Published:Updated:

`கருணாநிதி வந்தார்; ஸ்டாலினும் வருவாரா?' - தூர்வாரும் பணிகளைப் பார்வையிட விவசாயிகள் கோரிக்கை

தூர்வாருதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
தூர்வாருதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ( ம.அரவிந்த் )

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் ஜனவரி மாதம் பெய்த மழையில் வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது.அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ஆறுகள் மற்றும் பாசன வாய்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 100 சதவிகிதம் துல்லியமாக நடைபெற வேண்டும் என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தூர் வாரும் பணிகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறு, பாசன வாய்க்கால்கள் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.62 கோடி நிதி ஒதுக்கி தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மட்டும் 20 கோடியே 50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏ வகைப்பாடு பாசன வாய்க்கால்களில் மட்டும் 111 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 888 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரப்படவுள்ளது. மொத்தம் 185 பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்காக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் முதன்மைச் செயலரும், தஞ்சாவூர் மாவட்ட தூர் வாரும் பணியின் சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான பிரதீப் யாதவ் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ``தூர் வாரும் பணிகளை விவசாயிகளாகிய நீங்களும் கண்காணிப்பு செய்யலாம்" என பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

இது குறித்து பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரசேனன் என்பவரிடம் பேசினோம். `` நிதி நெருக்கடிக்கு மத்தியில் தூர் வாரும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தூர்வாருதல் மற்றும் மேட்டூர் அணை திறப்பது தொடர்பாகத் தஞ்சாவூரில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்த அடுத்த நாளே நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியானது.

தூர்வாருதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
தூர்வாருதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் ஜனவரி மாதம் பெய்த மழையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். தூர்வாரும் பணி சரியாகச் செய்யாததே இதற்குக் காரணம். அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் தூர் வாரும் பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்.

தூர்வாரும் திட்டம் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பல முறை வந்து தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்திருக்கிறார், பணிகளும் முறையாக நடைபெற்றன. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் விவசாய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தூர் வாரும் பணிக்கு நிதி ஒதுக்கியிருப்பது விவசாயிகளான எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீரசேனன்
வீரசேனன்

அதே நேரத்தில் இந்தப் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்பவர்கள் முறையாகச் செய்கிறார்களா என அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். விவசாயிகளும் கண்காணிக்கலாம் என தூர் வாரும் பணியின் சிறப்புக் கண்காணிப்பு அலுவலரான பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகள் 100 சதவிகிதம் சரியாக நடைபெற வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தால் சிறப்பாக நடைபெறும் எனக் கருதுகிறோம். மேட்டூரில் தண்ணீர் திறப்பதற்குள், தூர் வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் இதை விவசாயிகளான எங்களுடைய கோரிக்கையாக வைக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு