Published:Updated:

`எல்லா வருஷமும் ஆறு உடையுது; ஆனாலும் அரசு எதுவும் செய்யுறதில்ல!' - குமுறும் தஞ்சை விவசாயிகள்

``பொதுவாக வடிகால் ஆறுகளோட கரைகள், ஆரம்பத்துல குறுகியும் போகப் போக விரிவடைஞ்சிக்கிட்டே இருக்குறதுதான் வழக்கம். அதுமாதிரி இருந்தால்தான் கரைகள் பலமா இருக்கும். மத்த ஆறுகளோட தண்ணீரும் இதுல வந்து கலக்கும்போது, கரைகள்ல உடைப்பு ஏற்படாமல் இருக்கும்."

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஓடக்கூடிய கோணகடுங்கால் வடிகால் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் இப்பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் வெள்ளநீரில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்த ஆற்றில் உடைப்பு ஏற்படுவதாகவும் ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண எந்த ஒரு முயற்சியுமே மேற்கொள்ளவில்லை என இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

வயல்களில் வெள்ளநீர்
வயல்களில் வெள்ளநீர்
விவசாய கண்டுபிடிப்புகளுக்கு ₹22,000 கோடி செலவு செய்யும் இந்தியா; ஆனாலும் பலன் இல்லை; ஏன்?

தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களான மேலத்திருப்பந்துருத்தி, கீழத்திருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவளாம்பொழில் உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களின் வழியாகக் கோணகடுங்கால் வடிகால் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால், இங்குள்ள கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி இப்பகுதி விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து, கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், இப்பிரச்னைக்கு ஒரு நிரந்த தீர்வு காண பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசி விவசாயி சுகுமாறன், ``இந்த வருஷம் குழிமாத்தூர் கிராமத்துல கோணகடுங்கால் வடிகால் ஆற்றின் கரையில உடைப்பு ஏற்பட்டு, நடுக்காவேரி, திருவளாம்பொழில், அந்தலி, ஐம்பது மேல் நகரம் உட்பட இன்னும் பல கிராமங்கள்ல வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருக்கு. இந்த வருஷம் மட்டுமல்ல, கடந்த 10-15 வருஷமாகவே வடக்கு பருவமழை நேரத்துல, இந்த வடிகால் ஆற்றின் கரைகள்ல உடைப்பெடுக்குது.

சுகுமாறன்
சுகுமாறன்

பொதுவாக வடிகால் ஆறுகளோட கரைகள், ஆரம்பத்துல குறுகியும் போகப் போக விரிவடைஞ்சிக்கிட்டே இருக்குறதுதான் வழக்கம். அதுமாதிரி இருந்தால்தான் கரைகள் பலமா இருக்கும். மத்த ஆறுகளோட தண்ணீரும் இதுல வந்து கலக்கும்போது, கரைகள்ல உடைப்பு ஏற்படாமல் இருக்கும். கோணகடுங்கால் ஆற்றுல காவிரி, வெண்ணாறு, குடமுருருட்டி என மூணு ஆறுகளும் கலக்குது. கரைகள் நல்லா அகலமா, பலமாக இருந்தால்தான் உடைப்பு ஏற்படாமல் தாக்குப்புடிக்க முடியும். ஆனால் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, வயல்களாக மாறிடுச்சு. இதனால் கரையோடு அகலம் குறைஞ்சுக்கிட்டே இருக்கு. இதனால்தான் ஒவ்வொரு வருஷமும் வடக்கிழக்கு பருவமழை நேரத்துல, இந்த ஆற்றில் அதிகமாகத் தண்ணீர் போகும்போது வெவ்வேறு பகுதிகள்ல உடைப்பு ஏற்பட்டுக்கிட்டே இருக்கு. பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையான ஆய்வுகள் நடத்தி, ஆக்கிரமிப்புகள்ல இருந்து கரையை மீட்டு, இதோட இயல்பான அகலத்துக்கு இதை பலப்படுத்தணும். இந்த கரையில் தார் சாலை அமைக்கணும்.

யானைகளின் மாற்று வழித்தடமும் பறிபோகும் அபாயம்; குன்னூரில் என்ன நடக்கிறது?

இதனால் கரை பலப்படுறதோடு, ஆக்கிரமிக்கப்படாமலும் பாதுகாப்பாக இருக்கும். இதை உடனடியாகச் செஞ்சாதான், வெள்ள பாதிப்பு ஏற்படாமல், விவசாயிகள் நிம்மதி இருக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு