Published:Updated:

``நெல் மூட்டைகள் நனைந்தால் எனக்கும் வலிக்கும்!" - தஞ்சை மாவட்ட ஆட்சியர்

கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு ( ம.அரவிந்த் )

இன்னும் 10 தினங்களுக்குள் மீதமுள்ள குறுவை நெல் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடைப் பணிகளில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்தது.

நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

பல இடங்களில் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் போடுவதற்காக வைத்திருந்தனர். ஒவ்வோர் இடத்திலும் நெல்லைப் போடுவதற்குக் குறைந்தது 10 நாள்களுக்கு மேல் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூல்நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக, தஞ்சைப் பகுதியில் மழை பெய்தது.

கொள்முதல் செய்யப்படுவது தாமதமான காரணத்தால் கணபதி அக்ரஹாரம், கரந்தை பூக்குளம், மருங்குளம், வண்ணாரப் பேட்டை போன்ற ஊர்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. குறிப்பாக, கணபதி அக்ரஹாரத்தில் பல மூட்டைகள் மழையில் நனைந்ததுடன் நெல் மணிகள் மழை நீரில் மிதந்தன. பாடுபட்டு விளைவித்த பயிர் தண்ணீரில் மிதப்பதை என்ணி விவசாயிகள் மனம் நொந்தனர்.

இது குறித்து, `தண்ணீரில் மிதக்கும் நெல் மூட்டைகள், கண்ணீரில் மிதக்கும் விவசாயிகள்...மெத்தனமாக கையாளும் அரசு' என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதைத் தொடர்ந்து கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட குறிப்பிட்ட கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயி ஒருவர் கொள்முதல் நிலையம் பகுதியில் நெல் காய வைப்பதற்கே இடம் இல்லை எங்கும் புதர் மண்டிக் கிடக்கிறது என்றார். உடனடியாக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு புதர்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டன. விரைவாகக் கொள்முதல் செய்வதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இனி கவலைப்பட வேண்டாம் எனவும் கலெக்டர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

விவசாயிகளிடம் குறைகளைக் கேட்கும் கலெக்டர்
விவசாயிகளிடம் குறைகளைக் கேட்கும் கலெக்டர்

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ``இந்த முறை குறுவை மகசூல் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது. இது எனக்கு பெரும் சந்தோஷத்தைத் தருகிறது. அதே போல் கொள்முதல் பணியை விரைவாக முடித்தால் மட்டுமே முழு சந்தோஷமும் பலனும் கிடைக்கும் என கலெக்டரிடம் தெரிவித்ததுடன் சாலையிலும் மழையிலும் நெல் நனைந்ததைப் பார்த்து மனம் கலங்கினார்.

விவசாயிகள் விளைவித்த பொருளை எந்தச் சேதாராமும் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டியது அரசுடைய பொறுப்பு. விரைவாகக் கொள்முதல் செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இயற்கையும் நமக்கான ஒத்துழைப்பைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். கலெக்டர் ஆய்வுக்குப் பிறகு கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

கொள்முதல் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணி
கொள்முதல் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணி

கலெக்டர் கோவிந்தராவிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவையில் 25,000 முதல் 43,000 ஹெக்டேர் வரை மட்டுமே சாகுபடிக்கான டார்கெட் செய்யப்பட்டிருந்தது. ஆனால், 58,000 ஹெக்டேர் அளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். கிட்டத்தட்ட சுமார் 35 சதவிகிதம், டார்கெட்டைவிட அதிக சாகுபடி நடைபெற்றது.

கடந்த பருவத்தில் 1,60,000 விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. அவர்களது வங்கிக் கணக்கில் 14.57 கோடி வரவு வைக்கப்பட்டது. இது என்னுடைய சர்வீஸில் லைப் டைம் மெமரியாகப் பார்க்கிறேன். தற்போது மழையால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை பணிகளைத் தொடங்கினர்.

நெல் சேமிப்பு குடோன்கள் நிரம்பியிருந்ததால் கொள்முதல் செய்வதில் தேக்கம் ஏற்பட்டன. இதையடுத்து ரயில், லாரி மற்றும் அரவை முகவர்கள் மூலமாக சேமிப்புக் கிடங்கில் இருந்த மூட்டைகள் மூவ் செய்யப்பட்டன. மேலும், தற்போது விரைந்து கொள்முதல் செய்ய ஏதுவாக நெல் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து கூடுதலாக 25 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

தினமும் 10,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 தினங்களுக்குள் மீதமுள்ள குறுவை நெல் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும். இதுவரை 80 சதவிகித அளவில் கொள்முதல் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 59,000 விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ. 540 கோடி வர வைக்கப்பட்டுள்ளது.

நெல் நனையும்போது எனக்கே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த வலி விவசாயிகளுக்கு அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுகிறோம். நெல் நனையக் கூடாது விவசாயிகள் விளைவித்த நெல்லைப் பாதுகாப்பாகக் கொள்முதல் செய்வது அரசின் கடமை அதைத் தற்போது விரைவுபடுத்திச் செய்து வருகிறோம்“ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு