Published:Updated:

நெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..!'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ

விவசாயி கல்யாணசுந்தரம்
விவசாயி கல்யாணசுந்தரம்

``நான் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. லோடு மேன் பேசியது என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு. தொடர்ந்து நான்கு வருஷமா இதுபோன்ற இன்னல்களை சந்திச்சுக்கிட்டு வர்றேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேராவூரணி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் மற்றும் லோடு மேன் ஆகியோர் மூட்டை ஒன்றுக்கு 70 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும், எதிர்த்து கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதற்கு தமிழக அரசு உடனடித் தீர்வு காணவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல் கொள்முதல் - Representational Image
நெல் கொள்முதல் - Representational Image
நெல் கொள்முதல் லஞ்சம்: அடுத்தடுத்து பிடிபடும் அதிகாரிகள்; துணிச்சலோடு அம்பலப்படுத்தும் விவசாயிகள்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வாத்தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (47). விவசாயியான இவர் தனது வயலில் விளைந்த நெல்லை அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போட்டுள்ளார். அப்போது அதில் பணிபுரியும் பிசி மற்றும் லோடு மேன் அண்ணாத்துரை ஆகியோர் மூட்டை ஒன்றுக்கு 70 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கிக் கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கல்யாணசுந்தரம், ``என்ன மூட்டைக்கு ரூ.70 கேக்குறீங்க அநியாயமாக இருக்கே" என்று கேட்டுள்ளார். அப்போது லோடு மேன் அண்ணாத்துரை, ``உன்னையெல்லாம் யாருடா இங்க நெல்லை அறுத்தாந்து கொட்டச் சொன்னது" என்று கடும் சொற்களைப் பயன்படுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த கல்யாணசுந்தரம் , ``என்னால் பத்து விவசாயி நல்லா வாழப்போறாங்கன்னா நான் தற்கொலை செய்துகொள்வதற்கும் தயாராக இருக்கேன். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும்" என்று தான் அடைந்த வேதனையை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். விவசாயி கல்யாணசுந்தரத்தின் இந்த வீடியோ வைரலாகப் பரவி, அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்
நேரடி நெல் கொள்முதல் நிலையம்

இது குறித்து கல்யாணசுந்தரத்திடம் பேசினோம். ``நான் எம்.பி.ஏ படித்த பட்டதாரி. ஆனாலும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற உறுதியோடு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய பத்து ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தேன். அதை அறுவடை செய்து பூக்கொல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போட்டேன். 40 கிலோ கொண்ட ஒரு சிப்பத்துக்கு 70 ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இது, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பி.சி-க்கும், எங்களுக்கும்' என்று லோடு மேன் அண்ணாத்துரை தெரிவித்தார். `வழக்கத்தைவிட அதிகமா இருக்கே'னு நான் கேட்டேன். அதற்கு, `உங்கள யாருடா இங்க அறுத்தாந்து கொட்டச் சொன்னது'னு அண்ணாதுரை கேவலமாகப் பேசினார். கிட்டத்தட்ட ஒரு அடியாளைப் போல் நடந்து கொண்டார். அவர்கள் சொன்னது போலவே ஒரு சிப்பத்துக்கு ரூ.70 என 138 சிப்பத்துக்கு ரூ.4,830 கொடுத்தேன்.

பணம் கூட எனக்கு பெருசா தெரியலை. ஆனால், விவசாயிகளுக்காகப் பேசிய என்னையும் கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்க முடியலை. அப்பவே செத்துடலாமுனு முடிவு செஞ்சேன். ஆனா, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என எண்ணி இதை வெளியில் கொண்டு வந்துள்ளேன். நான் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு; லோடு மேன் பேசியது என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு. தொடர்ந்து நான்கு வருஷமா இதுபோன்ற இன்னல்களை சந்திச்சுக்கிட்டு வர்றேன். நெல் எடுப்பதில் சாதி பாகுபாடும் பார்க்குறாங்க.

 நெல் போட்டதற்கான பில்
நெல் போட்டதற்கான பில்
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்; வீடியோ மூலம் அம்பலப்படுத்திய விவசாயி; ஊழியர் சஸ்பெண்ட்!

தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையத்துல நடக்குற அத்துமீறல்கள் மற்றும் லஞ்சம் பெறுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். பத்து விவசாயி நல்லா இருக்க, நான் தற்கொலை செஞ்சுக்கவும் தயாரா இருக்கேன். அரசு இதில் நல்ல முடிவை எடுக்கணும்'' எனக் கலங்கிய குரலில் தெரிவித்தார்.

மேலும் சிலர், ``நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு லஞ்சம் பெறுவது மட்டுமல்லாமல் எடை போன்றவற்றிலும் முறைகேடு நடக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் விவசாயிகள் ரூ.324 கோடி லஞ்சமாகக் கொடுத்துள்ளனர். நீதிமன்றம், `விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை பிச்சைக்கு சமம்' எனத் தெரிவித்துள்ளது. ஆனாலும், இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கல்யாண சுந்தரத்துக்கு நடந்தது போல் தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசுதான் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு