Published:Updated:

`எங்க மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது!' - கலெக்டருக்காகக் கண் கலங்கும் தஞ்சை விவசாயிகள்

கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்
கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்

``தமிழக அரசு, கோவிந்தராவ் சாரை, தஞ்சாவூர்ல இருந்து இடமாற்றம் செஞ்சது, தஞ்சை விவசாயிகளுக்கு பேரிழப்பு. இதை எங்க மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது’’ என இப்பகுதி விவசாயிகள் மனம் உடைந்து பேசுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தஞ்சை மக்களை குறிப்பாக, விவசாயிகளை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. ``விவசாயிகள்ட்ட ரொம்ப அன்பா இருப்பார். எங்களுக்கு எந்த ஒரு பிரச்னைனாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசு, கோவிந்தராவ் சாரை, தஞ்சாவூர்ல இருந்து இடமாற்றம் செஞ்சது, தஞ்சை விவசாயிகளுக்கு பேரிழப்பு. இதை எங்க மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது’’ என இப்பகுதி விவசாயிகள் மனம் உடைந்து பேசுகிறார்கள்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இடமாற்றம் என ஊடகங்களில் தகவல் வெளியானதும், தஞ்சை மக்கள் குறிப்பாக, விவசாயிகள், ஒருவருக்கொருவர், மிகுந்த பரபரப்புடனும் அதிச்சியோடும் போன் செய்து, ``இதை எதிர்பார்க்கவே இல்லை. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. விவசாயிகளுக்கு ரொம்பவே உதவியாக இருந்தார். கொரோனா ஊரடங்கு மட்டும் இல்லைனா, ஏதாவது போராட்டம் நடத்தியாவது, இவரை தஞ்சாவூர்லயே நீடிக்க வைக்க முயற்சி செஞ்சிருக்கலாம்’’ என ஆதங்கத்தோடு புலம்பித் தீர்த்திருக்கிறார்கள். மறுநாள் மிகுந்த ஆற்றாமையோடு, ஏராளமான விவசாயிகள் கோவிந்தராவை நேரில் சென்று சந்தித்திருக்கிறார்கள். அந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள், ``கலெக்டர் கோவிந்தராவ் எங்களுக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கார். இங்கயிருந்து, சென்னைக்குப் போகப்போறார்... கடைசியா ஒரு தடவை நேர்ல பார்த்து நன்றி சொல்லிட்டு வருவோம்னு அவரை சந்திக்கப் போனாம். அவரை பார்த்ததும், நாங்க எல்லாருமே கண்கலங்கிட்டோம். கோவிந்தராவ் சாரு கண்ணும் கலங்கிடுச்சு’’ என நெகிழ்ச்சியோடு பேசினார்கள்.

விவசாயிகளிடம் கலெக்டர் கோவிந்தராவ் எந்தளவுக்கு ஆத்மார்த்தமாக இருந்தார் என்பது குறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``தமிழ்நாட்டுல வேற எந்த ஒரு கலெக்டரும் இப்படி வாட்ஸ்அப் குரூப் வச்சிருக்க மாட்டாங்க. கலெக்டர் கோவிந்தராவ் தன்னோட வாட்ஸ்அப் நம்பரோடு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்களோடு, இங்கவுள்ள விவசாயிகளையும் இணைச்சு, தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் குழுங்கற பேர்ல ஒரு வாட்ஸ்அப் குரூப் வச்சிருந்தார். விவசாயிகள் தங்களோட குறைகளையும் கோரிக்கைகளையும் அதுல பதிவு செஞ்சா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்ட்ட உடனடியாக, விளக்கம் கேட்டு, நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இது மூலமாக விவசாயிகளோட நிறைய பிரச்னைகளைத் தீர்த்திருக்கார்’’ எனத் தெரிவித்தார்.

சுகுமாறன்
சுகுமாறன்

திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், ``பத்து வருசத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல கலெக்டராக இருந்த எம்.எஸ்.சண்முகம், விவசாயிகள் நலன்ல ரொம்ப அக்கறையோடு நடந்துக்கிட்டார். அதுக்குப் பிறகு இங்க வந்த கலெக்டர்ங்க எல்லாம் விவசாயிகள்ட்ட இருந்து கொஞ்சம் விலகியே இருந்தாங்க. அதனால் விவசாயிகளுக்கு நிறைய பின்னடைவு. கோவிந்தராவ் இங்க கலெக்டரா வந்த பிறகு, விவசாயிகளுக்கு நல்ல மன நிறைவு.

`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்

ரொம்ப இணக்கமா இருந்தார். சில வாரங்களுக்கு முன்னாடி, எங்க பகுதியில சூறைக்காற்று வீசினதுல, குருங்களூர், கருப்பூர், வளப்பக்குடி, திருவளாம்பொழில், திருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்கள்ல வாழையும் வெற்றிலைக் கொடிக்காலும் கீழே சாஞக்சு இழப்பு ஏற்பட்டுச்சு. பொதுவாக, மாவட்டம் முழுக்க பாதிப்பு ஏற்பட்டாலே நிவாரணம் வாங்குறது ரொம்ப கஷ்டம், ஒரு சில கிராமங்கள்ல மட்டும் பாதிப்புனா, நிவாரணம் பத்தி நினைச்சுக்கூட பார்க்க முடியாது. வாழை, வெற்றிலை கொடிக்கால் பாதிப்பை, வாட்ஸ்அப்லதான் கலெக்டர் கோவிந்தராவுக்கு தெரியப்படுத்தினோம். உடனடியா தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு பண்ணி, உடனடியாக நிவாரணம் வழங்கினார். ஊரடங்கு தீவிரமாக இருந்தப்ப, எங்க பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருத்தர், அரியலூருக்கு வெற்றிலை விற்பனை செய்ய போனார். அங்கயிருந்த போலீஸ் அனுமதிக்கலை. கலெக்டர் கோவிந்தாராவுக்கு தெரியப்படுத்தினோம். உடனடியாக அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வச்சு விவசாயிக்கு உதவி செஞ்சார்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜீவக்குமார், ``பூதலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சில முக்கியமான கோரிக்கைகளுக்காக, கலெக்டர் கோவிந்தராவை சந்திக்க விரும்பினாங்க. இரவு 7 மணிக்கு கலெக்டர் ஆபீஸ் போனோம். கொரோனா தொடர்பாக, மருத்துவர்களோடு கலெக்டர் கோவிந்தராவ் மீட்டிங்க்ல இருந்தார். நாங்க வந்திருக்குற தகவலை, அவரோட உதவியாளர், அவருக்கு தெரியப்படுத்தினார். இது முக்கியமான மீட்டிங்... கலெக்டர் காத்திருக்கச் சொன்னதாக பி.ஏ வந்து சொன்னார். நாங்களும் காத்திருந்தோம். அங்கயிருந்த ஊழியர்கள், எங்க பத்து பேருக்கும் இரவு உணவு கொடுத்து எங்களை நல்லா உபசரிச்சாங்க. அது கலெக்டர் கோவிந்தராவோட உபசரிப்பு. இரவு ஒன்பதரை மணிக்கு டாக்டர்ஸ் மீட்டிங் முடிஞ்சது. நாங்க கலெக்டரை சந்திக்கப் போனோம். எழுந்திரிச்சு நின்னு எங்களை வரவேற்று, காத்திருக்க வச்சத்துக்கு பல முறை வருத்தம் தெரிவிச்சார். எங்க பகுதி விவசாயிகள் சொன்ன பிரச்னைகளைக் கேட்டு, அந்தக் களைப்பான நேரத்துலயும், அதிகாரிகளுக்கு ஃபோன் பண்ணி உடனடியா நடவடிக்கை எடுத்தார்’’ என்றார்.

கோவிந்தராவ்  ஐ.ஏ.எஸ்
கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்
கன்றுகளை விற்று நிவாரண நிதி, விகடன் தந்த வெளிச்சம், கிடைத்த உதவி; நெகிழும் மாற்றுத்திறனாளி!

தஞ்சை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ``விவசாயிகள் எந்த நேரத்துல போன் பண்ணினாலும், `என்ன நல்லா இருக்கீங்களா?' என அன்பாக விசாரிப்பார். பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க, கலெக்டர் கோவிந்தராவோட துரிதமான நடவடிக்கைகள் முதன்மையான காரணம். தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில ஒரு மாட்டு மேல கார் மோதிடுச்சு, அதால நடக்க முடியலை, அதோட உரிமையாளர், ராத்திரி 11 மணிக்கு கலெடர் கோவிந்தராவுக்கு தெரியப்படுத்தினார். அடுத்த கொஞ்ச நேரத்துல கால்நடை ஆம்புலன்ஸ் அங்க வந்துடுச்சு. இவரை இடமாற்றம் செஞ்சதை, விவசாயிகளோட மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

ஒரு சில அதிகாரிகள்தாம் தங்கள் செயல்பாடுகளால் மக்களின் மனதில் நிலைத்து இடம்பிடிக்கிறார்கள். அந்த மக்களுடனான அவர்களின் பிரிவு அவர்களின் நெஞ்சை இப்படி கனக்கச் செய்துவிடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு