Published:Updated:

தண்ணீரில் மிதக்கும் நெல்மூட்டைகள், கண்ணீரில் விவசாயிகள்... மெத்தனமாகக் கையாளும் அரசு!

நெல் கொள்முதல் நிலையத்தில்
நெல் கொள்முதல் நிலையத்தில் ( ம.அரவிந்த் )

``விவசாயி ஒருவர் பாடுபட்டு அறுவடை செய்த பயிர் யாருக்கும் பயன் இல்லாமல் தண்ணீரில் மிதக்குதே என இதைப் பார்த்துகூட அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மனம் இரங்கவில்லையா'' எனக் கலங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு மெத்தனமாகச் செயல்படுவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மழையில் நனைந்த நெல்
மழையில் நனைந்த நெல்

டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 80 சதவிகித அறுவடைப் பணிகள் முடிந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கான பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன.

இதனால் கொள்முதல் நிலையங்களின் முன்பும், அப்பகுதியில் உள்ள சாலைகளிலும் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் 15 நாள்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏற்கெனவே விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

விவசாயிகள்
விவசாயிகள்

இது தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம் எனத் தனது கண்டனத்தை அறிவித்திருந்தது. இதுபோன்ற காரணங்களால் விளைந்தும் பயன் இல்லை என்கிற கையறு நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதில் பல நெல் கொள்முதல் நிலையங்களில் போடுவதற்காக விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்தன. நெல் மணிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. விவசாயி ஒருவர், "பாடுபட்டு அறுவடை செய்த பயிர் யாருக்கும் பயன் இல்லாமல் தண்ணீரில் மிதக்குதே என இதைப் பார்த்துக்கூட அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மனம் இரங்கவில்லையா" எனக் கலங்கினார்.

இது குறித்து திருவையாறு அருகே உள்ள கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசனிடம் பேசினோம், ''தஞ்சாவூரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் போடுவதற்காக விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மழையில் மிதக்கும் நெல்
மழையில் மிதக்கும் நெல்

குறிப்பாக தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை, கரந்தை பூக்குளம், கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல கொள்முதல் நிலையங்களில் இந்த அவலம் அரங்கேறியது. வயலிலிருந்து கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகளைப் போடுவதற்காக 15 நாள்கள் வரை விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கொள்முதல் செய்யப்படுவதில் காட்டும் சுணக்கமே இதற்கு முக்கியக் காரணம். மழையில் நனைந்ததால் நெல் மணிகள் முளைத்து வருகின்றன. ஆனால், ஏனோ அரசு கொள்முதல் செய்யும் பணிகளை விரைவுபடுத்தாமல் மெத்தனமாகச் செயல்படுகிறது. நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் இருக்கா, குளத்தில் இருக்கா எனச் சந்தேகம் ஏற்படும் அளவுக்கு மழை நீரில் மூட்டைகள் கிடந்தன. எவ்வளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது, மகசூல் எப்படி இருக்கும் என எந்தக் கணக்கீட்டையும் முறையாகச் செய்யாததே இதற்குக் காரணம்.

சுமார் 50,000 மூட்டைகள் வரை மழையில் நனைந்துவிட்டன. இதை மூடி மறைக்கவே அரசு பார்க்கிறது. மழையில் நனையாமல் நெல் மூட்டைகளைக் காக்க தார்பாய் தேடி விவசாயிகள் அழுவதைப் பார்க்கவே முடியவில்லை. புள்ளை மாதிரி வளர்த்து ஆளாக்கி அறுவடை செய்த நெல் மணிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை விவசாயிகளால் தாங்க முடியவில்லை.

கவலையில் விவசாயிகள்
கவலையில் விவசாயிகள்

கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு சேர்த்த பிறகு, நெல்லைப் பாதுககாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. படுதாய் உள்ளிட்டவற்றை அரசு தர வேண்டும் அதையும் செய்வதில்லை. மழை தொடரும் எனக் கூறப்படுகிறது. கொள்முதல் செய்யப்படுவதை விரைவு படுத்தினால் மட்டுமே இதிலிருந்து விவசாயிகளைக் காக்கலாம். அரசு என்ன செய்யப்போகிறது'' எனத் தெரியவில்லை எனக் கலக்கத்துடன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு