்.

செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை. ஆடு, மாடுகளின் சாணம், வேப்பம்புண்ணாக்கு, மக்கிய இலை தழைகள், காய்கறிக் கழிவுகள் மற்றும் பஞ்சகவ்யம் இவற்றையே உரமாகப் பயன்படுத்துகிறார்கள். காலை, மாலை மற்றும் பள்ளி இடைவேளை நேரங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் பயிர்களுக்கு களையெடுத்து, நீர்ப்பாய்ச்சி பராமரித்துக் கொள்கிறார்கள்.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்

அப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கமலியிடம் பேசியபோது, "எங்க பள்ளி மாடித்தோட்டம் எங்க எல்லாருக்குமே நல்ல அவர்னஸை கிரியேட் பண்ணியிருக்கு. ரசாயன உரத்திலும் உயிர்க்கொல்லி மருந்திலும் விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்டு, உடலுக்கு நமக்கு நாமே கேடு உருவாக்குகிறோம். மரம், செடி, கொடி வளர்த்தால் மழை பெறலாம். இங்கு இயற்கை முறையில் காய்கறிகள் பயிர் செய்வதில் நேரிடையாகப் பங்கு பெறுவதால், அந்த அனுபவத்தைக் கொண்டு எங்க வீட்டு மாடியிலும் காய்கறித்தோட்டம் அமைத்திருக்கிறோம். வீட்டுக்குத் தேவையான தரமான காய்கறிகளை நாமே உற்பத்திச் செய்து, நமக்கு மட்டுமல்லாமல் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தருவதில் பெரிய சந்தோஷம்" என்றார்.

பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலுவிடம் பேசினோம். "123 ஆண்டுகளுக்கு முன் சபாநாயக முதலியாரால் தொடங்கப்பட்ட பள்ளியின் ஓர் அங்கம்தான் இந்த மெட்ரிக் பள்ளி. செயலர் ராமகிருஷ்ணன் ஆலோசனைபடி கடந்த 8 ஆண்டுகளாக மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறோம். விளைநிலங்கள் பலவும் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகிறது. வீட்டின் பின்புறம் இடமிருந்தாலும் அதில் வேலி அமைத்து பராமரிக்க அதிக செலவாகிறது. எனவேதான் செலவில்லாமல் ஜீரோ பட்ஜெட்டில் மாடித்தோட்டம் அமைக்க கற்றுத் தருகிறோம்.

தங்கவேலு
தங்கவேலு

சுமார் 250 சாக்குப் பைகள் பயன்படுத்துகிறோம். 20 விதமான காய்கறிகளை சீஸனுக்குத் தகுந்தாற்போல் மாற்றி மாற்றி பயிர்ச் செய்கிறோம். தண்ணீர் தேவைக்கு மாடியிலேயே வசதி செய்துள்ளோம். முற்றிலும் இயற்கை சாகுபடியில் விளையும் காய்கறிகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் குறைந்த விலையில் சுழற்சி முறையில் தருகிறோம். இந்த வகையில் ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைக்கிறது. இதைக் கண்டு பல மாணவர்களும் அவர்கள் வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். எங்கள் நோக்கத்தின் வெற்றி அதுதான். இத்தகைய திட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும்" என்றார்.