Published:Updated:

‘அறுவடை, விற்பனை... எதுவும் செய்ய முடியலை!’ - வேதனையில் விவசாயிகள்... வழிகாட்டும் வேளாண்துறை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாடுகளுக்குத் தீவனமாகும் பூக்கள்
மாடுகளுக்குத் தீவனமாகும் பூக்கள்

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அலறிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களும் ஊரடங்கு உத்தரவால் கஷ்டங்களைச் சந்தித்துவருகிறார்கள்.

அதிலும் விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது. விவசாயம் என்பது பயிர் செய்வது மட்டுமல்ல... ஆடு, மாடு, கோழி எனப் பல்லுயிர் சார்ந்தது. தொழில்துறையினர் ஊரடங்கு காரணமாக நிறுவனங்களை மூடிவிட்டு, வீட்டில் இருக்கலாம். ஆனால், விவசாயியால் அப்படி இருக்க முடியாது. ஆடு, மாடுகளுக்குத் தீவனம் கொடுக்க வேண்டும்; பாசனம் செய்ய வேண்டும்; பயிர்களுக்கான பராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டும்.

விதைப்பு, களை எடுப்பு, பாசனம், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பணிகள் சுணங்கிக்கிடக்கின்றன. குறிப்பாக, பல மாவட்டங்களில் சொர்ணவாரி பட்ட நெல் அறுவடைக் காலம். நெல் அறுவடை இயந்திரம், டிராக்டர், விவசாயத் தொழிலாளர்கள் என எதுவும் கிடைக்காமல் அறுவடை பல இடங்களில் முடங்கியிருக்கிறது. இதனால் விளைச்சல் வீணாகிக்கொண்டிருப்பதாகக் கவலைப்படுகிறார்கள் விவசாயிகள். பல இடங்களில் விளைச்சலைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வழியில்லை. வாகனங்கள் கிடைக்காமல் திணறிவருகிறார்கள் விவசாயிகள்.

செடியிலேயே மலர்ந்து காணப்படும் சம்பங்கிப் பூக்கள்
செடியிலேயே மலர்ந்து காணப்படும் சம்பங்கிப் பூக்கள்

இந்தச் சிக்கலில் அதிகம் பாதிக்கப்பட்டது மலர் விவசாயிகள்தான். தினசரி வருமானம் என்பதால், மலர் விவசாயம் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த நிலையில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடியிருப்பதாலும், விழாக்கள் எதுவும் நடக்காததாலும் மலர்களை வாங்க ஆட்களில்லை. அதனால் அறுவடை செய்யாமல் செடியிலேயே அழுகிக்கொண்டிருக்கின்றன மலர்கள். மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மல்லிகை, பெரம்பலூர், ஓசூர் பகுதிகளில் செவ்வந்தி, சம்பங்கி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பூக்கள் என மலர்ச் சாகுபடி செய்யும் அனைத்து பகுதிகளிலும் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள் விவசாயிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பங்கி சாகுபடி செய்யப்படுகிறது. வத்தலக்குண்டு அருகே நாடகோட்டை கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி விவசாயம் நடக்கிறது. விற்பனைக்கு வழியில்லாததால், பூக்கள் செடியிலேயே கருகிக்கிடக்கின்றன. பலர் பூக்களைப் பறித்து, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்திவருகிறார்கள்.

‘அறுவடை, விற்பனை... எதுவும் செய்ய முடியலை!’ - வேதனையில் விவசாயிகள்... வழிகாட்டும் வேளாண்துறை!

தேனி மாவட்டத்தில் அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காமல் பந்தலில் அழுகிக்கொண்டிருக்கிறது திராட்சை. அதையும் தாண்டி அறுவடை செய்துகொண்டு சென்றால், மிக மிகக் குறைவான விலைக்குக் கேட்கிறார்கள். அதனால் வெறுத்துப்போன விவசாயிகள் திராட்சையை அறுவடை செய்யாமல் பந்தலிலேயே அழுகவிட்டிருக்கிறார்கள். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் 6,000 ஏக்கரில் திராட்சைச் சாகுபடி நடந்துவருகிறது. திராட்சை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாகப் பேசும் கம்பத்தைச் சேர்ந்த திராட்சை விவசாயி மகேந்திரன், “இது ரொம்ப மோசமான காலகட்டம். இதுவரைக்கும் இப்படியானதில்லை. பழத்தை வெட்ட முடியலை. கொடியிலேயே அழுகிட்டு இருக்கு. இப்படியே இருந்தா அடுத்த மகசூலுக்கு நிலத்தைத் தயார் செய்யறதே பெரிய வேலையா இருக்கும்’’ என்கிறார்.

வாழை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் வாழை விவசாயிகள் கண்ணீர்விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாகப் பேசிய அன்னூரைச் சேர்ந்த மூர்த்தி, ‘‘வாழை விவசாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அறுவடை செய்ய ஆளில்லை. அறுவடை செய்தாலும் சந்தைக்குக் கொண்டு போக வழியில்லை. இந்தப் பகுதியில் தினமும் 10,000 தார்கள் வரை வீணாகின்றன’’ என்கிறார்.

மாடுகளுக்குத் தீவனமாகும் பூக்கள்
மாடுகளுக்குத் தீவனமாகும் பூக்கள்

இதேபோல், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் எலுமிச்சை, கொய்யா, பலா விவசாயிகள், காய்கறி விவசாயிகள் கடும் இன்னலைச் சந்தித்து வருகிறார்கள். இது தொடர்பாகப் பேசிய தமிழக விவசாயச் சங்க நிர்வாகிகள் சிலர், ‘‘விவசாயிகளால் விளைபொருள்களை அறுவடை செய்ய முடியவில்லை. அறுவடை செய்த பொருள்களை விற்பனைக்குக் கொண்டு வர முடியவில்லை. `விவசாயத்துக்கு விதிவிலக்கு’ என அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், அது நடை முறையில் இல்லை.

``மோசமான காலகட்டம். இதுவரைக்கும் இப்படியானதில்லை. பழத்தை வெட்ட முடியலை.’’ ``இந்தப் பகுதியில் தினமும் 10,000 தார்கள் வரை வீணாகின்றன.’’

நோய்க்கு பயந்து வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. இதுவரை தோட்டத்துக்கு வந்து வாங்கிச் சென்ற வியாபாரிகள் வருவதில்லை. இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் சோகத்தில் இருக்கிறார்கள் விவசாயிகள். தோட்டத் தொழிலாளர்கள் பணி முதல் கால்நடைப் பராமரிப்பு, பயிர் பாதுகாப்பு எனப் பல்வேறு வேலைகளையும் விவசாயிகளே செய்ய வேண்டியிருக்கிறது.

டிராக்டரில் அழிக்கப்பட்டு வரும் செண்டுமல்லி மலர்த் தோட்டம்
டிராக்டரில் அழிக்கப்பட்டு வரும் செண்டுமல்லி மலர்த் தோட்டம்

பல தடைகளைத் தாண்டி, விவசாயிகளே விற்பனைக்குக் கொண்டு சென்றாலும், வழக்கமான சந்தைகள் பல இடங்களில் மூடப்பட்டுக் கிடக்கின்றன. மொத்த வியாபாரிகளைத் தேடி, வந்த விலைக்கு விற்றுவிட்டு வரக்கூடிய அவலம் தொடர்கிறது. புயல், வெள்ளம் போலவே இதுவும் மாபெரும் பேரிடர். இதிலிருந்து மீண்டுவர விவசாயிகளுக்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். இதனால் மாபெரும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித்தவிக்கிறார்கள். எனவே, இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்’’ என அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார்கள்.இது தொடர்பாக வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம்.

“விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விளைபொருள்களை விற்பனை செய்ய அவசரகாலத் தொடர்புக்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளைபொருள்களை உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். காய்கறிகள், பழங்களைக் குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ஏப்ரல் 30 வரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காய்கறிகள், பழங்களைச் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்குக் கடன் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூர்த்தி
மூர்த்தி

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகளையும், மொத்த வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து விற்பனைக்கு ஏற்பாடு செய்துவருகிறார்கள். இதில் சிக்கல் இருந்தால், அந்தந்த மாவட்ட வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டால் ஏற்பாடு செய்து தருவார்கள். இதிலும் பிரச்னை இருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றால் ஆவனச் செய்வார்கள். விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம்’’ என்றார் அக்கறையுடன்.

அவசரகாலத் தொடர்பு எண்கள்

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், அந்தந்த மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்புகொள்ளலாம்.

மாநில அளவில் பின்வரும் தொலைபேசி எண்களை 044 22253884, 22253885, 22253496, 95000 91904 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புக் கொள்ளலாம். இந்த எண்களிலுள்ள அலுவலர்கள் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களுக்குண்டான வியாபாரிகளைத் தொடர்புகொள்ளுதல், சரக்கு போக்குவரத்துக்கான உரிய அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றுத் தருதல், குளிர்சாதன வசதியுள்ள கிடங்குகளுக்கு வழிகாட்டுதல் போன்ற சேவைகளுக்கு உதவிபுரிவார்கள்.

‘அறுவடை, விற்பனை... எதுவும் செய்ய முடியலை!’ - வேதனையில் விவசாயிகள்... வழிகாட்டும் வேளாண்துறை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு