Published:Updated:

காத்திருக்கும் நெற்கதிர்கள், மூடப்பட்ட கொள்முதல் நிலையங்கள்... தவிப்பில் தஞ்சை விவசாயிகள்!

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

நேரடி நெல் கொள்முதல் திறக்கப்படாததால், விவசாயிகள் தங்கள் நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல், அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனால் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். ஒரு சில பகுதிகளில் முன்பட்ட குறுவையில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள், கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் இப்பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகம் காவிரி நீரை முறையாக உரிய நேரத்தில் கொடுக்காததாலும் பருவ மழை ஒத்துழைக்காததாலும் பல முறை காலதாமதமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

குறிப்பாக 2011-ம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ச்சியாக 8 ஆண்டுகள், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்க முடியாமல் போனது. இந்நிலையில்தான் இந்த ஆண்டு, மே மாதம் இறுதியில் இருந்தே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் மேல் இருந்ததால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயிகளின் எதிர்பார்த்தது போலவே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, குறுவை நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்றன.

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

இவற்றில் பெரும் பகுதி அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ஆழ்துளை கிணற்று பாசனத்தின் மூலம் பயிர் செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெற்பயிர்கள், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் நேரடி நெல் கொள்முதல் திறக்கப்படாததால், இப்பகுதி விவசாயிகள் தங்கள் நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். குறிப்பாக தஞ்சை மாவட்டம் அம்மையகரம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டது. இதனால் இப்பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவை சந்தித்து வலியுறுத்தினார்கள்.

அவ்வபோது மழை பேய்து வருகிறது. உடனடியாக அறுவடை செய்யாவிட்டால், முற்றிய கதிர்களின் கணம் தாங்காமல் பயிர் கீழே சாய்ந்துவிடும் எனவும் இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் எனவும் கவலை தெரிவிக்கிறார்கள். அறுவடைக்கு தயாராக உள்ள கிராமங்கள் அனைத்திலும் உடனடியாக கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், ``தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெல் கொள்முதலுக்காக, அம்மையகரம் உள்பட 9 இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்” என தெரிவித்தார். தற்போது டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கிடப்பது குறித்து ஆதங்கத்தோடு பேசிய திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமார், ``ஆண்டு தோறும் செப்டம்பர் 25-ம் தேதி வரை கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இருக்கும். அதுக்கு பிறகு ஆண்டு கணக்கு முடிக்குறதுக்காக, ஒரு வாரம் மட்டும் மூடிட்டு, மறுபடியும் திறந்துடுவாங்க. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்துலயே பெரும்பாலான கொள்முதல் நிலையங்களை மூடிட்டாங்க. இதனால் பல இடங்கள்ல விவசாயிகள் சிரமப்படுறாங்க.” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு