Published:Updated:

நல்வாழ்வு கொடுக்கும் மாடித்தோட்டம்!

மாடித்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடித்தோட்டம்

மகசூல்

மாடித்தோட்டத்தின் மீதான ஈர்ப்பும் விழிப்புணர்வும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தற்சார்போடு வாழவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் மாடித்தோட்டம் மகத்தான சேவை ஆற்றுகிறது.

கால்நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில், வீட்டுத்தோட்டம் இருந்தது. கிராமங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் கூட, வீட்டின் கொல்லைப்புறத்தில் சிறுதோட்டம் அமைத்து, தங்களது குடும்பத்துக்குத் தேவையான சில காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொண்டார்கள். ஏதாவது ஒருசில காய்கறிகள் வீட்டுத்தோட்டத்தில் இருந்துகொண்டே இருக்கும். ‘சமைப்பதற்குக் காய்கறி இல்லை’ என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால், காலப்போக்கில் வீட்டுத்தோட்டம் கைவிடப்பட்டது. காய்கறிகளுக்கு எப்போதும் கடைகளை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய நிலைக்கு மக்கள் மாறிவிட்டார்கள். இதனால் புயல், மழை மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற நெருக்கடியான காலங்களில், காய்கறிகள் கிடைப்பது சவாலாக மாறி வருகிறது.

மண் தொட்டிகள்
மண் தொட்டிகள்

தற்போது கொரோனா அச்சம் நிலவும் சமயத்தில், பதற்றத்தோடும் பதைபதைப்போடும், கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு சந்தைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாததால், உள்ளுணர்வில் கொரோனா பயம் தொற்றிக்கொள்கிறது.

கம்பி வளைக்குள் வளரும் செடிகள்
கம்பி வளைக்குள் வளரும் செடிகள்

இந்நிலையில், வீட்டுத்தோட்டம் அமைத்தவர்கள் பதற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற வணிக நகரங்களில்தான் மாடித்தோட்டம் கணிசமான எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் போன்ற நகரங்களில் மாடித்தோட்டத்தைக் காண்பது மிகவும் அரிது. இச்சூழலில்தான் தஞ்சாவூர் மேலவீதியில் வசிக்கும் வரி ஆலோசகர் சந்திரசேகரன் தனது வீட்டில் அமைத்துள்ள மாடித்தோட்டமானது, இப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு பகல் பொழுதில் நாம் அங்கு சென்றோம்.

மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற சந்திரசேகரன், “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சர்க்கரை வியாதி அதிகமாகி, படுத்த படுக்கையாக இருந்தேன். ஆனால், நான் இன்னிக்கு இந்தளவுக்கு ஆரோக்கியமா நடமாடிக்கிட்டு இருக்கேன்னா, அதுக்கு இந்த மாடித்தோட்டம்தான் காரணம். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரே மனதார இதைப் பாராட்டினார். இதுக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தினமும் காலையில ஒரு மணிநேரம், சாயந்தரம் ஒரு மணிநேரம் இங்கே உழைக்கிறேன்.

மொத்தம் 60 தொட்டிகள் வெச்சிருக்கேன். எங்க குடும்பத்துல மொத்தம் மூணு பேரு. கீரை, வெண்டி (வெண்டைக்காய்), பாகல்தான் அதிகம் சாப்பிடுவோம். அதனால 14 தொட்டிகள்ல கீரை, 12 தொட்டிகள்ல வெண்டி, 3 தொட்டிகள்ல மிதி பாகல், 2 தொட்டிகள்ல பெரிய பாகல்னு வெச்சிருக்கோம். மீதி தொட்டியில் தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை, பிரண்டை, கல்லுருக்கி, சோற்றுக்கற்றாழை, அறுகம்புல், துளசி, சந்தனமுல்லை, சங்குப் பூ வெச்சிருக்கோம். மூலிகைச் செடிகளை மருந்தாகப் பயன் படுத்திக்குறோம். சந்தன முல்லை, சங்குப் பூ, அறுகம்புல், துளசியைத் தினந்தோறும் பூஜைக்குப் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். ஜூன் மாதம் மஞ்சள், இஞ்சி நடவு செஞ்சி, அதைப் பொங்கல் சமயத்துல பயன்படுத்திக்குவோம். இதுதவிர தேவைக்கு ஏற்ப புடல், அவரை உள்ளிட்ட மற்ற காய்கறிகளும் உற்பத்தி செஞ்சுக்குவோம்.

கம்பி வளைக்குள் வளரும் செடிகள்
கம்பி வளைக்குள் வளரும் செடிகள்

இங்கவுள்ள செடிகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவது, காய்கள், பூக்கள் பறிக்குறது, தரையைக் கூட்டி சுத்தப்படுறதுனு கடுமையா உழைப்பு செலுத்துறதுனாலயும், ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக் கிறதுனாலயும், ரசாயனம் இல்லாத காய்கறிகளைச் சாப்பிடுறதுனாலயும்தான் என்னோட உடல்ல சர்க்கரை அளவு குறைஞ்சு, நீரிழிவு நோய், கட்டுப்படுத்தப்பட்டிருக்கு. காலையிலயும் சாயந்தரமும் இங்க ஈரக்காற்று வீசும். வெளியில இருந்து நிறைய புறாக்கள் இங்க வருது. அதோட சப்தமும் சேர்ந்து, ரம்மியமான சூழல் உருவாகுறதுனால, என்னோட மனசு உற்சாகமாயிடுது” என நெகிழ்ந்துபோன சந்திரசேகரன், மற்ற தகவல்கள் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

“எனக்கும் விவசாயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்க அப்பா, பள்ளிக்கூட ஆசிரியர். அவருக்குச் செடி, கொடிகள் மேல நேசிப்பு அதிகம். அப்ப இது ஓட்டு வீடு. வீட்டுக்கு நடுவுல இருந்த முற்றத்துல, தொட்டிகள் அமைச்சி, புடலை, பாகல், பூசணி, பரங்கி கொடிகள் உருவாக்கி, ஓட்டு மேல ஏத்திவிடுவார். வீட்டு சமையலுக்கு அந்தக் காய்கறிகளைப் பயன்படுத்துவாங்க. இது மாடி வீடாக மாறின பிறகு, அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல போயிடுச்சி. ஆனால், எனக்குள்ள அந்த ஏக்கம் இருந்துக்கிட்டேதான் இருந்துச்சு. இதுக்கிடையிலதான், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நீரிழிவு நோய் தீவிரமானபோது, என்னோட நண்பர்களின் ஆலோசனைப்படி மாடித்தோட்டம் அமைக்கத் தீர்மானிச்சேன்.

மாடித்தோட்டத்துக்குப் பெரும்பாலும் பாலித்தின் பைகள்தான் பயன்படுத்துவாங்க. ஆனால், நான் சிமென்ட் தொட்டிகள் மட்டும்தான் பயன்படுத்துறேன். இதுக்கு ஆரம்பத்துல செலவு அதிகம்னாலும்கூட, நீண்ட காலத்துக்கு நீடிச்சி உழைக்கும். இதைவிட இன்னும் மிக முக்கியமான பயன்கள் என்னென்னா, இது சிமென்ட் தொட்டியாக இருக்குறதுனால, ஈரப்பதம் தக்க வைக்கப்படும். பாலித்தின் பைகளாக இருந்தால் சீக்கிரத்துல சூடேறும். அதுல மண்ணும் அதிகமாகப் போட முடியாது. மழைக்காலத்துல அதுல தண்ணீர் வடியுறதுக்கான வாய்ப்பும் குறைவு. ஆனால், சிமென்ட் தொட்டிகள்ல சற்றுக் கூடுதலாக மண்ணு போட முடியும். இதனால் வேர்கள் நல்லா ஊடுருவி, செடிகளோட வளர்ச்சி வேகமாக இருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால், துளைகள் வழியாக வெளியேறி விடும்.

கட்டுமானத்தைப் பாதுகாக்கும் பிளாஸ்டிக் டிரேக்கள் தொட்டிகள்ல ரொம்பக் கவனமாக, தேவையான அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊத்துறதுனால, பெரும்பாலும் தண்ணீர் அதிகம் கசியாது. ஆனால், மழைக்காலங்கள்ல இதுக்கு வாய்ப்புகள் அதிகம். கட்டுமானம் பாதிக்காமல் இருக்க, தொட்டிக்குக் கீழே, வட்ட வடிவ பிளாஸ்டிக் டிரே வெச்சிருக்கேன். தொட்டியில இருந்து வடியக்கூடிய சேறு, இதுல சேகரமாயிடும். தொட்டியை நகர்த்தி வெச்சிட்டு, டிரேயில் இருக்கச் சேற்றை வெளியேத்திடுவேன். இதையும் மீறி, தரையில தண்ணீர் இருந்தால், அடிக்கடி கூட்டி காய வெச்சிடுவேன். இதனால கட்டுமானத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த பிளாஸ்டிக் டிரேவோட விலை 30 ரூபாய்தான்.

மாடித்தோட்டத்தில் சந்திரசேகரன்
மாடித்தோட்டத்தில் சந்திரசேகரன்

பராமரிப்பு முறை

செம்மண்ணோட 20 சதவிகிதம் மண்புழு உரம் கலந்து, தொட்டிகள்ல நிரப்பி, ஒரு தொட்டிக்கு 10 முதல் 20 கிராம் விதைகள போடுவேன். பில்டர் காபித்தூள் கசடுகள், டீத்தூள் கசடுகள், காய்கறிக் கழிவுகள் இதை யெல்லாம் நல்லா வெயில்ல காய வெச்சி, அப்பப்ப தொட்டியில் போட்டுக்கிட்டே இருப்பேன். இது சத்தான உரமாகிடுது. 15 நாளுக்கு ஒரு முறை வேப்பம்பிண்ணாக்கு, ஆட்டு எரு, பஞ்சகவ்யா, இ.எம் கரைசல்னு மாத்தி மாத்திச் சுழற்சி முறையில கொடுப்பேன். ஒரு தொட்டிக்கு ஒரு முறைக்கு 25 கிராம் வேப்பம்பிண்ணாக்கு போடுவோம். ஆட்டு எருவும் இதே அளவுதான் பயன்படுத்துவோம்.

மாவுப்பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால், 26 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்க் கரைசல் கலந்து எல்லாச் செடிகளுக்கும் தெளிப்போம். இங்க இருக்கச் செடிகள்ல எல்லா நாளும் காய்கறி, கீரைகள் சுழற்சி முறையில் கிடைக்கிற மாதிரிதான் நடவு செஞ்சிருக்கோம். ஒவ்வொரு தொட்டியையும் ஆறு மாசத்துக்கு ஒரு முறை மண்ணை வெளியேற்றி, நல்லா வெயில்ல காய வெப்போம். திரும்பவும் தொட்டியில விதைப்போடுவோம். கஜா புயல்ல சமயத்துல அபரிமிதமாகக் காய்ச்சது. உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்தோம். நான் ஆரோக்கியத்துக்காக போட்டிருக்கும் முதலீடு, இதுல வரவு செலவு கணக்கைப் பார்ப்பதில்லை. ஆரோக்கியனமான காய்கறிகள் கிடைக்குது. அதுவே போதும்’’ என நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.

தொடர்புக்கு, சந்திரசேகரன்,செல்போன்: 94442 31510.

சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழைக் குளியல்!

‘‘உடல்ல உள்ள பித்தம் நீக்க, சோற்றுக்கற்றாழை மிகச் சிறந்த மருந்து. தலையில் முதல்ல தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு 10 நிமிடங்கள் கழிச்சி, சோற்றுக்கற்றாழையின் பிசினைத் தடவணும். அடுத்த 15 நிமிடங்கள் கழிச்சி, சீயக்காய் தேச்சி குளிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது. நாங்க வாரம் ஒரு முறை இதைக் கடைப்பிடிக்கிறோம். பித்தம் நீங்குறதோடு, உடம்பு குளிர்ச்சி அடையும்’’ என்கிறார் சந்திரசேகரன்.

பிரண்டை
பிரண்டை

மூட்டுவலிப் போக்கும் பிரண்டை!

“10 நாளைக்கு ஒரு தடவை சமையல்ல பிரண்டை சேர்த்துக்குறோம். பிரண்டையைத் துவையல் செஞ்சி சாப்பிடுவோம். தோல் நீக்கி, உள்ளார உள்ள சதையை மட்டும், சட்டியில் போட்டு நல்லா வதக்கி, வத்தக்குழம்புல போட்டுச் சாப்பிடுவோம். இப்ப எங்களுக்கு மூட்டு வலியே வர்றது இல்லை.

குரங்குகள் தொல்லை!

இந்தப் பகுதியில குரங்குகள் தொல்லை அதிகம். கூட்டமாக வந்து செடிகளை நாசப்படுத்திடும். அதனால இந்தத் தோட்டம் இருக்க 250 சதுர அடியில் மட்டும் மேற்புறம் மற்றும் சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் தடுப்பு அமைச்சிருக்கோம். வெயிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, தேவைக்கேற்ப, நிழல் வலையை அமைச்சிக்குவோம்’’

’’சிறுநீரகக் கல்லை நீக்கும் கல்லுருக்கி!

“இங்க நாங்க கல்லுருக்கி மூலிகைச் செடி வெச்சிருக்கோம். இது சிறுநீரகக் கல்லை நீக்கக்கூடியது. எனக்கு இந்தப் பிரச்னை வந்தபோது, தினமும் இதுல இருந்து ஒரு இலை பறிச்சி, 7 நாள்கள் சாப்பிட்டேன். அந்தப் பிரச்னை குணமாயிடுச்சி. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில்தான் இந்த மூலிகைச் செடிகள் நிறைய இருக்கு. அங்கவுள்ள செடிகள்ல இருந்து, நன்கு முற்றிய கிளையை ஒடிச்சி கொண்டு வந்துதான் என்னோட தோட்டத்துல நட்டு வச்சேன். செழிப்பாக வளர்ந்துக்கிட்டு இருக்கு’’ என்கிறார் சந்திரசேகரன்..