Published:Updated:

``பாடுபட்டு விளைவிச்ச நெல், எங்க கண்முன்னாலேயே சேதமடையுதே!’’ - பதறும் விவசாயிகள்

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் (File Pic)
மழையில் நனைந்த நெல் மூட்டைகள் (File Pic)

``இதுக்கிடையில தி.மு.க, அ.தி.மு.க-வைச் சேர்ந்த லோடுமேன்களுக்குள்ளார ஏற்பட்ட மோதலால், இடையில் ஒரு நாள் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இவங்களோட அரசியல் மோதலுக்கு விவசாயிகள் பலியாக வேண்டியதாயிருக்கு."

நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால், கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்கும் நெல், மழையில் நனைந்து சேதமடையக்கூடிய அவலம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் மற்றும் ஏரகரம் பகுதியில் முன்பட்ட குறுவையில் சாகுபடி செய்த நெல், மழையில் நனைந்து வீணாவதைக் கண்டு இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்கள்.

நெல் கொள்முதல் (File Pic)
நெல் கொள்முதல் (File Pic)
நெல் கொள்முதல் விலை: `தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒண்ணு; இப்போ செய்றது ஒண்ணு!' - விவசாயிகள் ஏமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள மூப்பக்கோயில் மற்றும் ஏரகரம் ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கிராமங்களிலும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல நூறு ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அறுவடைக்கு நெல்லை விற்பனைச் செய்ய, மூப்பக்கோயில் மற்றும் ஏரகரம் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால், பல விவசாயிகளின் நெல் இங்கு குவித்து வைக்கப்பட்டு காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய இப்பகுதி விவசாயிகள், ``கடந்த சில நாள்களாகக் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்ல இரவு நேரங்கள்ல மழை பெய்து வருகிறது. இதனால், இந்தக் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளும், குவித்து வைக்கப்பட்டுள்ள பல டன் நெல்மணிகளும் மழையில் நனைந்து சேதமாகிக் கிடக்கு. இதைப் பார்க்குறப்ப எங்களுக்கு மனசு வேதனையாக இருக்கு. இதனால் ஏற்படும் வேதனையை விவசாயிகளால்தான் உணர முடியும்.

பல மாதங்கள் பாடுபட்டு உழைச்சு உற்பத்தி செஞ்ச நெல்லை, பார்த்துப் பார்த்து பத்திரப்படுத்தி, நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வர்றோம். ஆனால், இங்க எங்க கண் முன்னாடியே மழையில் நனைஞ்சு சேதமடையுறதைப் பார்க்குறப்ப எங்க மனசு பதறுது. கொள்முதல் நிலைய ஊழியர்களை மட்டும் குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியத்தாலும் முறைகேடுகளாலும்தான் இந்த அவலம் நடக்குது. இதுக்கிடையில தி.மு.க, அ.தி.மு.க-வைச் சேர்ந்த லோடுமேன்களுக்குள்ளார ஏற்பட்ட மோதலால், இடையில் ஒரு நாள் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இவங்களோட அரசியல் மோதலுக்கு விவசாயிகள் பலியாக வேண்டியதாயிருக்கு. விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை காலதாமதம் இல்லாமல் விரைந்து கொள்முதல் செஞ்சா இந்த பிரச்னையே ஏற்படாது.

மழையில் நனையும் நெல்
மழையில் நனையும் நெல்
மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; குறைந்த நெல் கொள்முதல் நிலையங்களால் கவலையில் விவசாயிகள்!

இங்கவுள்ள கொள்முதல் நிலையங்கள்ல, நெல்லை பாதுகாக்க தார்ப்பாய்களும் கொடுக்க மாட்டேங்குறாங்க. விரைவாகக் கொள்முதல் செய்யவும், மழையில் நனையாமல் நெல்லை பாதுகாக்க தார்பாய்கள் வழங்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்’’ என வலியுறுத்துகிறார்கள்.

இதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன் நம்மிடம் பேசும்போது, ``மூப்பகோயில் நெல் கொள்முதல் நிலையத்துல, நெல் உலர்த்தக்கூடிய களம், ரொம்ப பள்ளமான பகுதியில் இருக்கு. மழை பேஞ்சு நெல் நனைஞ்சதோடு மட்டுமல்லாமல், கலத்துக்குள்ளாரயும் மழைநீர் புகுந்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கு இதுக்கு மாற்று ஏற்பாடு செய்யணும். ஞாயிற்றுக்கிழமைகள்லயும் நெல் கொள்முதல் செய்யப்பட்டால், காலதாமதம் ஏற்படுவதை ஓரளவுக்கு சமாளிக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை மண்டல மேலாளர் உமாமகேஷ்வரியிடம் பேசியபோது, ``உடனடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரணை செய்ய சொல்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு