Published:Updated:

`ராமநாதபுரம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டியவர்!' - தஞ்சையிலும் சாதிப்பாரா புதிய ஆட்சியர்?

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ( ம.அரவிந்த் )

உளுந்து, எள், கடலை போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி குறைந்து வருவதை அதிகப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மானாவாரி பயிர்கள் சாகுபடியால் மண்வளம் பெருகும் என கலெக்டர் தெரிவித்தார்.

வறட்சி மிகுந்த மாவட்டமாக அறியப்பட்ட ராமநாதபுரத்தில் விவசாயிகளிடம் இரண்டாம் போக சாகுபடி குறித்து ஊக்கப்படுத்தி விளைச்சல் அதிகரிக்க வித்திட்டு வழிகாட்டிய கையோடு, தற்போது தஞ்சாவூர் கலெக்டராகப் பொறுப்பேற்றதுமே விவசாயிகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது செயலைத் தொடங்கியிருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலெக்டர்
செய்தியாளர்கள் சந்திப்பில் கலெக்டர்
தஞ்சாவூர் : மாற்றப்பட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் - பிரிவைத் தாங்க முடியாத மக்கள் உருக்கம்!

ராமநாதபுரம் கலெக்டராக இருந்த இவர், தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராகக் கடந்த 16-ம் தேதி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பதவியேற்றுக் கொண்டார். அன்றைய தினமே தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணை திறக்கப்பட்டது, அதை முன்னின்று நடத்தினார். கொரோனா குறையாத மாவட்டங்களுள் தஞ்சாவூரும் ஒன்று. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சவால்களும் அவர் முன் வைக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர்களை ஆட்சியர் சந்தித்தபோது, ``தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் பிரச்னை சந்திப்பதாகப் பல தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். விவசாயிகள் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்த பிறகு, காத்திருக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பருவத்தில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவில் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் முப்போகமும், ஒரு சில இடங்களில் இரண்டு போகமும் நெல் விளைச்சல் உள்ளது. இருப்பினும் உளுந்து, எள், கடலை போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி குறைந்து வருவதை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானாவாரி பயிர்கள் சாகுபடியால் மண்வளம் பெருகும். விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் வகையில் வேளாண்துறை மேம்படுத்தப்படும். உரம் போன்ற இடுப்பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைமடை வரை தட்டுப்பாடின்றி தண்ணீர் செல்வது குறித்து ஆய்வு செய்யப்படும். கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். ஏரி, குளங்களில் மண் அள்ளிய பிறகு, உயிர்பலி ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பள்ளமாக இல்லாமல் சமச்சீராக மண் எடுக்க அறிவுறுத்தப்படும்" என்றார்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கல்லணை: `வெறும் 500 கன அடி திறந்தா இங்க எப்படி தண்ணீர் வரும்?' - கடைமடை விவசாயிகள் கவலை

மேலும் கொரோனா பரவல் குறித்து பேசிய அவர், ``கொரோனா தொற்றுக் குறைய மக்களிடம் சுயகட்டுபாடு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது 3,943 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 நாள்களில் நோய் தொற்றில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாறு சதவிகிதம் மாணவர் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுகாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாய பூமியான தஞ்சாவூரில் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு