Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: சித்திரை முதல் நாள்... விவசாயம் செழிக்க நல்லேர் பூட்டி வணங்கிய விவசாயிகள்!

நல்லேர் பூட்டி வழிபட்ட விவசாயிகள்
நல்லேர் பூட்டி வழிபட்ட விவசாயிகள்

விவசாயிகள் சித்திரை முதல் நாளையே விவசாயத்துக்கு உரிய புத்தாண்டாகக் கடைப்பிடித்து வருகின்றனர். சித்திரை மாதத்திலிருந்துதான் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான சரியான பருவம் தொடங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் சித்திரை முதல் நாளையே விவசாயத்துக்கு உரிய புத்தாண்டாகக் கடைப்பிடித்து வருகின்றனர். சித்திரை மாதத்திலிருந்துதான் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான சரியான பருவம் தொடங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாய பணிகள் சிறப்பாக முடிந்து நல்ல விளைச்சலை கொடுத்தமைக்கு நன்றி சொல்லும் விதமாக தை முதல் நாளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. அதே போல் புதிய ஆண்டில் புதிய பருவத்தை வரவேற்கும் விதமாக சித்திரை முதல் நாளில் நல்லேர் பூட்டி வணங்கி கொண்டாடப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

புதிதாகத் தொடங்க உள்ள விவசாய பணிகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட இயற்கை தொடர்பிலான எந்த பிரச்னையும் வராமல் சிறப்பாக நடைபெறவும், விளைச்சல் அமோகமாக இருக்கவும், விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மட்டுமன்றி மண்ணும் மக்களும் நலம் பெற வேண்டும் என்பதற்காக ஊர் பொது இடம் அல்லது வயல் பகுதிகளில் வைத்து உழவு மாடுகளில் ஏர் கட்டி, வாழை இலையில் பழங்கள், விதை பொருள்கள், இனிப்பு கலந்த அரிசி ஆகியவற்றைப் படைத்து வணங்குவார்கள்.

பின்னர் பூட்டப்பட்ட நல்லேர் மூலம் விவசாயிகளின் வயலில் ஏர் ஓட்டுவார்கள். இதையடுத்து விதைப் பயிர்கள் ஊன்றுவார்கள். பின்னர் வரும் நாள்களில் விவசாய பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள். இன்று செய்யும் இந்த பூஜையின் மூலம் இந்த வருடம் முழுவதுமே விவசாய பணிகள் சிறப்பாக நடைபெறும் என்பது விவசாயிகளின் பெரும் நம்பிக்கை.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே உள்ள ஆச்சாம்பட்டி கிராமத்தில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் குடும்பத்தோடு திரண்டு நல்லேர் பூட்டி வணங்கியது அனைவரையும் கவர்ந்தது. ஆச்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தரப்பில் பேசினோம். ``சித்திரை முதல் நாளை விவசாயிகளான நாங்கள் விவசாயத்துக்காக முதல் ஆண்டின் தொடக்க நாளாகவே கருதுகிறோம்.

குழந்தைகளுடன் விவசாயிகள்
குழந்தைகளுடன் விவசாயிகள்

இன்றைய நாளில் ஏர் கலப்பையில் உழவு மாட்டைப் பூட்டி பழங்கள், விதை நெல், நவதானியங்கள் ஆகியவற்றைப் படைத்து வணங்குவர். குறிப்பாக, ஏர் கலப்பைக்கும் உழவு மாடுகளுக்கும், விளைவிக்கும் மண்ணுக்கும், விளை நிலத்துக்கும் மரியாதை செய்யும் விதமாகவே வணங்குவது வழக்கம்.

எங்களுடைய முன்னோர்கள் காலம் தொட்டே நல்லேர் பூட்டும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் இந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் ஏர் கலப்பையின் பயன்பாடு, உழவு மாடுகள் தட்டுப்பாடு, விவசாயத்துக்கும் இயந்திரங்களை பயன்படுத்துதல் போன்றவை அதிகரித்துப் போனதால் நல்லேர் பூட்டி வழிபடும் நிகழ்வு குறைந்துபோனது.

பாரம்பர்யமான இந்த நிகழ்வை ஒரு சில ஊர்களில் இப்போதும் கடைப்பிடித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் நல்லேர் பூட்டி வணங்கும் நிகழ்வு இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. விவசாயமே பிரதானமான பகுதி என்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எங்க கிராமமான ஆச்சாம்பட்டியில் பல தலைமுறைகளாக நல்லேர் பூட்டும் நிகழ்வு இருந்து வந்துள்ளது.

விதை நெல் தூவும் விவசாயி
விதை நெல் தூவும் விவசாயி

அதை இன்றைக்கும் நாங்கள் தொடர்ந்து வருகிறோம். சித்திரை முதல் நாளான இன்று எங்க ஊரில் உள்ள ஏரியில் விவசாயிகள் தங்கள் ஏர் கலப்பை, உழவு மாடுகள், விதை பொருள்கள் மற்றும் உரம் ஆகியவற்றுடன் வந்துவிடுவார்கள். பின்னர், ஏர் கலப்பையில் உழவு மாட்டைப் பூட்டி வாழை இலை வைத்து விதை நெல், நவதானியம், பழங்கள், தேங்காய், வெல்லப் பாகில் அரிசி, எல், பொட்டுக்கடலை ஆகியவற்றைக் கலந்து படைத்து விளை நிலம், சூரியன் மற்றும் விவசாய பொருள்களுக்கு தீபாரதணை காட்டி வணங்குவோம்.

பின்னர், ஏர் பூட்டிய உழவு மாட்டைக்கொண்டு ஏர் ஓட்டினோம். இதையடுத்து விதை நெல் மற்றும் விதை தானியங்கள் ஏர் ஓட்டிய பகுதியில் தெளிப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் நடவு தொடங்கி அறுவடை செய்கிற வரை எந்த பிரச்னையும் வராது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது, இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த பிரச்னையும் வராது. விவசாயம் செழித்து, விவசாயிகள் வாழ்வில் வளம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

சித்திரை விழா
சித்திரை விழா

இதை விவசாயிகளான நாங்கள் ஒரே இடத்தில் திரண்டு பல வருடங்களாகக் கொண்டாடி வருகிறோம். பல தலைமுறைகளாக நாங்கள் இதைப் பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு இணையாகக் கொண்டாடி வருகிறோம். இதை மறந்துபோன பல கிராமத்தின் பாரம்பர்யத்தின் மீது நாங்கள் கொண்ட பற்றை எண்ணி நெகிழ்ந்து பாராட்டுவார்கள்.

மண் வளம் பெருகி விவசாயம் செழிக்கும்போது விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பது எங்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான புதிய ஆண்டின் முதல் நாளாகக் கருதப்படும் இந்த நாளை வரவேற்கும் விதமாக நல்லேர் பூட்டி வணங்குவதைத் தொடர்கிறோம். இனியும் தொடர்வோம்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு