`2 மணி நேரத்தில் நெல் ஈரப்பதம் குறையும்!' - நவீன இயந்திரம் மூலம் தீர்வு சொல்லும் தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், நெல் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தி முடித்துள்ளார். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ், நெல் ஈரப்பதம் அடைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கக்கூடிய வகையில், நெல் ஈரப்பதம் உலர்த்தும் நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்தி அதன் செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தியிருக்கிறார். அத்துடன் இரண்டு புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். கலெக்டரின் இந்த செயல் விவசாயிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளதுடன் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னர் 10 தினங்களுக்கு மேல் பெய்த தொடர் மழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெல் பயிர்கள் வயலிலேயே சாய்ந்து நீரில் மூழ்கி அழுகின. மேலும், நீரிலேயே கிடந்ததால் நெற்பயிர்கள் முளைத்துவிட்டன. பாடுபட்ட விளைவித்த பயிர் கண்ணுக்கு முன்னரே வீணானதைக் கண்ட விவசாயிகள் மனம் விம்மினர்.
``40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டிய கனமழை பயிர்களை மட்டும் சாய்த்து செல்லவில்லை; எங்கள் உழைப்பையும் சேர்த்து சாய்த்துவிட்டது. ஒவ்வொரு விவசாயியும் வெள்ளாமை செய்த பயிரை அறுவடை செய்து வீடு கொண்டு போய் சேர்ப்பதற்குள் சொல்ல முடியாத பல துயரங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

அவ்வப்போது இயற்கையும் எங்களை வஞ்சிக்கிறது. சம்பா பயிர் அறுவடைக்குத் தயாராக இருந்த சமயத்தில் பெய்த மழை எங்களை முடக்கிவிட்டது. இயற்கைச் சீற்றங்களால் பயிர்களும் நாங்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, அறுடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டு சேர்ப்பதற்குள் மழை பெய்துவிட்டால் விவசாயிகள் மனம் பதை பதைக்கத் தொடங்கிவிடும். நெல் ஈரப்பதமாக இருந்தால் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய மறுப்பார்கள். தற்போது பெய்த மழையிலும் இது போன்ற பிரச்னையை விவசாயிகள் சந்திக்க நேரிட்டது. இதற்கு ஒரு முடிவும், விடிவும் கிடையாதா?" என விவசாயிகள் புலம்பினர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் நெல் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான சோதனை ஓட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்திலேயே முதல் முறையாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் உலர்த்தும் இயந்திரம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இந்த முயற்சி வரும் காலத்தில் நெல் ஈரப்பதத்தால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையை விவசாயிகள் மத்தியில் தந்திருப்பதுடன் இதற்கு வித்திட்ட கலெக்டர் கோவிந்த ராவையும் விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.

திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசனிடம் பேசினோம். ``அறுவடை பணி தொடங்க இருக்கிற சூழலில் தொடர் மழை பெய்தது. இதனால் தண்ணீரில் கிடக்கும் பயிரைப் பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு கொடுக்கப்படுவது ஆறுதலாக இருந்தாலும், பயிர் வீணாவதை எந்த விவசாயியின் மனமும் ஏற்று கொள்ளது.
அதே போல் மழையில் நனைந்துவிட்டால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துவிடும். அதை நெல் கொள்முதல் நிலையங்களில் எடுக்க மாட்டார்கள். இது அவ்வப்போது விவசாயிகள் சந்தித்து வரும் பெரும் பிரச்னை. தற்போதும் இதே பிரச்னையில் பெரிய அளவில் சந்தித்து தவிக்கின்ற சூழல் ஏற்பட்டது.
இதற்கு ஒரு தீர்வே கிடையாதா என்ற தேடுதலில் இறங்கியபோது நெல்லின் ஈரப்பதம் உலர்த்தும் இயந்திரம் குறித்து அறிந்ததுடன் அதை கலெக்டர் கோவிந்த ராவ் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இனி ஒரு விவசாயிகூட பாதிக்கப் படக்கூடாது எனக் கூறிய கலெக்டர் உடனடியாக இயந்திரத்தை வர வைப்பதற்கான நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் பொன்னப்பூர் கிழக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் உலர்த்தும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அத்துடன் கலெக்டர் முன்னிலையில் அதன் செயல்பாடுகள் குறித்து சோதித்தும் பார்க்கப்பட்டது. ஈரப்பதம் கொண்ட பயிரை அறுவடை செய்து நெல்லை அந்த இயந்திரத்தில் கொட்டினால் அப்படியே ஈரப்பதத்தைக் குறைத்து விடுகிறது. இதைக் கண்ட விவசாயிகள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது.

நெல் ஈரப்பதம்தான் நாங்க சந்தித்து வரும் பெரும் பிரச்னை. இதனால் பொருளாதார இழப்பை சந்தித்து வரும் நிலையில் அதற்கான தீர்வுக்கு வழி காட்டிய உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என கலெக்டரின் கையைப் பற்றிக் கொண்டு விவசாயிகள் நெகிழ்ந்தனர். தற்போது குறிப்பிட்ட இயந்திரம் பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு இயந்திரத்தின் விலை ரூ.12 லட்சம். அரசு சார்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 50 சதவிகித மானியத்தில் விவசாயிகள் வாங்குவதற்கும் உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம், செய்து தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
இதில் முத்தாய்ப்பான விஷயம், இது போல் விவசாயத்துக்குப் பயன்படக்கூடிய நவீன இயந்திரங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை வேளாண் பொறியியல் துறை சார்பில் தஞ்சையிலேயே தயார் செய்வதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகள் படும் துயரத்தை உணர்ந்தவன் நான், இனி ஒரு விவசாயிகூட பாதிக்கப்படக் கூடாது அதுவே என் நோக்கம் என கலெக்டர் கூறினார்.

இது செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது, பிரச்னைகளைத் தீர்க்க அக்கறை காட்டுவது போன்றவை விவசாயிகளின் உணர்வை கலெக்டர் சரியாகப் புரிந்து செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது" என்றார்.
கலெக்டர் கோவிந்த ராவிடம் பேசினோம், ``நெல் மணிகள் மழையில் நனைந்து விடுவது விவசாயிகள் அதிகம் சந்தித்து வரும் பிரச்னைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இதனால் பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றனர். நெத்தி வியர்வையினை நிலத்தில் சிந்தி பாடுபட்டு விளைவித்த பயிர் கண் முன்னே வீணாவதை எந்த ஒரு விவசாயியினாலும் தாங்கிக் கொள்ள முடியாது.

குறிப்பாக அறுவடை செய்த நெல் மணிகள் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்படும். இதற்கான தீர்வாக `மொபைல் பேடி டிரையர்' எனச் சொல்லப்படுகிற நெல் ஈரப்பதம் உலர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்த எண்ணி வரவழைத்ததுடன் சோதனை முயற்சியும் செய்யப்பட்டது. இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 2 மெட்ரிக் டன். இரண்டு மணி நேரத்தில் 24 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை,18 சதவீத ஈரப்பதம் கொண்டதாக உலத்தி விடும் தன்மை கொண்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் எந்த வகையிலும் துயரை சந்திக்க கூடாது என்பதே அரசின் நோக்கம். இந்த புதிய முயற்சியின் மூலம் நெல் ஈரப்பதத்தால் விவசாயிகள் பாதிக்கபடுவது இனி தடுக்கப்படும்'' என தெரிவித்தார்.