Published:Updated:

கலங்கி நின்ற விவசாயி, கை கொடுத்த கலெக்டர்... மீண்டும் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையம்!

விவசாயி ராமலிங்கம்
விவசாயி ராமலிங்கம்

விவசாயி ராமலிங்கத்துக்கு நேர்ந்த இக்கட்டான நிலைக்குத் தீர்வு காண, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றோம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல் அறுவடை பணி கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக இப்பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் படிபடியாக மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் ஒரு சில பகுதிகளில் குறுவை நெல் அறுவடை தாமதம் ஆகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தங்களது நெல்லை விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்படி இக்கட்டில் தவித்து நின்ற விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், தனது துரிதமான நடவடிக்கை மூலம் கை கொடுத்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் முகவராகச் செயல்பட்டு, இங்குள்ள விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்கிறது. இந்த ஆண்டு குறுவை நெல் கொள்முதலுக்காகத் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 862 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாகச் செயல்பட்டு வந்தன. விவசாயிகள் தங்களது கடும் உழைப்பைச் செலுத்தி, பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே நெல்லை விளைவிக்கிறார்கள். ஆனால், இதை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கொள்முதல் நிலைய அலுவலர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லி தங்களை அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிப்பது ஆண்டுதோறும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் பூதராயநல்லூர் பகுதியில் தற்போது அறுவடைக்கு வந்துள்ள நெல்லை, விற்பனை செய்ய முடியாமல் ஒரு சில விவசாயிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்தார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம், ``நான் 15 ஏக்கர்ல குறுவை நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். வழக்கமா குறுவையில ஆடுதுறை 36 ரகம்தான் பயிர் பண்ணுவேன். தனியார் நிறுவனத்துல நான் வாங்கின விதைநெல்லுல ஏதோ தவறு நடந்திருக்கு. ரகத்தை மாத்தி கொடுத்துட்டாங்க. இதனால் நெல்மணிகள் முதிர்ச்சி அடைஞ்சி அறுவடைக்கு வர 20 நாள்கள் தாமதமாயிடுச்சு.

விவசாயி ராமலிங்கம்
விவசாயி ராமலிங்கம்

என்னோட நெல்லை, எங்க ஊர் கொள்முதல் நிலையத்துல வாங்க மறுக்குறாங்க. இந்த வருஷத்துக்கான குறுவை கொள்முதல் முடிச்சிட்டோம்னு இங்கவுள்ள ஊழியர்கள் சொல்றாங்க. எங்களோட வருவாய் கிராமத்துலயே உள்ள ஆற்காடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு என்னோட நெல்லை கொண்டு போகலாம்னு பார்த்தா, அவங்களும் முடியாதுனு சொல்றாங்க. உடனடியா விற்பனை செஞ்சாகணும். மழை வந்தால் கடுமையான பாதிப்பை சந்திச்சாகணும். நெல்லை காய வச்சாலுமே கூட, அதுக்குப் பிறகும்கூட நான் எப்படி இந்த நெல்லை விற்பனை செய்யப்போறேன்னு தெரியலை" என மிகுந்த மன உளைச்சலோடு பேசினார்.

விவசாயி ராமலிங்கத்துக்கு நேர்ந்த இக்கட்டான நிலைக்குத் தீர்வு காண, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றோம்.

``உடனடியா நடவடிக்கையா எடுக்குறேன். விவசாயியோட போன் நம்பரை எனக்கு அனுப்புங்க” என்றார். அடுத்த சில மணிநேரங்களில் நம்மைத் தொடர்புகொண்ட விவசாயி ராமலிங்கம், ``ரொம்ப நன்றிங்க. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உயரதிகாரி ஒருவர் இப்ப என்கிட்ட பேசினார். உங்க பகுதியில உள்ள கொள்முதல் நிலையத்தை மறுபடியும் திறந்து, உங்க நெல்லை கொள்முதல் செய்ய சொல்லிருக்கேன்னு சொன்னார்.

நெல்
நெல்
காத்திருக்கும் நெற்கதிர்கள், மூடப்பட்ட கொள்முதல் நிலையங்கள்... தவிப்பில் தஞ்சை விவசாயிகள்!

எங்களோட கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு உடனடியா நடவடிக்கை எடுத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் சாருக்கு நன்றி தெரிவிச்சிக்குறேன். எங்க மேல அக்கறைப்பட்டு, இந்த பிரச்னையை அவரோட கவனத்துக்கு உடனடியா கொண்டுபோன, பசுமை விகடனுக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறோம்’’ என நெகிழ்ச்சியோடு பேசினார்.

மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயி ராமலிங்கத்தின் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் நம்மை தொடர்புகொண்ட ராமலிங்கம், ``15 ஏக்கர்ல 400 மூட்டை நெல் அறுவடை செஞ்சிருக்கோம். இதை அரசு கொள்முதல் நிலையத்துல விற்பனை செஞ்சாதான் மூட்டைக்கு 1,150 ரூபாய் விலை கிடைக்கும். தனியார் வியாபாரிகள்ட்ட விற்பனை செஞ்சா, 950 ரூபாய்தான் விலை தருவாங்க. கிட்டத்தட்ட 80,000 ரூபாய் நஷ்டமாயிருக்கும். நல்லவேளை கலெக்டரோட நடவடிக்கையால நஷ்டத்துல இருந்து தப்பிச்சிட்டேன்” என உற்சாகமாகப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு